தமிழ்ப்பள்ளிகள் நிலைபெற செய்ய வேண்டியது இணைப்பா? இடமாற்றமா?

கவின்மலர்

பகுதி -2

 • பள்ளிகளை இணைக்கும் திட்டத்தின் பாதிப்புகள் 

தொடர்ந்து அரசாங்கத்தின் அடுத்த திட்டமாக பரிசீலனையில் இருக்கும் பள்ளிகளை இணைக்கும் திட்டங்கள் பற்றி பார்ப்போம். இது தொடக்கத்தில் சொன்னது போல் நோயாளியைச் சிறப்பு கண்காணிப்புப் பிரிவிற்கும்  திரும்பவே முடியாத இடத்திற்கும் அனுப்புவதைப் போன்ற வேறுபாட்டைக் கொண்டதாகும்.முதல் திட்டத்தில் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 30க்கும் அதிகமாக அதிகரித்தால் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பலாம் ( குறைந்தது தொடர்ந்து மூன்றாண்டுகள்) அப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.) அதாவது பன்மை வகுப்புகள் மாறி தனி வகுப்புகள் தனித்து செயல்படலாம்.ஆனால் இத்தகைய சூழல்களைக் கொண்டுள்ள பெரும்பாலான பள்ளிகள் அவற்றுக்கான வாய்ப்புகளை இழந்தவைகளாகவே இருக்கின்றன.

இவ்வாறிருக்கும் நிலையில் முதல் கண்டத்தில் தப்பி அடுத்தக் கண்டத்தைக் கண்டால் அங்குதான் நமது தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி விடுமோ? அல்லது கேள்விக் குறியாகி இயற்கை மரணத்தை நோக்கி சென்று விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

பள்ளிகளை இணைக்கும் திட்டத்தில் 30 மாணவர்களுக்கும் குறைவாகவுள்ள 127 தமிழ்ப்பள்ளிகளே முதலில் பாதிக்கப்படும்.அத்தகைய பாதிப்புகளில் முதன்மையானவை

 • பள்ளிகளின் எண்ணிக்கை குறையும்.இன்று 527 பள்ளிகளாக இருக்கும் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்த மாணவர்களைக் கொண்ட 127 தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை சரிபாதியாக குறைந்து 63 அல்லது 64 ஆக ஆகும்.இதன் வழி நாட்டில் தற்போது செயல்படும் 527 தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை உடனடியாக 463ஆக குறையும்

.

 • 527 தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களின் எண்ணிக்கை 463 ஆக குறையும். 64 தலைமையாசிரியர் பதவிகள் காணாமல் போகும். நமக்கு இருக்கும் அரசாங்க பணிகளின் தலைமைப் பதவிகளும் கூடவே காணாமல் போகும் என்ற கவலைக்கிடமான சூழ்நிலை உண்டாகும்
 • மாணவர்களின் அடிப்படைக் கல்வி உரிமை கேள்விக்குரியாகும்.
 • தங்கள் குழந்தை எந்தப் பள்ளியில் பயில வேண்டும் என்ற பெற்றோரின் உரிமை பறிக்கப்படும்.
 • பள்ளிகள் எண்ணிக்கை உடனடியாகச் சரியும்.
 • எது முதன்மைப் பள்ளி எது இணையும் பள்ளி என்பதில் சிக்கல் வரும்.
 • பள்ளிகள் இணைந்தாலும் வகுப்புகளின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது.

(எ.கா: 10 மாணவர் பள்ளியும் இன்னொரு 10 மாணவர் பள்ளியும் இணைக்கப்பட்டால் 20 மாணவர்கள் கொண்ட பன்மை வகுப்புப் பள்ளியாகவே அது செயல்படும். (பிறகு சிறிது காலம் கழித்து இந்தப் பள்ளியை இன்னொரு பள்ளியோடு இணைக்கக்கூடும்.இப்படி இணைப்புகள் தொடர் கதையாகலாம்)

 • இணைக்கப்படும் ஒவ்வொரு பள்ளியிலும் 7 ஆசிரியர்கள் பதவி காணாமல் போகும்.
 • ஒரு பன்மை வகுப்புப் பள்ளியில் 7ஆசிரியர்கள் வீதம் பதவிகள் இல்லாமலே போகும்.
 • ஆசிரியர் பயிற்சிக்கு பயிற்சி ஆசிரியர்களை சேர்க்கும் எண்ணிக்கையும் உடனடியாகக் குறைந்து போகும் அல்லது ஆசிரியர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று காரணம் காட்டி பயிற்சி ஆசிரியர் சேர்ப்பது நிறுத்தப்படும்.
 • பள்ளிகளை இணைத்தால் ஏதேனும் ஒரு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், வாரியக்குழு, சீரமைப்பு நிதி ஒதுக்கீடு என அனைத்தும் இல்லாமல் போகும்.
 • 1ஆங்கிலேயர்கள் 1912இல் அறிமுகப்படுத்திய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 10 மாணவர்கள் இருக்கும் தோட்டத்தில் ஒரு பள்ளியை உருவாக்கினார்கள். அப்போது தொடங்கி மலேசிய இந்தியர்களின் கல்வி உரிமைக்கு இருந்துவந்த பாதுகாப்பு இப்போது கேள்விக்குரியாகி உள்ளது.
 • 200 ஆண்டு கால மலேசியத் தமிழக் கல்வியை

அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்குத் தொடரச் செய்யும் பெரும்பணி

இத்தகைய சூழ்நிலையில் 200 ஆண்டுகளைக் கடந்துவிட்ட மலேசியத் தமிழ்க் கல்வி,தமிழ்ப்பள்ளி வரலாற்றை அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்குத் தொடரச் செய்யும் பெரும்பணி இப்போது மலேசிய இந்திய சமுதாயத்தின் கைகளில் இருக்கிறது.இந்திய சமுதாயம் என்று சொன்ன பிறகு இதில் தலைவர் தொண்டர் என்ற பேதமின்றி இனத்தில் பிறந்த எல்லோருக்கும் உரிமையும் கடமையும் உள்ளது என்பதை உணர வேண்டும்.

வகுப்புகளின் இணைப்பைத் தவிர்க்க மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது ஒரு இடைக்கால நடவடிக்கையாக இருக்கலாம்.அதற்கு வாய்ப்புகள் உள்ள பள்ளிகள் அவற்றை செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டலாம். அதற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களின் ஒத்துழைப்படன் பெற்றோர் ஆசிரியர் சங்கம்,பள்ளி மேலாளர் வாரியம் போன்ற அமைப்புகள் நேரடியாக ஈடுபடலாம்.அதற்கு பெரிய முயற்சியோ வெளியார் தலையீடோ ஒத்துழைப்போ தேவையில்லை.

 

 • இடமாற்றம் பெரும்பணியானாலும் அதுவே காலத்தால் செய்யத்தக்க அரும்பணி

ஆனால் பள்ளிகளின் இணைப்பைத் தடுக்கவும் இடமாற்றவும் செய்யவுத் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மிகப் பெரிது.நீண்ட முயற்சிகளை உள்ளடக்கியது. இடமாற்றம் பெரும்பணியானாலும் அதுவே காலத்தால் செய்யத்தக்க அரும்பணி.அதுவே தமிழ்க்கல்வியும் தமிழ்ப்பள்ளியும் இந்நாட்டில் நிலைத்திருக்க செய்ய வேண்டிய ஒரே பணி.

இதற்கு ஏற்கனவே இடமாற்றம் கண்ட பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே சான்றுகளாகும்.முயன்றால் முடியாததல்ல.அதுவும் திட்டமிட்டு முயன்றால் பத்தாண்டுகள் அல்ல ஐந்தாண்டுகளிலேயே ஒரு பள்ளியை இடமாற்றம் செய்ய முடியும்.அவ்வாறு நாம் செய்யாமல் போவோமேயானால் நடப்பிலுள்ள வகுப்புகளின் இணைப்பு பள்ளிகளின் இணைப்பாகி பள்ளிகளின் இணைப்பு இயற்கை மரணத்திற்கு வழிகோலாகலாம்.வந்த பின் தவிர்ப்பதைவிட வருமுன் காப்பதே மேல்.

 • தமிழ்ப்பள்ளிகளின் இடமாற்றத்திற்கு செய்ய வேண்டிய முதல் பணி

அதற்கு செய்ய வேண்டிய முதல் பணி டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் காலத்தில் அமைக்கப்பட்டதைப் போல் பிரதமர் துறையின் கீழ் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டப்பிரிவு அமைக்கப்பட வேண்டும்.ஏற்கனவே தமிழ்ப்பள்ளிகளுக்காக 2012 ஆம் ஆண்டு நஜிப்பின் தலைமையில் முனைவர் டத்தோஸ்ரீ என்.எஸ்.இராஜேந்திரனை ஒருங்கிணைப்பாளராக கொண்டு அமைக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டப்பிரிவு 2012 மே மாதம் தொடங்கி 2013 மார்ச்சு மாதம் வரை மேற்கொண்ட விரிவான ஆய்வின் பயனாக தமிழ்ப்பள்ளிகளின் உருமாற்றத்திற்காக மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டவரைவு தயாரிக்கப்பட்டது.மலேசிய தமிழ்ப்பள்ளி வரலாற்றில் அரசாங்கத்தின் செலவில் பிரதமரின் தலைமையில் தமிழ்ப்பள்ளிகளின் முழு தேவைகளும் துல்லிதமாக  ஆய்வு செய்து கட்டமைக்கப்பட்டப் பரிந்துரைகள்  பிரதமரிடம் வழங்கப்பட்டது.

அவற்றுக்குத் தீர்வுக் காணும் வகையில் மலேசிய வரலாற்றில் முதன் முறையாக மற்றொரு சாதனை  நஜிப் காலத்தில் படைக்கப்பட்டது. கல்வி அமைச்சின் துணையமைச்சராக ஒரு தமிழர் நியமிக்கப்பட்டார்.டத்தோ ப.கமலநாதன் கல்வித் துணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.அந்நியமனமும் மேற்கண்ட திட்டப்பரிந்துரைகளை செயல்படுத்த ஆண்டுக்கு சிறப்பு மானியத்துடன் பத்து கோடியும் ஒதுக்கீடு செய்ததன் காரணமாக தமிழ்ப்பள்ளிகளின் தோற்றத்தில் பெரும் மாற்றங்களும் புதுப் பொழிவும் ஏற்பட்டது.

 • தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டப்பிரிவு மீண்டும் உயிரூட்டப்பட வேண்டும்

எனவே மேற்கண்ட திட்டங்கள் தொடரவும் தமிழ்ப்பள்ளிகளின் தொடர் தேவைகளை நிறைவேற்றவும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டப்பிரிவு பிரதமர் தலைமையில் மீண்டும் உயிரூட்டப்பட வேண்டும்.கடந்த காலங்களைப் போல் மேம்பாட்டுத் தேவைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் குறைந்த மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளை இந்தியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கு இடமாற்றுவதற்கான கள ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கைத் தாள்களை தயாரித்து தர வேண்டும். பிரதமர் தலைமையில் இக்குழுவை அமைப்பதே இத்திட்டங்கள் எத்தகைய இடரும் இன்றி செயல்பட வாய்ப்பை ஏற்படுத்தும்.அவ்வாறில்லாமல் இந்திய அமைப்புகளின் தலைவர்கள் ஆர்வத்தின் காரணமாக தனி ஒரு குழுவை அமைத்து செயல்படுவார்களேயானால் அது அங்கிகாரக் காரணங்களால் தொடங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாமல் போகலாம்.

 • இட மாற்றம் செய்ய வேண்டிய பள்ளிகள் தொடர்பான உடனடி நடவடிக்கைகள் தேவை

அவ்வாறு அமைக்கப்படும் குழு நாடு முழுவதிலும் 30 மாணவர்களுக்கும் குறைவாகவுள்ள பள்ளிகளை அடையாளம் கண்டு அவற்றை இடமாற்றம் செய்வது பற்றி வட்டார குழுக்களின் வழி முயற்சிகளையும் ஆய்வுகளையும் தரவுகளையும் திரட்ட வேண்டும். அவ்வாறு திரட்டப்படும் ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டு இபிஆர்டி (EPRD )எனப்படும் கல்வி அமைச்சின் கல்விக் கொள்கை திட்டமிடல் ஆய்வுப் பிரிவின் எழுத்து வழி அனுமதியைப் பெற வேண்டும். குறிப்பாக பத்து மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை இடமாற்றம் செய்வதற்கு போர் கால நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

 • பிரதமர் தலைமையில் மேம்பாட்டுத் திட்டப்பிரிவு அமைக்கப்படுவதால் அரசு பணிகள் எளிதாகும்

பிரதமரின் நேரடிப் பார்வையின் கீழ் பிரதமர் துறையின் வழியாகவே தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டப்பிரிவு அமைக்கப்படுமானால் அரசாங்க இலாக்காக்களின் வழியாகவும் அமைச்சுகளின் வழியாகவும் தேவைப்படும் தரவுகளைப் பெறுவதிலும் ஒத்துழைப்புக்களைப் பெறுவதிலும் எத்தகைய இடரும் இருக்காது.எனவே அத்தகைய திட்டப் பிரிவை உருவாக்கவும் அது முறையாக செயல்படவும்

 • அரசியல் / சமூக தலைவர்கள் கருத்து வேறுபாடுகள் பாராமல் அனைத்துத் தரப்பும் ஒன்றுபட்டு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டப்பிரிவு உடனடியாக அமைக்க வலியுறுத்த வேண்டும்.
 • அரசின் அங்கிகாரம் பெற்ற தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டப்பிரிவு அமைக்கபடுவதன் வழி அப்பள்ளிகளை இடமாற்றம் செய்வதற்கு கல்வி அமைச்சின் (திட்ட மேம்பாட்டுப் பிரிவு EPRD) எழுத்துப்பூர்வமாக இசைவையும் பள்ளிக்கான புதிய இடத்திற்கு (இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதிகள்) அடையாளம் காண. கணக்காய்வுத் துறை (Jabatan Perangkaan) குடிமக்கள் தரவுகளையும் தடையின்றி பெற முடியும்.
 • புதிய இடத்தில் பள்ளியை இடம் மாற்றி அமைக்க EPRD தக்க நடவடிக்கைகளை எடுக்க இயலும். இதற்கு கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடு இல்லை என்றாலும் பிரதமர்துறையின் நிதி ஒதுக்கீட்டை பெற முடியும்.
 • அரசுப் பள்ளிகளைக் EPRD நேரடியாக கட்ட இயலும். அரசு உதவுபெறும் பள்ளிகளை பள்ளி மேலாளர் வாரியம் மூலமாகக் கட்ட வேண்டும். பள்ளி மேலாளர் வாரிய செயல்பாடுகளை EPRD கண்காணிக்கும் புதிய விதிமுறைகளை உருவாக்க முடியும்.
 • மலேசிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு கல்வி அமைச்சர் புதிய பள்ளிகளை உருவாக்க முடியும். அதேபோல் இடம் மாற்றம் செய்யப்பட வேண்டிய பள்ளிகளுக்கான அனைத்துத் தேவைகளையும் கல்வி அமைச்சர் முன்னெடுக்க வேண்டும்.இயலாத நிலையில் பிரதமர் துறை அதனை செய்யும்.இவற்றுக்கு உதவியாகக் கல்வி அமைச்சின் பிரிவுகள், மாநிலக் கல்வி இலாகா, மாவட்டக் கல்வி அலுவலகம் ஆகியவை செயல்பட முடியும்.
 • தமிழ்ப்பள்ளிகளை இடம் மாற்றம் செய்யும் பணிகளை கண்காணிக்கவும் கல்வி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கவும் அரசியல் சார்பற்ற சிறப்புக் குழுவாக தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டப்பிரிவு முழுமையாக செயல்பட முடியும்.
 • தாய்மொழிப் பள்ளிகள் தொடர்பான அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றி கல்வி அமைச்சு தமிழ்ப்பள்ளிகளின் நீண்டகால வாழ்வுக்காக தக்க உதவிகளைச் செய்வது குறித்து வலியுறுத்த முடியும்.கல்வி அமைச்சர் நினைத்தால் இவற்றை செயல்படுத்த முடியும் என்பதால் அதனை வலியுறுத்த வேண்டும்.
 • அரசியல் –சமுக தலைவர்களின் சமுதாய கடப்பாடு

                  

 • அரசியல் / சமுதாயத் தலைவர்கள் மூடுவிழா காணப்படும் நிலையில் உள்ள பள்ளிகளை அடையாளம் கண்டு அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
 • அதற்கு ஒவ்வொரு வட்டாரத்திலுமுள்ள சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியை நாட வேண்டும்.அவர்களே தங்கள் தொகுதியிலுள்ள பள்ளிகளின் தேவைகள் இடமாற்றங்கள் பற்றி சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்பவும் விரைந்து தீர்வு காணவும் முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.
 • தற்போது நாம் பெற்றிருக்கும் 10க்கும் மேற்பட்ட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் 20க்கும் மேற்பட்ட இந்திய சட்டமன்ற உறுப்பினர்களையும் அந்தந்த வட்டாரங்களைச் சேர்ந்த தலைவர்களும் பொதுமக்களும் முன் மாதிரியாக பயன்படுத்த முனைப்புக் காட்ட வேண்டும்.
 • தொகுதிகளிலுள்ள அனைத்து இந்தியர்கள் சார்ந்த கட்சிகளும் இந்தியத் தலைவர்களும் ஒருமித்த கருத்துடன் இன பேதம் பாராமல் அனைத்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்த வேண்டும்.
 • அரசும் / கல்வி அமைச்சும் சம்பந்தப்பட்ட பள்ளிகளை இடமாற்றம் செய்வதற்கு அரசியல் / சமுதாயத் தலைவர்களின் உதவியோடு தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
 • பள்ளிகளை இடமாற்றம் செய்வதற்கு சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டு செயல்படுவது மட்டுமல்லாது தாய்மொழிப் பள்ளிகளின் நலன்கருதி தாராளமயம் மற்றும் நடுநிலைப் போக்கை அரசாங்கம் கடைபிடிக்க வேண்டும். (எ.கா: பிரதமர் நஜிப் துன் ரசாக் ஆட்சிக் காலம்)
 • தமிழ்ப்பள்ளிகளை இடம் மாற்றம் செய்வதில் குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளின் பெற்றோர்,பெற்றோர் ஆசிரியர் சங்கம்,பள்ளி மேலாளர் வாரியம் போன்ற அமைப்புகள் வெளிப்படையான விட்டுக்கொடுக்கும் போக்கை கடைபிடிக்க வேண்டும்.
 • மூடுவிழா கண்டாலும் தவறில்லை.முன்னோர்கள் பயின்ற பள்ளியை இடமாற்றம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று அடம் பிடிக்கக் கூடாது. ( மகன் செத்தாலும் பரவாயில்லை.மருமகள் தாலி அறுத்தால் போதும் என்ற நிலையாகிவிடும்.) இடமாற்றம் கண்டாலும் தங்கள் வட்டார பள்ளி தொடர்ந்து செயல்பட வழிவிட வேண்டும்.
 • மூடப்படும் நிலையில் உள்ள பள்ளிகளின் பெற்றோர்கள் பள்ளியை இடம் மாற்றுவதற்கு 100% ஆதரவும் எழுத்துப் பூர்வ இசைவும் வழங்க வேண்டும்.
 • தமிழ்ப்பள்ளிகள் வெறும் கல்விக் கூடங்கள் அல்ல

அவை சமூக நடுவங்களாகும்

 • தமிழ்ப்பள்ளிகளைக் காப்பது இந்தியர்கள் அனைவரின் கைகளிலும் உள்ளது
 • சமுதாயத் தலைவர்கள் சமுதாயம் தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வியின் தேவை அறிந்து அவற்றைப் பாதுகாத்துக் கொள்கின்ற / பள்ளியை இடமாற்றம் செய்ய முயற்சிக்க வேண்டும்
 • மிக முகாமையாக அரசாங்கம் ஒவ்வொரு குடிமகனின் கல்வி உரிமையைப் பாதுகாத்திட வேண்டும். மலாய் மொழிக்கு எவ்வளவு முக்கியம் தரப்படுகிறதோ அதே போல் பிற மொழிகளுக்கும் அப்பள்ளிகளைக் காப்பதற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ( குறைந்த பட்சம் இடமாவது ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதில் அரசியல் தலைவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
 • அரசாங்கம், சமுதாயம்,  பெற்றோர், சமுதாயத் தலைவர்களே முகாமையான பங்களிப்பை வழங்க வேண்டும்.
 • தமிழ்ப்பள்ளிகள் என்பது வெறும் கல்விக் கூடங்கள் அல்ல. மாறாக சமூக நடுவங்கள், பண்பாட்டின் உயிர்ப்பு. ஆகவே, இத்தகைய முகாமையான பணியைச் செய்துகொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளியின் தேவையை கட்டாயம் சமுதாயம், சமுதாயத் தலைவர்கள், பெற்றோர்கள் உணர வேண்டும். உண்மையாக உணர்ந்தால் மட்டுமே அவற்றைப் பாதுகாத்துக் கொள்கின்ற எண்ணம் ஏற்படும்.
 • அவனவன் மொழி இனத்தைப் பிறன் எவன் காப்பான் வந்தே

எனவே தமிழ்ப்பள்ளிகளை காப்பதும் மீட்பதும் ஒவ்வொரு தமிழனின் கடமையேயன்றி அடுத்தவர் வருவார் காப்பார் என்பது எப்போதும் நடக்காத பணியாகும்.உலக நாடுகளின் துரித வளர்ச்சிகளுக்கு ஈடு கொடுத்து நாடு கண்டு வரும் வளர்ச்சியில் நமது தமிழ்ப்பள்ளிகளை தற்காத்துக்கொள்வதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.நமது பசிக்கு நாம்தான் உண்ண வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here