2.0 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பொங்கல் வியாபாரத்தை முடக்கிப் போட்டது.

பி.ஆர்.ஜெயசீலன்

கிள்ளான், ஜன.16-

  அரசாங்கம் விதித்துள்ள இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பொங்கல் வியாபாரத்தை நம்பியிருந்த தெங்கு கிளானா பூக்கடை வியாபாரிகளின் எண்ணம் சிதைந்துப் போனது. முதல் நாள் இரவு 8.00 மணிக்கெல்லாம் கடையை அடைத்து விடுங்கள். நாளை தொடக்கம் இரண்டு வாரத்திற்கு கடைகள் திறக்ககூடாது என கிள்ளான் நகராண்மைக் கழக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து அவசர அவசரமாக கடைகளை மூடும் நிலை ஏற்பட்டதாக பூ வியாபாரிகள் மக்கள் ஓசையிடம் தெரிவித்தனர்.

  பொங்கல் திருநாளுக்காவது கொஞ்சம் வியாபாரம் பார்க்கலாம் என்றிருந்த வியாபாரிகளுக்கு இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இடிபோல் வந்து விழுந்தது. கடந்தாண்டு மார்ச் மாதம் 18 ஆம் தேதியிலிருந்து பூ வியாபாரத்தில் பெரும் போராட்டத்தை நடத்தி வருவதாக இங்கு வியாபாரம் செய்து வரும் கஸ்தூரி பிரகாசம், பெரியக்காள் பழனிசாமி, இந்திராதேவி வெள்ளச்சாமி, செல்லம்மா கோவிந்தசாமி, சின்னம்மா வடமலை ஆகியோர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தனர். எப்பொழுதும் பொங்கல் திருநாளுக்கு மாவிலை, தோரணங்கள், வித விதமான கோலங்கள் போட்டு கடைகளை அலங்காரமாக வைத்திருப்போம். ஆனால், இவ்வாண்டு ஆர்வத்துடன் கட்டிய கரும்புகள் காய்ந்து தொங்கிய நிலையில் வெறிச்சோடிக் கிடக்கின்றன என மன வருத்தத்துடன் கூறினர்.

  கடந்தாண்டு முதல் இந்துக்கள் கொண்டாடிய எந்தப் பெருநாளுக்கும் சிறப்பான வியாபாரம் நடக்கவில்லை. பங்குனி உத்திரம், சித்திராப் பௌர்ணமி, ஆடிமாதத் திருவிழாக்கள், தீபாவளி, நவராத்திரி, கார்த்திகை என அனைத்து விழாக்களுக்கும் பெருமளவில் சரிவை சந்தித்ததாக குறிப்பிட்டனர்.  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் திருமணங்கள் போன்ற சுப காரியங்கள் பெரிய அளவில் நடத்த முடியாமல் போனதால் அதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக கஸ்தூரி குறிப்பிட்டார்.  மேலும் தாங்கள் எதிர்நோக்கும் பெரும் பிரச்சினையாக திகழ்வது,  குடியிருப்புப் பகுதிகளிலும் சாலையோரங்களிலும் மரத்திற்கு மரம் ஒரு குடையைப் போட்டுக் கொண்டு தற்காலிக வியாபாரம் செய்பவர்களால் பலத்த சவாலை எதிர்நோக்குவதாக குறிப்பிட்டனர். 1991 ஆம் ஆண்டு முதல் இங்குள்ள லோரோங் திங்காட் ஒன்றில் கிள்ளான் நகராண்மைக் கழகம் வழங்கிய 21 பூக்கடைகளை வியாபார உரிமம் பெற்று மாதாந்திர வாடகை செலுத்தி நடத்தி வருகிறோம். இந்துக்களின் விஷேச நாட்களில் மட்டும் தற்காலிக கடைகளைப் போட்டு  வியாபாரத்தை நடத்தி எங்கள் பிழைப்பில் மண்ணை போடுகின்றனர் என அவர்கள் மனம் குமுறினர்.

   பொங்கல் முதல் நாளே வடகிள்ளானையும் தெங்கு கிளானா லிட்டில் இந்தியா வியாபார மையத்தையும்  இணைக்கும் பாலத்தை முற்றாக மூடிவிட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இதனால், வாணிபப் பகுதிகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை முற்றாக சரிவு கண்டது.  தங்களின் பூ வியாபாரமும் படுமோசமானதாக விசாலட்சுமி சின்னப்பன், லெட்சுமி பூதன், சுகந்தி நடராஜன்,  ஆகியோர் தெரிவித்தனர்.

  பொங்கல் வியாபாரத்தை நம்பி கொஞ்சம் அதிகமான பூக்களை வாங்கி சேமித்து வைத்து விட்டோம்.  ஆனால்,  அரசாங்கத்தின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிப்பு எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு கடைகளைத் திறக்ககூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாங்கி சேமித்து வைத்திருக்கும் பூக்கள் வீணாகிவிடும் என்று குறிப்பிட்ட அவர்கள், பூக்கடைகளில் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் நெரிசலாக வருவதில்லை. கடைகளில் இரண்டு அல்லது மூன்று பணியாளர்கள் மட்டுமே வேலை செய்வதால் எந்தவொரு விபரீதமும் நிகழாது என்பதால் அரசாங்கம் எங்களின் பூக்கடைகளை நடைமுறை விதிகளுக்கு ஏற்ப வியாபாரம் செய்ய அனுமதியளிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு வெளியே நின்றுதான்  பூமாலைகள், மல்லிகைச் சரங்களை வாங்கிச் செல்வதால் கோவிட்-19 பாதிப்பு ஏதும் வராது என குறிப்பிட்டதுடன்  சிறுதொழில் வியாபாரிகளான தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here