கவின்மலர்
பீடோர்,ஜன.14-
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல் இந்த தை மாதம் தொடங்கி எந்த முதலீடும் இல்லாமல் ஆர்வமும் தன்னூக்கமும் உள்ள தனித்து வாழும் தாய்மார்களும்,குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினரும் வியாபாரத்தின் வழி கை நிறைய சம்பாதிக்கவும் வாழ்க்கையில் முன்னேறவும் முடியும் என்று நம்புவோருக்கும் மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் சமுக தொழில் முனைவர் கரமான பிரைமஸ் வெல்னெஸ் நிறுவனம் வழிகாட்டும் என்று அதன் தலைமைச் செயல் அதிகாரி திருமதி செ.செல்வமலர் தெரிவித்தார்.
தாப்பா வட்டார மக்கள் ஓசை நிருபர் ராமேஸ்வரி ராஜாவின் ஏற்பாட்டில் இங்குள்ள சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர் இக்கருத்தை வலியுறுத்தினார்.பாரம்பரிய முறைப்படி பிரைமஸ் வெல்னெஸ் நிறுவனம் தயாரித்துள்ள தமிழர்களின் பாரம்பரிய சத்துணவுகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கி அடுத்தவர் நலத்தை பேணுவதுடன் அன்றாட வருமானத்தையும் பெருக்கிக்கொள்ள முடியும் என்று அவர் சொன்னார்.
கோவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலத்தில் வேலை இழந்தவர்கள் பலர், அதன் காரணமாக வருமானம் பாதித்தோர் பலர் அவர்கள் மட்டுமல்ல குறைந்த வருமானம் பெறுவோரும் சிறு வியாபாரத்தில் முன்னேறத் துடிப்போரும்,தனித்து வாழும் தாய்மார்களும் தயங்காமல் எங்களோடு இணைய அழைக்கிறோம்.எங்கள் குடும்பத்தில் இணைவோருக்கு வழிகாட்ட நாங்கள் தயாராக இருக்கறோம். சந்தைபடுத்தும் திட்ட வரைவுகளையும் பொருட்களின் பயன்களைப் பற்றியும் தொடர்ந்து வலியுறுத்தப்படுவதுடன் இரு வாரங்களுக்கு ஒருமுறை சந்திப்புக் கூட்டங்களும் இயங்கலையின் மூலமாகவும் நேரடியாகவும் நடக்கும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த விளக்கமளிப்புக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பலர் தங்களைப் புதிய வணிகர்களாகப் பதிந்துக்கொண்டனர்.மக்கள் ஓசையின் சார்பில் சிறப்பு வருகையாளராக கலந்துக்கொண்ட அதன் இயக்குநர்களில் ஒருவரான க.சிவநேசன் சமுதாய கடப்பாடுகளில் ஒன்றாக பிரைமஸின் இத்திட்டதிற்கு மக்கள் ஓசை துணை நிற்பதாகத் தெரிவித்தார்.