உருமாற்று பள்ளியாக தாப்பா தமிழ்ப்பள்ளி

ராமேஸ்வரி ராஜா

தாப்பா, ஜன. 16 :

உருமாற்று பள்ளியாக புதிய கல்வி முறை, மெய்நிகர் கற்றல், திறன்பலகை வழி போதனை, மெய்நிகர் நுழைவு மையம், ஒளிப்பதிவு அறை, கண்காட்சி அறை, குளிர்சாதன வசதியுடன் நூலகம், நவீன கணினி அறை, மெய்நிகர் கற்றல் அறை போன்ற சிறப்புகளுடன் எடுத்துக்காட்டு பள்ளியாக தாப்பா தமிழ்ப்பள்ளி திகழும் நிலையில் வெளியிலிருந்தும் வட்டாரத்திலிருந்தும் பிற மொழிப்பள்ளிகள், தேசிய பள்ளிகளிலிருந்தும் வந்து பார்வையிட்டு கற்று செல்கின்றனர். சுங்கை, துரோலாக்கிலிருந்து மலாய் பெற்றோர் பிள்ளைகளை 40 நிமிடம் பயணம் செய்து வந்து தாப்பா தமிழ்ப்பள்ளியில் படிக்க வைக்கின்றனர். இப்படியிருந்தும் இங்கிருக்கும் தேசிய பள்ளிக்கு பெற்றோர் படையெடுப்பது ஏன் என்று தெரியவில்லை என தங்கள் பிள்ளைகளை இங்கு படிக்கவைக்கும் பெற்றோர் கேள்வி எழுப்ப்பியுள்ளனர்.

பாலர் பள்ளி முதல் ஆறாம் ஆண்டுவரை மெய்நிகர் கல்வி திட்டம் தாப்பா தமிழ்ப்பள்ளியில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. கற்றல் கற்பித்தலோடு நடைமுறை வழியிலும் பாடங்கள் போதிக்கப்படுகின்றன. அதில் முக்கியமாக கணினி வழி கற்றலில் மாணவர்கள் சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகின்றனர். சிறப்பு அம்சங்களில் ஒன்றாக 23,௦௦௦ வெள்ளி மதிப்பிலான ஒரு திறன் பலகையையும் பள்ளி கொண்டிருக்கிறது. அதில் இணையம் வாயிலாக தேடல்களை செய்வதோடு கையெழுத்தின் வாயிலாகவும் நவீன யுக்திகளை மாணவர்கள் கையாள பழகியிருக்கின்றனர் என தாப்பா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் வனஜா அண்ணாமலை தெரிவித்தார். 

உருமாற்று பள்ளியாக இருக்கும் நிலையில் சுற்று வட்டார பள்ளிகளிலிருந்து மட்டுமல்லாமல் வெளி மாநில பள்ளிகளிலிருந்தும் கற்றல் கற்பித்தல் முறைகளைத் தெரிந்துகொள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் வருகிறார்கள். அவர்களுக்கென  விளக்க அறையும் கண்காட்சி அறையும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு பாலர் பள்ளியில் 3௦ மாணவர்கள் கல்வியை தொடங்கவிருக்கிறார்கள். ஒன்றாம் ஆண்டில் 16 மாணவர்கள் மட்டுமே பதிவை செய்துள்ளனர். அதிகமான மாணவர்கள் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த எண்ணிக்கை சற்று ஏமாற்றத்தைத் தருகிறது. இங்கு பிள்ளைகளை படிக்க வைத்த மலாய் பெற்றோர்கள் சிலர் பிள்ளைகளின் முன்னேற்றத்தைக் கண்டு அடுத்தடுத்த பிள்ளைகளையும் இங்கேயே நம்பிக்கையுடன் படிக்க வைக்கின்றனர். அப்படி இருக்கையில் நமது பெற்றோர்கள் நம் பள்ளிகளை நம்பி பிள்ளைகளை அனுப்பவேண்டும் என்பது எங்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது என்பதாகவும் அவர் கருத்துரைத்தார்.

என் பிள்ளை மும்மொழியிலும் சிறந்து விளங்க வேண்டும் எனும் ஆர்வத்தில் சுங்கை, துரோலாக்கிலிருந்து இங்கு வந்து முதல் பிள்ளையை சேர்த்தேன் என மலாய் பெற்றோரான நூர் அசிரா தெரிவித்தார். மகன்  சிறந்த முறையில் கல்வியை இங்கு மேற்கொண்டதனால், வருவதற்கு 40 நிமிடம் போவதற்கு  40 நிமிடம் பயணம் செய்ய வேண்டும் என்ற போதிலும் இரண்டாவது பிள்ளையையும் இங்கேயே பதிந்துள்ளேன் என அவர் பூரிப்புடன் தெரிவித்தார். மும்மொழியிலும் சிறந்து விளங்கும் அதே வேளையில் கணினிக் கல்வியிலும் நல்ல முன்னேற்றத்துடன் மகன் பயிலும் வாய்ப்பு இங்கு கிடைத்தது எனவும் நூர் அசிரா தெரிவித்தார்.

நமது பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டும், பாதுகாக்க வேண்டும் எனும் வலியுறுத்தல்கள் பரவலாக இருந்து வரும் வேளையில் பிற பள்ளிகளை நோக்கி பெற்றோர்கள் படையெடுப்பது வருத்தமளிக்கிறது என பெற்றோர்களான மு. பரணி, கோ. மகேந்திரன் ஆகியோர் கூறினர். நம் மொழி நம் பள்ளி எனும் உரிமை நம்மவர்களுக்கு மேலோங்க வேண்டும் எனவும் இவர்கள் கருத்துரைத்தனர். தமிழ்ப்பள்ளியில் படித்த மாணவர்கள் பலரும் பல்வேறு சாதனைகளைப் படைத்துவரும் நிலையிலும் முன்னேறியுள்ள நிலையிலும் ஏன் தமிழ்ப்பள்ளியை நம்மவர்கள் தவிர்க்கிறார்கள் என்பது புரியவே இல்லை என்கிறார்கள் இவர்கள்.

தன் பிள்ளைகளைப் பார்த்துகொள்வதுபோல் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்த்து கொள்வதாக உணர்கிறோம். தமிழ்ப்பள்ளியில் பயில்வதன் வழி மும்மொழி பாடத்திலும் பிள்ளைகள் சிறந்து விளங்குகின்றனர். அத்துடன் நமது கலாச்சாரம், பாரம்பரியத்துடன் நன்னடத்தையையும் பிள்ளைகள் பேணுகின்றனர் என பெற்றோர்களான ப. கவிதா, சு. கோகிலா, எ. கோகிலா, ப. தனபாலன் ஆகியோர் குறிப்பிட்டனர். தமிழ்ப்பள்ளியில் படித்த நாங்கள் நன்றாகத்தான் இருக்கிறோம். அதுபோல் எங்கள் பிள்ளைகளும் தமிழ்ப்பள்ளியில்தான் பயில வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம் எனவும் இவர்கள் கூறினர்.   உலக அளவிலும், மாநில மற்றும் மாவட்ட அளவிலும் எங்கள் பிள்ளைகள் ஆங்கிலம், மலாய், தமிழ், கணிதம், அறிவியல், விளையாட்டு என எல்லா பாடப் போட்டிகளிலும் எங்கள் பிள்ளைகள் பங்குபெற்று வெற்றிகளைப் பெற்றுள்ளனர். ‘தோகோ பெலாஜார்’ எனும் சிறந்த மாணவருக்கான விருதையும் பெற்றனர். தேசிய, பிற மொழிப்பள்ளிகளோடு போட்டிக்கு செல்லுகையில் தாப்பா தமிழ்ப்பள்ளியில் பயிலும் எங்கள் பிள்ளைகள் முதல் நிலையில்தான் வெற்றி வாகைகளைச் சூடுகின்றனர். இங்கிருந்து இடைநிலைப் பள்ளிக்கு சென்று அங்கும் எங்கள் பிள்ளைகள் சிறந்த மாணவர்களாக திகழ்கின்றனர் என ஆசிரியர்களாக பணிபுரியும் பெற்றோர்கள்       ந. மாலதி, ம. யமுனா ஆகியோர் குறிப்பிட்டனர்.

தமிழ்ப்பள்ளியில் படித்தால் பிள்ளைகளுக்கு எதிர்காலம்  இருக்காது, கல்வியில் பின்தங்கி விடுவார்கள், முன்னேற மாட்டார்கள் என்பதெல்லாம் வெறும் சாக்கு போக்குதான் என்று நாங்கள் கருதுகிறோம். பிற பள்ளி மாணவர்களை ஒப்பிடுகையில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்த நிலையில்தான் தங்களை நிரூபிக்கின்றனர். பிள்ளைகள் சரியான முறையில் வீட்டில் வளர்க்கப்பட்டிருந்தால் எங்கு சென்றாலும் சரியாகத்தான் பயில்வார்கள். தமிழ்ப்பள்ளியைக் குறை சொல்லாமல் தமிழ்ப்பள்ளி நம் பிள்ளைகளுக்கு நல்வழியைக் காட்டும் எனும் நம்பிக்கையுடன் பெற்றோர்கள் யோசித்து முடிவெடுக்கவேண்டும் என பெற்றோர்கள் கேட்டுக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here