தமிழ்ப்பள்ளிகளை காக்கும் முயற்சி- மக்கள் ஓசையின் பங்கு வரவேற்கத்தக்கது

கவின்மலர்

பாரிட் புந்தார்,ஜன.07-
தமிழ்ப்பள்ளிகளைக் காப்பதும் மீட்பதும் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.அம்முயற்சிகளுக்கு மக்கள் ஓசை துணை நிற்பது வரவேற்கத்தக்க  நல்லத் திட்டமாகும் என்று தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் வாரியத் தலைவர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்களும் தமிழ் ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.

2021 ஆம் கல்வி ஆண்டு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் தமிழ்ப்பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நம் அனைவரின் பங்களிப்பும், இருப்பது அவசியம்.ஏற்கனவே தமிழ்ப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் பதிந்துக்கொண்டவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மன மாறாமல் இருப்பதையும்,இன்னும் தங்கள் பிள்ளைகளை பதிந்து கொள்ளாமல் கடைசி நேரத்தில் சேர்க்கவுள்ள பெற்றோரின் ஒரே தேர்வாக தமிழ்ப்பள்ளிகள் இருப்பதையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்று பாகான் செராய் தமிழ்ப்பள்ளியின்
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சு.மோகனராஜ் கருத்துரைத்தார்.
2018 ஆம் ஆண்டு குறைந்த மாணவர்களைக் கொண்ட வகுப்புகளை இணைக்கும் திட்டத்தைக் கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்தியது.அதன் காரணமாக தமிழ்ப்பள்ளிகளின் ஆசிரியர் எண்ணிக்கைக் குறைந்தது.கல்வித் தரமும் பாதிக்கப்பட்டது.இப்போது குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை இணைக்கும். திட்டத்தைப் பரிசீலித்து வருகிறது
இத்திட்டங்கள் அனைத்து மொழி பள்ளிகளுக்கும் பொது என்றாலும் இதனால் மற்ற மொழி பள்ளிகளைவிட தமிழ்ப்பள்ளிகளே அதிகம் பாதிக்கப்படும்.அதனை உணர்ந்து நாடெங்கிலுமுள்ள தமிழ் ஆர்வலர்கள் தமிழ்ப் பெற்றோர் தமிழ்ப்பள்ளிகளை காக்கவும் மீட்கவுமான திட்டங்களை தீர்க்கமாக சிந்துத்து செயல்பட வேண்டும் என்று பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் வாரியங்களின் கூட்டமைப்பின் தலைவர் ந.முனுசாமி கேட்டுக்கொண்டார்.

தமிழ்ப்பள்ளிகளைத் தற்காக்கவும், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்,தமிழ்ப்பள்ளிகளை இடம் மாற்றவும் தமிழ் மக்கள் செய்யும் முயற்சிகளுக்குத் துணை செய்யும் வகையில் மக்கள் ஓசை தமிழ்ப்பள்ளிகளைக் காப்போம் என்னும் பரப்புரைத் திட்டத்தை முன்னெடுத்திருக்கும் முயற்சிகள் பாராட்டுதலுக்கு உரியது என்று தென் செபராங் பிறை கிரியான் தோட்ட தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் ஆ.சத்தியமூர்த்தி என்ற சத்தியா,ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சத்தியசீலன்,கோலக் குராவ் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வே.புவனேஸ்வரன் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர்.

அவ்வகையில் குறைந்த மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களை அதிகரிக்கும் குறுகிய கால திட்டங்களில் ஆங்காங்கேயுள்ள தமிழ் உள்ளங்கள் ஈடுபட வேண்டும்.அதே வேளையில் இந்தியர்கள் அதிகமாக வாழும் இடங்களுக்குத் தமிழ்ப்பள்ளிகளை இடமாற்றும் நீண்ட கால திட்டத்திலும் நம் மக்கள் ஈடுபட வேண்டும்.இப்போது தமிழ்ப்பள்ளிகளைக் காக்காவிட்டால் இனி எப்போதும் காக்க முடியாமல் போகலாம்.அத்தகைய முயற்சிகளுக்கு துணை நிற்க முன் வரும் மக்கள் ஓசையின் வழி செய்திகளை உடனுக்குடன் வழங்குவதால் அதே இடர்களை எதிர்நோக்கும் பள்ளிகளும் அதற்கு தீர்வு காண முயலும் தமிழ் ஆர்வலர்களும் ஆர்வத்துடன் செயல்பட முடியும் என்று ஜின் செங்
தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கிருஷ்ணன் என்ற லெட்சுமணன்,சூன் லீ தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் ராமையா என்ற ராமு ஆகியோர் கருத்துரைத்தனர்.

குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளிகளை தற்போதுள்ள இடங்களில் தொடர்ந்து நிலை நிறுத்திவிடலாம் என்பது இயலும்
பணியல்ல.போதுமான மக்கள் தொகை இல்லாத நிலையில் இத்தகையப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை  அதிகரித்துவிடலாம் என்று எண்ணுவது நடைமுறை சாத்தியமற்றது.மூடுந்து ( வேன்)களை பயன்படுத்தி வெளியிலிருந்து
மாணவர்களை அழைத்து வருவதும் தற்காலிக ஏற்பாடாக இருக்குமேயல்லாமல் நிரந்தரத் தீர்வுக்கு வழி வகுக்காது.

இந்தியர்கள் அதிகமாகவுள்ள இடங்களுக்கு அப்பள்ளிகளை இடம் மாற்றுவதே சரியான தீர்வாக இருக்கும்.அதற்கு பல நடைமுறை சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி இருந்தாலும் அதுவே இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து நீடித்திருக்கவும் தமிழ்க்கல்வி செழிப்புற்று இருக்கவும் வழி வகுக்கும் என்று நிபோங் தெபால் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சு.நடராஜா கூறினார்.

ஒரு பள்ளியை இடம் மாற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் உண்டு என்பதை களம் இறங்கிப் பாரத்தால்தான் தெரியும் எனவே ஏட்டுப் புலிகளாக அறிக்கை விட்டால் மட்டும் போதாது.பள்ளி மேலாளர் வாரியம் பெற்றோர் ஆசிரியர் சங்கம் போன்ற அமைப்புகள் முன் நின்று முறையான குழுவை அமைத்து திட்டமிட்டு செயல்பட வேண்டும்.இது சற்று கடின பணியாக இருந்தாலும் தரமான பள்ளிகளை உருவாக்க முடியும் என்று பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரிய தலைவர் டத்தோ கா.புலவேந்திரன்,ஹோலி ரூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவரும் ம.இ.கா.பேரா மாநில கல்விப் பிரிவின் முன்னாள் தலைவருமான கோ.சண்முகவேலு,தென் செபராங் பிறை வால்டோர் தோட்டத்தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பள்ளி மேலாளர் வாரியத் தலைவருமான ந.தியாகராஜா ஆகியோர் தங்களின் அனுபவத்தின் அடிப்படையில் கருதுரைத்தனர்.

 

மக்கள் உண்டு மக்கள் ஓசை உண்டு நாளும் செய்வோம் தமிழுக்குத் தொண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here