தமிழ்ப்பள்ளிகளே நமது தேர்வு  பரப்புரைத் திட்டங்கள் புறநகர்களைவிட நகர்புறங்களில் வெற்றியளித்து வருகிறது

கவின்மலர்

பாரிட் புந்தார், ஜன.25-

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்ப்பள்ளிகளே நமது தேர்வு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தமிழ் ஆர்வலர்களும், தலைவர்களும்,தமிழர் சார்ந்த அமைப்புகளும்,தமிழ் நாளிதழ்களும்  தொடர்ந்து மேற்கொண்டு வரும் பரப்புரையின் காரணமாக புறநகர்களை விட நகர்புறங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது என்பது மக்கள் ஓசை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

2021ஆம் கல்வி ஆண்டில் ஒன்றாம் ஆண்டு முதல் தேர்வு வகுப்புகள் தவிர்த்து அனைத்து வகுப்பு மாணவர்களும் இயங்கலையில் கல்வி கற்கும் நிலை உருவாகியுள்ளதால் இவ்வாண்டு பள்ளிகளில் பதிவாகியுள்ள மாணவர்களின் மொத்த எண்ணிக்கையை கல்வி  அமைச்சே இன்னும்  வெளியிடாமல் இருக்கிறது. அதன்  காரணமாக தமிழ்ப்பள்ளிகளில் இவ்வாண்டு இணைந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை என்ன என்பது துல்லிதமாகத் தெரியவில்லை.என்றாலும் தமிழ்ப்பள்ளிகள் அதிகமாகவுள்ள புறநகர் பகுதிகளை விட நகர் புறங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது தெரிகிறது.அதற்கு தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு என்ற பரப்புரைத் திட்டங்கள் பயனளித்து வருவதையே காட்டுவதாக  பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கம்,பள்ளி மேலாளர் வாரியம்,முன்னாள் மாணவர் சங்கம் போன்ற அமைப்புகளின் தலைவர்கள் கருத்துரைத்துள்ளனர்.

  • தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு மக்கள் ஓசையின் பங்கு 

குறிப்பாக தமிழ் நாளிதழ்கள் ஆற்றி வரும் பங்களிப்பையும் அவர்கள் பெரிதும் பாராட்டினர்.குறிப்பாக பள்ளி தொடங்கும் கடைசி நேரத்தில் மட்டும் இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்காமல் ஆண்டு முழுதும் தமிழ்ப்பள்ளிகளின் சாதனைகளுக்கு முன்னுரிமை தந்து முதல் பக்கத்திலும் முக்கிய பக்கங்களிலும் வெளியிட்டு பெருமைப்படுத்துவதில் தமிழ் நாளிதழ்களின் பங்கு அளப்பரியது.சிறப்பாக சுட்ட வேண்டுமானால் மக்கள் ஓசை அதில் முன்னிலை வகிப்பதாக பல தலைவர்களும் தமிழ் ஆர்வலர்களும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெற்றோரும் தெரிவித்தனர்.மக்கள் ஓசை கடந்த பல மாதங்களாக தமது ஞாயிறு ஓசையில் தமிழ்ப்பள்ளிகளின் சாதனைகளுக்கு முதலிடம் தந்து வெளியிட்டு் வருகிறது.வாரம் ஒரு தமிழ்ப்பள்ளியை அறிமுகப்படுத்தி சிறப்பு செய்து வருகிறது.அதுபோலவே கடந்த இரு மாதங்களாக தமிழ்ப்பள்ளிகளைப் பாதுகாப்போம் என்ற இயக்கத்தை தனி முத்திரையுடன் வெளியிட்டு முத்திரைப் பதித்து வருகிறது.

இத்தகைய தொடர முயற்சிகளின் காரணமாக பிற மொழி பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப ஆர்வம் காட்டிய பெற்றோர் பலரும் இப்போது தமிழ்ப்பள்ளிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்ப ஆர்வம் காட்டுகின்றனர்.99 தமிழ்ப்பள்ளிகளைக் கொண்ட சிலாங்கூர் மாநிலம் கடந்த பல ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளிக்கு மாணவர்களை அனுப்பும் மாநிலங்களில்  முதலிடம் வகிக்கிறது.ஆண்டுதோறும் ஒன்றாம் ஆண்டுக்குச் செல்லும் ஏறத்தாழ 13,500 மாணவர்களில் சிலாங்கூர் மாநிலம் மட்டுமே மூன்றில் ஒருபங்கு மாணவர்களை அதாவது ஏறத்தாழ 4500 மாணவர்களை அனுப்புகிறது. இது 137 பள்ளிகளைக் கொண்ட பேராக் மாநிலத்திலும் இல்லாத சாதனையாகும். அது மட்டுமல்லாமல் பேரா,ஜோகூர் போன்ற மாநிலங்களிலும் நகர்புற பள்ளிகளிலேயே அதிகமான மாணவர்கள் பதிந்துள்ளதாகத் தெரிகிறது.

புறநகர் பகுதிகளில் குறிப்பாக தோட்டப்புறங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் போவதற்கு அங்கு இந்தியர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதே முக்கிய காரணமாகும்.எனவே அச்சிக்கலுக்குத் தீர்வு காண இரு வழிகளில் ஒன்று.தோட்டப் புறங்களிலுள்ள வேலை வாய்ப்புகளை நமது மக்களை பயன்படுத்திக்கொள்ளச் செய்வதாகும். நீண்ட கால திட்டமான அது ஒருபுறமிருக்கட்டும்.நமது உடனடி பரப்புரை முயற்சிகள் பிறமொழி பள்ளிகளை நாடும் நமது பெற்றோரின் மனப் போக்கை மாற்றுவதும், குறைந்த மாணவர்களைக் கொண்ட புறநகர் பகுதிகளிலுள்ள தமிழ்ப்பள்ளிகளை நகர்புறங்களுக்கும் இந்தியர்கள் அதிகமாக வாழும் இடத்திற்கு மாற்றுவதாகவும் இருக்க வேண்டும்

நம்புங்கள்

  • தமிழனால் முடிந்தால்! தமிழால் முடியும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here