செய்தி: ஆர்.கிருஷ்ணன்
பத்துகாஜா, ஜன. 22-
கெடா மந்திரி பெசார் தற்போது இந்திய விவகாரங்களில் மூக்கை நுழைத்துக் கொண்டு மூர்க்கதனமாக செயல்படுகிறார். பல்லின மக்கள் வாழும் மாநிலத்தின் மந்திரி பெசார் என்பதை மறந்து விட்டு சர்வாதிகாரியாக செயல்படுவது, பாஸ் கட்சிக்கு அவமான சின்னமாக திகழ்கிறார் என்று சாடினார் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார்.
கோவிட் 19 காலகட்டத்தில் தைப்பூசம் கொண்டாட முடியாத நிலைப்பாடு என்று அரசாங்கம் அறிவிப்பு செய்துள்ளது. ஆனால், அரசாங்கம் ஒருபோதும் பொது விடுமுறையை ரத்து செய்யவில்லை. அப்படி இருந்தபோது கெடா மந்திரி் பெசார் அதிக பிரசங்கிதனமாக மாநில விடுமுறையை அரசாங்க பதிவேட்டிலிருந்து அகற்றுவது ஏற்புடையதல்ல என்று அவர் கூறினார்.
இந்த தைப்பூச விடுமுறைகள் மற்ற மாநிலங்கள் போல் வழக்கம் போல வழங்கிட வேண்டும். இவரின் செயலால் இந்நாட்டு இந்தியர்களின் வில்லனாக இவர் உருமாற்றம் பெற்று விட்டார்.இவ்விவகாரம் குறித்து பாஸ் கட்சியில் இருக்கும் இந்தியர்கள் விழிப்புணர்வுடன் இன உணர்வுடன் செயல்படுவது அவசியம் என்று அவர் கருத்துரைத்தார்.
அண்மையில் கெடா மாநிலத்தில் இந்து ஆலயங்களை இவர் உடைக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டார். அதன் பின், சுங்கை மூடா ஆற்று நீரை திசை திருப்பும் வேளையில் ஈடுபட போவதாகவும்; பினாங்கு அரசு ஆற்று நீர் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்று பொறுப்பற்ற முறையில் செயல்பட்டார்.அதோடு, தற்போது தைப்பூச விடுமுறை சர்சையில் சிக்கினார் என்று அவர் சுட்டிக்காட்டினார்.