ரவூப் , ஜன . 18 –
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு எனும் அடிப்படையில் இங்குள்ள காலி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் முதலாம் வகுப்பில் மாணவர்களை அதிகரிக்கும் நடவடிக்கையில் தோட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் களம் இறங்கியுள்ளனர். தற்பொழுது இப்பள்ளியில் மொத்தம் 10 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர்.
இவ்வாண்டு மூன்று மாணவர்கள் மட்டுமே முதலாம் ஆண்டில் கல்வி பயில பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க ஆலய நிர்வாகமும் , பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கமும் முழு மூச்சாக ஈடுபட்டு வருவதாக ஆலயத்தின் தலைவர் யோகேந்திரன் பழனிசாமி தெரிவித்தார்.
குறிப்பாக இவ்வாண்டு முதலாம் ஆண்டில் பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் , பள்ளிக் கட்டணம் , சீருடை , புத்தகப்பை , காலணி , இலவசமாக வழங்கப்பட்டு மாணவர்களின் பேருந்து கட்டணத்தையும் ஏற்றுக்கொள்ளும்.
அதே வேளையில் மாதம் தோறும் ஆலயத்தின் சார்பாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 300 ரிங்கிட் வழங்கப்படும் .மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காவிடில் வருங்காலத்தில் இப்பள்ளி மூடக்கூடிய அபாய கட்டத்தில் இருப்பதாக யோகேந்திரன் கூறினார்.