தமிழ்ப்பள்ளி மட்டும்தான் நமது தேர்வு….

ச. மு. கணேசு. கூலிம், கெடா

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாகட்டும் என்ற சுலோகம் கடந்த சில தினங்களாக நம்மிடையே பேசப்பட்டும் பரப்பப்பட்டும் வருகிறது. நம் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வேளையில் ஒரு தமிழராகிய நம்முடைய கடமை என்ன என்பதை 

சிந்தித்துப் பார்ப்போம். பிறந்தோம் வாழ்ந்தோம் 

இறந்தோம் என்று சராசரி மனிதனின் வாழ்வைவிட இந்த பூமியிலே பிறந்ததற்கு ஏதாவது நன்மை ஒன்றை செய்து விட்டு போவோமானால் அதுவே நாம் வாழ்ந்ததற்கான அர்த்தமாக இருக்கும். அந்த வகையிலே நான் கருதும் அந்த நன்மையான நல்ல செயல்கள் இரண்டு. முதலாவதாக நாம் பிறந்து வாழ்ந்ததற்கு அடையாளமாக ஒரு மரத்தையாவது நட வேண்டும். இரண்டாவது நமது பிள்ளைகளை தாய்மொழி பள்ளிக்கு அனுப்பிட வேண்டும். 

அதிலும் நமது பிள்ளைகளை தாய்மொழி பள்ளிக்கு அனுப்பிடும் செயல் இருக்கிறதே அது நம் சமுதாயத்திற்கு செய்யும் ஒரு சேவையாகவும் நாம் தாய்மொழிக்கு செய்யும் புண்ணியமாகவும் இருக்கும்.

பிள்ளைகளை எந்த பள்ளிக்கு அனுப்புவது என்பது பெற்றவர்களின் உரிமை என்றாலும் இந்த நாட்டில் தமிழ் தொடர்ந்து தளைத்தோங்கிட நமது தாய்மொழி பள்ளிகளான தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பவதே சால சிறந்தது. தமிழ் சோறு போடுமா ? தமிழ்ப்பள்ளிகளில் என்ன இருக்கிறது ? தமிழ்ப்பள்ளியில் நன்றாக படிக்க மாட்டார்கள், கற்று தர மாட்டார்கள் என்பதெல்லாம் பழைய பல்லவி. தமிழ்ப்பள்ளி மாணவர்களின் இன்றைய அபரிமிதமான அடைவு நிலையை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உலகலாவியலான சாதனைகள்  நம்மை பெருமைப் படுத்துவதோடு நின்றுவிடாமல் எங்களாலும் முடியும் என்ற தன்னம்பிக்கையை ஆணித்தரமாக விதைக்கிறது.

இதைவிட வேறு ஒரு சான்று தேவையில்லை என்றே கருதுகிறேன். தாய்மொழி பள்ளிகள் இருக்க பிற மொழி பள்ளிகளுக்குப்  பிள்ளைகளை  அனுப்புவது பெற்ற தாயை தவிக்கவிட்டு மற்றவர்களை கவனிப்பதற்கு ஒப்பாகும். தமிழ்ப்பள்ளிகளின் மேல் குறுகிய சிந்தனையும் தயக்கத்தையும் கொண்டிருக்கும் பெற்றோர்கள் இனியாவது தங்களது எதிர்மறையான எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டுகிறேன். தமிழ்ப்பள்ளி நமது தேர்வு என்று சொல்வதைவிட தமிழ்ப்பள்ளி மட்டும்தான் நமது தேர்வு என்று உறுதியாக கூறும் காலம் கண்டிப்பாய் மலரும்,  நாம் மனது வைத்தால். இனியாவது சிந்தித்து செயல்படுவோம்.

நமது இன்றைய மாற்றம் ! நாளைய தலைமுறையின் ஏற்றம் !      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here