இயங்கலை வகுப்பிற்கு பெற்றோர்கள் மாணவர்களை தயார்படுத்த வேண்டும்

 எம்.எஸ்.மணியம்

பந்திங் ஜன 19,

கோவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் நாளை புதன்கிழமை புதிய கல்வித் தவணையில் நாடு முழுவதும் திறக்கப்படவிருந்த பள்ளிகளை அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு இயங்கலை மூலம் பாடங்கள் போதிக்கப்படும் என்பதால் அதற்கு ஏதுவாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தயார் செய்ய வேண்டும் என்று கோலாலங்காட் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் தலைவர் ருசேந்திரன் தெரிவித்தார்.

கடந்தாண்டு மார்ச் மாதம் மத்தியில் நாட்டில் முதல் முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட போது பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு இயங்கலை வாயிலாக பாடங்கள் போதிக்கப்பட்டது. புதிய இயல்பில் நடத்தப்பட்ட இயங்கலை பாடங்கள் மாணவர்கள் சற்று சிரமத்தை எதிர்நோக்கினர்.

குறிப்பாக ஆரம்ப பள்ளி மாணவர்கள் என்பதால் பெரும்பாலும் அவர்களுக்கு கைத்தொலைப்பேசி வசதி இல்லாமல் இருப்பது, சில வீடுகளில் இணையம் வசதியின்மை போன்ற பிரச்சனைகள் இருந்ததால் மாணவர்களுக்கு பாடங்களை போதிப்பதில் ஆசிரியர்கள் பெரும் சவாலை எதிர்நோக்கினர்.

கைத் தொலைப்பேசி இல்லாததால் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களின் கைப்பேசியை பயன்படுத்தி வந்தனர் என்றும் எனினும் இதில் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் கைப்பேசியை தங்களுடன் கொண்டு சென்று விடுவதால் மாணவர்கள் இயங்கலை வழி பாடங்களை கற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதோடு சில வீடுகளில் இணைய வசதியின்மை காரணமாகவும் மாணவர்கள் பிரச்சனைகளை எதிர்நோக்கி வந்தனர். இது தொடர்பாக ஆசிரியர் தரப்பிடமிருந்து  பல புகார்களை தாங்கள் பெற்றதாக அவர் கூறினார்.

நவீன தகவல் தொழில் நுட்பத்தில் நான்காம் தொழில் புரட்சியில் தற்போது உலகம் இயங்கிக் கொண்டிருப்பதால் அதற்கேற்றவாறு அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் பெற்றொர்கள் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்பதோடு அதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.

விடுமுறை காலம் முடிந்து நாளை முதல் பள்ளி தவணை தொடங்கும் போது மீண்டும் இயங்கலை வாயிலாக பாடங்கள் போதிக்கப்படும் என்பதால் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு ஏற்பட்ட கைப்பேசி, இணையம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு பெற்றோர்கள் இயங்கலை வகுப்பிற்கு போதுமான வசதிகளை தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தி தர வேண்டும் என்று ருசேந்திரன் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here