கோரணி பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டில் கல்வி நடவடிக்கைகள் படு மோசமாக நிலைக்குத்தி போனதை நாம் அறிவோம். இந்நிலையினால் தமிழ் மொழி கற்றல் கற்பித்தல் நடவடிக்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும். நாடு தழுவிய நிலையில் சிதறிக் கிடக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பலர் தங்கள் சுய முயற்சியிலேயே தமிழ் பாடத்துக்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.
அவர்களின் ஆயத்தத்துக்கு உதவும் வகையில் ஆசிரியர் ஜான்சன்
விக்டர் கல்வி வங்கி என்ற வலைப்பூவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வினவப்பட்ட 30 கட்டுரைத் தலைப்புகளுக்கு மாதிரிக் கட்டுரை எழுதிப் பதிவேற்றியுள்ளார். தமிழ்ப்பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் அவர் இவற்றை எழுதியுள்ளார்.
நான்காம், ஐந்தாம் படிவ மாணவர்கள் அத்தளத்துக்குச் சென்று கட்டுரைகளை வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதன் தொடர்பில் சந்தேகங்கள் இருந்தால் கட்டுரையின் அடியில் உள்ள கருத்துப் பெட்டியில் (Comment Box)-இல் எழுதலாம். இடைநிலைப் பள்ளிகளின் தமிழாசிரியர்களும் தாள் திருத்துபவர்களும் கட்டுரைகள் தொடர்பில் விமர்சனம் எழுதலாம். இது, மாணவர்கள் மேலும் சிறந்த கட்டுரைகளை எழுதுவதற்கு உதவும்.
இவர்,தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பல விநாடி விடைகளையும் கூகில் படிவத்தில் தயாரித்து வைத்திருக்கிறார். அவற்றுக்கான தொடுப்புகளும் கல்வி வங்கி வலைப்பூவில் பதிவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் பதிலளித்து 40 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். இந்தச் சான்றிதழ்களைப் பெற மாணவர்கள் தங்கள் உண்மையான பெயர்களையும் மின்னஞ்சல் முகவரிகளையும் வழங்க வேண்டும்.
நீங்கள் சம்பந்தப்பட்ட வலைப்பூவை http://kalvivangki.blogspot.com/ என்ற தொடுப்பில் அணுகலாம்.