சிலாங்கூர் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 4246

எம்.எஸ்.மணியம்

பந்திங் ஜன 26,

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் இவ்வாண்டு முதலாம் வகுப்பில் 4246 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

கிள்ளான் மாவட்டத்தில் மிக அதிகமாக 1164 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள வேளையில் பெட்டாலிங் பெர்டானா மாவட்டத்தில் 753 மாணவர்களும், கோம்பாக் மாவட்டத்தில் 487 மாணவர்களும், உலு லங்காட் மாவட்டத்தில் 515 மாணவர்களும் முதலாம் ஆண்டில் தங்களது கல்வியை தொடங்கியுள்ளனர். மேலும் கோலாலங்காட் மாவட்டத்தில் 330 மாணவர்களும், கோலசிலாங்கூர் மாவட்டத்தில் 294 மாணவர்களும், பெட்டாலிங் உத்தாமா மாவட்டத்தில் 220 மாணவர்களும், உலு சிலாங்கூர்  மாவட்டத்தில் 253 மாணவர்களும், சிப்பாங் மாவட்டத்தில் 216 மாணவர்களும் சபாக் பெர்ணம் மாவட்டத்தில் 14 மாணவர்களும் முதலாம் வகுப்பில் சேர்ந்துள்ளனர்.  

கடந்த 2018 ஆம் ஆண்டு முதலாம் ஆண்டில் பதிந்து கொணட மாணவர்களின் எண்ணிக்கை 4247 ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 4447 ஆகவும் மாணவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் கடந்த ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கையின் முழு விபரம் கிடைக்கவில்லை என்றாலும் இவ்வாண்டு மாநிலத்தில் 4246 மாணவர்கள் பதிந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இதனிடையே கோலாலங்காட் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 325 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 330 ஆக முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிகை அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று கோலாலங்காட் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்ப்பள்ளியே தேர்வு, தமிழ்ப்பள்ளிகளை காப்போம் போன்ற தீவிர பிரச்சாரங்கள் அரசு சாரா இயக்கங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்று கருதுவதாக கோலாலங்காட் மாவட்ட

தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டமைப்புத் தலைவர் ருசேந்திரன், தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி ஆதரவாளர் சங்கப் பொறுப்பாளர் ராஜசேகரன் தெரிவித்தனர்.

தமிழ்ப்பள்ளிகளில் இது போன்று மாணவர்களின் எண்ணிகையின் அதிகரிப்பு அனைத்து மாவட்டங்களில் இருக்க வேண்டும் என்பதோடு வரக்கூடிய ஆண்டுகளிலும் அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிகையை அதிகரிக்க பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், அரசு சாரா இயங்கங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பெற்றோர்கள் முழு ஆதரவை வழங்க

வேண்டும் என்று சுங்கை மங்கீஸ் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராஜா முனுசாமி, தெலுக் பங்ளிமா காராங் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வெண்மணி, ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கணேசன்,

 கேரித்தீவு மேற்குத் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கமலக்கண்ணன், சுங்கை சீடு தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மனோகரன், பள்ளி மேலாளர் வாரிய உறுப்பினர் நாதன் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here