தமிழ்ப்பள்ளிகளின் சாதனை வரிசையில் சுங்கை சோ தமிழ்ப்பள்ளி பதக்கம் -32

அனைத்துலக போட்டிகளிலும்  கொடிகட்டிப் பறந்திருக்கிறது

கவின்மலர்

உலு சிலாங்கூர்,தாமான் தெராத்தாயினுள் நுழைவோரை  இருமருங்கிலும்  வளர்ந்தோங்கி நிற்கும் பசுமையான மரங்கள் வரவேற்க  முதலில் காணும் காட்சி  நந்தவனத்தில் தமிழ்மணக்க கம்பீரமான வீற்றிருக்கும்    சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளி என்று சொன்னால் மிகையாகாது.

இப்பள்ளியில் 457 மழலைச் செல்வங்கள் தங்கள் ஆரம்பக்கல்வியைப் பயின்று வருகின்றனர். ஏட்டுக்கல்வியோடு வாழ்வியலையும் ஒன்றிணைத்து தன்னம்பிக்கை  நிறைந்த மனித மூலதனத்தை உருவாக்கும் சிற்பிகளாக 24 ஆசிரியர்கள் இப்பள்ளியில் பணிபுரிகின்றனர். 

இந்தத் தேன்கூட்டின் ராணி தேனீயாகத்   திகழ்பவர் தலைமையாசிரியர் திருமதி ஜெயந்தி  லிங்கப்பன்  ஆவார். அவருக்குத் துணையாக நிர்வாகத் துணைத் தலைமையாசிரியர் திருமதி சாந்தி சோமசுந்தரம், மாணவர் நலத் துணைத் தலைமையாசிரியர் திருமதி இராக்கம்மாள் பெரியசாமி மற்றும் இணைப்பாட துணைத் தலைமையாசிரியர் திருமதி மகேஸ்வரி இராஜகோபால் ஆகியோர் முத்தாய்ப்பாய் உள்ளனர்.மேலும் 4 அரசாங்க உதவி பணியாளர்களும் பணியாற்றுகிறார்கள்இப்பள்ளி 2018-ம் ஆண்டு முதல் உருமாற்று பள்ளி 2025  (TS25) sekolah Transformasi என்ற அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஏற்ப செயல்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறைய 30 மாணவர்களைக் கொண்டு 1936-ல் தோட்ட நிர்வாகியின் முயற்சியில் உருவாகிய இப்பள்ளி 1967-ல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் இரண்டு வகுப்பறைகளை அரசாங்கத்தின் உதவியில் பெற்றது.இன்றும் உலு சிலாங்கூர் மாவட்டத்தில் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளியாக இப்பள்ளி திகழ்கிறது. 1990-ம் ஆண்டு இரண்டு வகுப்பறைகளையும் 2007-ம் ஆண்டு பத்து அறைகளைக் கொண்ட இரண்டு மாடி இணைக் கட்டடத்தையும் தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின் வற்றாத ஆதரவால் பெற்றது.

இப்பள்ளியின் வரலாற்றில் பலரும் குறிப்பாக தலைமையாசிரியர்களும் சிற்பிகளாக இருந்தாலும், முன்னாள் தலைமையாசிரியர்களான முனுசாமி, சிதம்பரம், மாவட்ட கல்வி அதிகாரி அமிர்தரத்தனம் மற்றும் பள்ளியின்  முன்னாள் வாரியத் தலைவரான அலெக்ஸ் ஜோசப் போன்றோர் கல்வெட்டாக இருந்திருக்கின்றனர் என்பது காலச் சுவடு காட்டும் பதிவுகளாகும்.

இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்று புகுமுக வகுப்பைப் புறம்தள்ளி படிவம் 1-க்கு  முன்னேறிச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதும் சிறப்புக்குரியதே. 85 ஆண்டுகளை எட்டிப்பிடித்திருக்கும் இப்பள்ளி  படைத்திருக்கும் சாதனைகள் எண்ணிலடங்கா. கல்வியில் மட்டுமல்லாமல் விளையாட்டு, புத்தாக்கம், புறப்பாடம் போன்ற துறைகளில் மாவட்டம், மாநிலம்,தேசியம் ஆகியவற்றைக் கடந்து அனைத்துலக போட்டிகளிலும் கொடிகட்டிப் பறந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.அவற்றில் சில சான்றுகள் மட்டும்…….

 • மாநில அளவிலான சாதனைகள்
 • இப்பள்ளி மாணவர்கள் பூப்பந்து, golf, சதுரங்கம், நெடுந்தூர ஓட்டம் போன்ற விளையாட்டுகளில், மாவட்டம் நடத்திய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அடுத்த கட்டமாக மாநிலத்தைப் பிரதிநிதித்தும் விளையாடியுள்ளனர்.
 • .இந்த வரிசையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக (2018,2019,2020) மாவட்டம் நடத்திய ஆங்கில நேர்பட பேச்சு போட்டியில் முதல் நிலையில் வெற்றி பெற்று மாநிலத்தைப் பிரதிநிதித்துவுள்ளது பெருமைக்குரியது.
 • தேசிய அளவிலான சாதனைகள்
 • 2019 கல்வியமைச்சு நடத்திய தேசிய அளவிலான ஆரம்பப்பள்ளிகளுக்கான அறிவியல் புத்தாக்க கண்டுபிடிப்பு கண்காட்சியில் தங்கம் வென்றனர்.
 • 2019-ல் உமா பதிப்பகம் ஏற்பாட்டில் தேசிய அளவிலான ஆரம்பப்பள்ளிக்கான சிறுகதை எழுதும் போட்டியில்  இப்பள்ளியைச் சார்ந்த மாணவன் நிமலேஸ்வரன் முதல் நிலையில் வெற்றி பெற்றான்.
 • 2020 ASTI நடத்திய தேசிய அளவிலான இயங்கலை அறிவியல் புத்தாக்க கண்டுபிடிப்பில் முதல் நிலையில் வெற்றி பெற்றனர்.

 • அனைத்துலக அளவிலான சாதனைகள்
 • 2019 தலைநகர் புத்திரா மாநாட்டு மையத்தில் நடைபெற்ற அனைத்துலக இளம் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு கண்காட்சியில் 2 குழுக்கள் கலந்து கொண்டு 2 தங்கங்கள் வென்றனர்.

 

 • .2019 இந்தோனேசியா, ஜகர்த்தாவில் நடைபெற்ற அனைத்துலக இளம் ஆய்வாளர் புத்தாக்க கண்டுபிடிப்பு கண்காட்சியில் தங்கம் வென்றனர்.

 

 • 2019 தைவானில் நடைபெற்ற அனைத்துலக புத்தக வடிவமைப்பு கண்காட்சியில் தங்கம் வென்றனர். அதோடு அந்நிகழ்வில் தாய்லாந்து, இந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளின் விருதுகளும்  கிடைத்தன

 

 • .2020 இந்தோனேஷியா  சுரபாயாவில்  நடைபெற்ற ஆசியன் அறிவியல் புத்தாக்க தொழில்முனைவர் கண்காட்சியில் தங்கம் வென்றனர்.


தமிழ்ப்பள்ளி நமதுத் தேர்வாகட்டும்
தமிழ்மொழி நமது உயிராகட்டும்

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here