இவ்வாண்டு தைப்பூச விடுமுறையை பாஸ் கட்சித் தலைமையிலான கெடா மாநில மந்திரி பெசார் ரத்துச் செய்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று மலேசியத் தமிழர் சங்கத்தின் தேசியத் தலைவர் வழக்கறிஞர் எம்.ஜெ.கணேசன் தெரிவித்தார்.
தைப்பூச விழா இந்துக்கள் அதிலும் குறிப்பாக தமிழர்கள் அனுசரிக்கும் சமய ஆன்மீக பெருவிழா. பலப் போராட்டங்களுக்குப் பிறகு பெறப்பட்ட நடைமுறையில் இருக்கும் இந்த அரசாங்க பதிவுப் பெற்ற விடுமுறையை(அரசாங்க கெசட்டில் வெளியிடப்பட்டது) ரத்துச் செய்வது தவறான செயல் என்றும் இதனை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தைப்பூசம் என்பது அன்றையத் தினம் தமிழரின் தனிப்பெரும் கடவுளான முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து வழிப்பாடு செய்வது ஆகும். இதனை வீட்டில் இருந்து வழிப்படுவதும், ஆலயம் சென்று வழிப்படுவதும் நாம் மேற்கொள்கின்ற நடைமுறையாகும். இது நமக்கு ஒரு புனித நாள் என்பதனை அரசாங்கப் பொறுப்பில் உள்ளவர்கள் உணர்ந்துக் கொள்ளவேண்டும். இந்த ஒரு நாளை விடுமுறையாக விடுவதினால் எந்த வகையில் மாநிலத்திற்கு இழப்பு ஏற்படும் என்பதனை மந்திரி பெசார் மக்களுக்கு விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் எம்.ஜெ.கணேசன் கேட்டுக் கொண்டர்.
சிலாங்கூர் மாநிலமும், பினாங்கு மாநிலமும் இந்துக்களை மதித்து விடுமுறையை அனுசரிக்கின்றபோது, கெடா மாநிலம் மட்டும் விடுமுறையை ரத்துச் செய்வது இந்துக்களின் சமய விவகாரங்களில் தலையிட்டு அவர்களின் மனதைப் புண்படுத்தும் செயலாகும்.
இதற்கு முன்பு இவர்கள் ஆலயங்களை உடைத்தனர்; இப்போது தைப்பூச விடுமுறையை ரத்துச் செய்கின்றனர். நமது உணர்வுகளை மதிக்காத இந்த பாஸ் கட்சியின் அடாவடித்தனமான நடவடிக்கையினை கண்டிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் எம்.ஜெ.கணேசன் கேட்டுக் கொண்டார். இதன் தொடர் நடவடிக்கையாக மலேசியத் தமிழர் சங்கம் கண்டனக் கடிதம் ஒன்றினை கெடா மாநில மந்திரி பெசாருக்கு இன்று அனுப்பியுள்ளது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எம்.ஜெ.கணேசன்,
தேசியத் தலைவர்
மலேசிய தமிழர் சங்கம் கண்டனம்