சுதந்திரம் பெற்று 70ஆண்டுகளுக்கு மேலாகியும் அடிப்படை வசதிகளுக்கு பரிதவிக்கும் கெடமலை: சிகிச்சைக்கு டோலியில் தூக்கும் சிரமம்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள கெடமலை கிராமம், சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் அடிப்படை வசதிகள் இல்லாமல் பரிதவித்து நிற்கிறது.
நோயால் பாதித்தவர்களை டோலிகட்டி சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் அவலம், பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மலைகிராமங்கள் அதிகளவில் உள்ளது. இன்றளவும் நம் முன்னோர் காட்டிய வழியில் வாழ்க்கை நடத்தி பாரம்பரியம் காத்து நிற்பவர்கள், மலைகிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களே என்றால் அது மிகையல்ல.
ஆனால் இவர்கள் சுதந்திரம் பெற்று 70ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை, போக்குவரத்து, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக போராட்டம் நடத்தி அல்லல்பட்டுக் கொண்டிருப்பது காலத்தின் கொடுமை. இதற்கு உதாரணமாக திகழ்கிறது நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் உள்ள கெடமலை கிராமம். கெடமலையில் மேலூர், கீழூர் உள்ளிட்ட குக்கிராமங்களையும் உள்ளடக்கிய கெடமலையில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

மேலூர், கீழுர் கிராமங்களுக்கு வடுகம் பகுதியில் இருந்து செல்ல வேண்டும். கெடமலைக்கு புதுப்பட்டியில் இருந்து 11 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். அதேசமயம், நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டியை அடுத்த சம்பூத்துமலையில் இருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில்தான் கெடமலை உள்ளது. தற்போது சம்பூத்து மலை வரை தார்சாலை வசதியுள்ளது.

அதற்கு மேல் வனப்பகுதியில் உள்ள சாலையில் செல்ல வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இங்குள்ள மக்கள் மிளகு, சாமை, தினை,  கொள்ளு போன்றவற்றை தங்களது வாழ்வாதாரத்திற்காக சாகுபடி செய்கின்றனர். இதற்காக கடுமையாக உழைக்கும் அவர்கள், மலைப்பகுதியில் உள்ள காட்டுப்பன்றி, நரி உள்ளிட்ட பல்வேறு கொடிய மிருகங்களுடன் போராடியே அதை காப்பாற்றி வருகின்றனர்.

ஆனால் இப்படி காப்பாற்றி வளர்த்த பயிர்களை உரிய நேரத்தில் அவர்கள், அடிவாரத்திற்கு கொண்டு வந்து விற்பதற்கு உரிய சாலை வசதி இல்லை. இதனால் ஆண்டு முழுவதும் அவர்கள் கடுமையாக உழைத்தும் அதற்கான பலன் இல்லாமல் போகிறது.இப்படி பயிர்களை காக்க போராடும் மக்கள், தங்களது உயிர்களை காக்கவும் பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பது பெரும் வேதனை.

இங்கு வசிப்பவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால் கரடு, முரடான பாதைகளில்  பலகிலோ மீட்டர் தூரம் நடந்து அடிவாரத்தில் உள்ள ஆயில்பட்டிக்கு வரவேண்டும். சாலை வசதி, வாகன வசதி இல்லாததால், கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டோரை டோலி கட்டி அதன் மூலம் மட்டுமே தூக்கி வரவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here