இயங்கலை வழி பயில்வதில் மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைக் களைய கல்வி அமைச்சு முன்வர வேண்டும் !

டில்லிராணி முத்து

கோலசிலாங்கூர், ஜன. 24-

கோவிட்-19 பெருந்தொற்று, நடமாட்டுக்கட்டுப்பாடு ஆணை, அவசரகால சட்டம் என எல்லாமே சேர்ந்து கல்வியைப் பெரிதும் பாதித்துள்ளது. இந்த நிலையில் கடந்தாண்டும், இவ்வாண்டுத் தொடக்கத்திலும் ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் இயங்கலை (கூகுள் மீட்) வழி கல்வி கற்பர் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது குறித்து பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அம்சம் கருதி ஐந்தாம் படிவ மாணவர்களைத் தவிர்த்து மற்ற மாணவர்கள் வீட்டிலிருந்தே இயங்கலை வழி பள்ளிப் பாடங்களைக் கற்பர் என்ற கல்வி அமைச்சின் முடிவு, பல விஷயங்களைப் புறந்தள்ளி விட்டதோ என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

புறநகர் பகுதிகளில் உள்ள அதிகமான பெற்றோர்களிடம் விவேகக் கைப்பேசி கிடையாது . அப்படியே இருந்தாலும் அவர்கள் வேலைக்குக் கொண்டு சென்று விடுவர். இந்த நிலையில் எவ்வாறு அவர்களது பிள்ளைகள் இதனைக் கொண்டு இயங்கலை வகுப்பில் பங்கேற்க முடியும் என்று கோலசிலாங்கூர் மாவட்ட மன்ற மேனாள் உறுப்பினர் தளபதி துரைசாமி மற்றும் தமிழ்ப்பள்ளி ஒன்றின் பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர் பூபாலன் மருதை ஆகியோர்  கேள்வி எழுப்பினர். ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால், அவர்கள் அனைவரும் இயங்கலை வழி பாடம் பயில முடியாத நிலை ஏற்படுகிறது என்றும் அவர்கள் கருத்துரைத்தனர்.

இந்தக் கொடிய நோயும் அதனால் ஏற்படும் சிரமங்களும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்பதனைக் கண்டறிய அரசாங்கம் தவறி விட்டது என்று புக்கிட் மெலாவத்தி தொகுதி இந்தியர் சமூகத் தலைவர் குணசேகரன் சுப்பிரமணியம் மற்றும் சமூக ஆர்வலர் வேலாயுதம் முனிசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

கல்வி அமைச்சு குறைந்த பட்சம் பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச கையடக்கக் கணினி வழங்க முன்வந்திருக்க வேண்டும் என்பதனை அவர்கள் சுட்டிக் காட்டினர். இப்போது பல மாணவர்கள் தங்களிடம் விவேகக் கைப்பேசி போன்ற வசதிகள் இல்லாததால் அவர்களிடம் ஒருவித மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது என்றும் கூறினர்.

தோட்டப்புறங்கள், கிராமப்புறங்களில் இணைய வசதி சிறப்பாக இல்லை என்பதால் மாணவர்கள் இயங்கலை வழி பயில்வதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் என்று கோலசிலாங்கூர் மாவட்ட மன்ற உறுப்பினர்கள் இராஜசேகரன் தங்கவேலு, லானுகா வேலன், சமூக ஆர்வலர்கள் வேளாங்கண்ணி மாசிலாமணி, நெடுஞ்செல்வம் முனியாண்டி, ஜோசப் அமல்தாஸ் ஆகியோர் கருத்துரைத்தனர்.

சில இடங்களிலுள்ள சமூக மையங்களில் கணினி வசதி, இணைய வசதி இருந்தாலும் நடமாட்டுக் கட்டுப்பாடு ஆணையால், மாணவர்கள் அங்கு செல்ல இயலவில்லை. எனவே தான், பி40 தரப்பு மாணவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் வசதி செய்துத் தர கல்வி அமைச்சு முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கருத்துரைத்தனர்.

கல்வி அமைச்சு மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களைப் பயிலலாம் என்று அறிவித்து விட்டது. நகர்ப்புறங்களிலுள்ள வசதி மிக்கவர்களுக்கு வேண்டுமானால் இது பொருந்தும், ஆனால் வசதி குறைந்தவர்களின் நிலையை அமைச்சு கவனிக்கத் தவறிவிட்டது என்று புக்கிட் மெலாவத்தி ஆற்றல்மிகு பெண்கள் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மணிமாலா இராமசாமி மற்றும் தமிழ்ப்பள்ளி ஒன்றின் மேனாள்  பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர் சக்திவேல் ஆறுமுகம் ஆகியோர் தெரிவித்தனர். அதிலும் தேர்வு எழுதும் மாணவர்களின் நிலை இன்னும் சிக்கலாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே பொருளாதாரச் சிக்கலில் உள்ள பெற்றோர்கள், இப்போது பிள்ளைகளுக்கு இணைய வசதி, விவேகக் கைப்பேசி, கணினி போன்றவற்றை வாங்கித் தர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் ரவிச்சந்திரன் ஆதிமூலம், அந்தோணி மாசிலாமணி ஆகியோர் கூறினர். அதிலும் பெற்றோர்கள் வீட்டில் ஆசிரியர்களாக மாற வேண்டியுள்ளது என்பதனையும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.

கல்வி போதிப்பது என்பது அனைவராலும் செய்யக் கூடிய பணி அல்ல. அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டுமே ஈடுபட முடியும். எனவே தற்போது பள்ளி ஆசிரியர்களும் இயங்கலை வழி போதிப்பதில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் சிரமத்தைப் பெற்றோர்களும் உணர்கின்றனர்.

இப்போது சின்னஞ்சிறிய மாணவர்களையும் இயங்கலை வழி கல்வி கற்க வைத்து, அவர்களையும் பெற்றோர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டது இன்றைய கல்வி நிலை.

எனவே கல்வி அமைச்சு பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை உடனடியாகக் களைய ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். இல்லையேல் நாம் கல்வி வளர்ச்சியில் மேலும் பின் தங்கிவிடுவோம். இந்த அச்சமானது அனைவரிடத்திலும் இப்போது பற்றி நிற்கிறது என சம்பந்தப்பட்ட அனைவரும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here