தமிழ்ப்பள்ளி 4ஆம் ஆண்டு வரலாற்றுப் புத்தகத்தைத் திருத்தி  அச்சடிப்பதில் ஏன் அத்தனை அலட்சியம்?

கவின்மலர்

 பாரிட் புந்தார்,பிப்.05- 

தமிழ்ப்பள்ளிகளுக்கான நான்காம் ஆண்டு வரலாற்றுப் பாட நூலில் காணப்படும் நமது பாரம்பரிய உறவு முறைகளை இருட்டடிப்புச் செய்யும் வகையில் பிற மொழியில் இடம் பெற்றுள்ள சொற்களைத் தமிழுக்கு மாற்றம் செய்து திருத்தமான புத்தகங்களை  உடனடியாக அச்சிட்டுத் தருவதில் கல்வி அமைச்சுக்கு ஏன் அத்தனை அலட்சியப் போக்கு என்ற கேள்வி சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த 2020 கல்வி ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்த இந்தப் பாடநூலின் 21ஆவது பக்கத்தில் இடம் பெற்றிருந்த உறவு முறைகளின் பெயர்கள் டத்தோ, நெனெக், அபாங், காக்கா, அடிக் என்று மலாய் மொழியில் அச்சிடப்பட்டிருந்தது. இந்தக் குறைபாடுகளை அறிந்து சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும்  கொந்தளிக்கத் தொடங்கினர். இந்நூலின் இடம்பெற்றுள்ள குடும்ப உறவு முறைகளைக் குறிப்பிடும் பக்கத்தில் தமிழில் சுட்ட வேண்டிய அனைத்து உறவு முறைகளும் மலாய்மொழியின் நேரடி ஒலி மாற்றங்கள் செய்யப்பட்டு அச்சிடப்பட்டிருந்தன.பிற மொழி உறவு முறைகளை தமிழ் எழுத்துக்களில்  எழுதப்பட்டிருந்தன. இது வாழைப் பழத்தில் ஊசி ஏற்றும் வேலை என்ற கண்டனக் குரல் நாடெங்கும் எதிரொலித்தன. அதனைத் தொடர்ந்துனதற்காக தமது வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்ட கல்வி அமைச்சு அந்நூலுக்கு பதிலாக தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், அக்காள் எனத் தமிழில் மாற்றம் செய்து புதிய நூல்கள் திருத்தங்களுடன் அச்சிட்டுத் தரப்படும் என்று அப்போது உறுதி கூறியது.

ஆனால், தற்போது ஓராண்டு கடந்த பின்னரும் தீர்வு ஏற்படாமல் பழைய நூலே மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் சமுதாயத்தின்  குரலுக்கு கல்வி அமைச்சு மதிப்பளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. வழக்கமாக இத்தகைய பிழைகள் ஏற்படும் போது கல்வி அமைச்சு ஒரு சொல் பிழையாக இருந்தால்  ஒட்டி( ஸ்டிக்கர்)களையோ அல்லது பிழைகள் அதிகமாக இருந்தால் ஒரு முழு பக்கத்தையோ அச்சிட்டு பள்ளிகளுக்கு அனுப்பும். இதன் வழி அவசர தீர்வுகள் காணப்படும். தேவை ஏற்படும் போது  முழு  புத்தகத்தையும் திருத்தம் செய்து அச்சிட்டு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும். வழக்கில் இருந்தது.ஆனால், இச்சிக்கலில் கல்வி அமைச்சு அத்தகைய நடைமுறைகள் எதனையும் பின் பற்றவில்லை என்றே தெரிகிறது. 

அதேவேளையில் இப்பாட நூல் வெளிவருவதற்கான பொறுப்பை ஏற்றுள்ள கல்வி  அமைச்சின் பாடத்திட்டப் பிரிவும்,( Bahagian Buku Teks ) கருவளம் மற்றும் கல்வித் தொழில் நுட்பப் பிரிவும்( Bahagian Sumber Dan Teknologi Pendidikan) தங்களின் கடமைகளைச் செய்யாமல் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்ற கேள்வி எழாமல் இல்லை. மேலும் அப்பிரிவுகளில் பணியாற்றும் இந்திய அதிகாரிகளின் பொறுப்புணர்வும் செயல்பாடும் கேள்விக்குறியாகி நிற்கின்றது. எனவே மேலும் காலம் கடத்தாமல் இந்நூலின் அச்சடிப்பிற்கு பொறுப்பேற்றுள்ள டேவான் பஹாசா டான் புஸ்தாக்கா உடனடியாக புதிய நூல்களை  வெளியிட நெருக்குதல் தர வேண்டும் என்று சமுதாயம் எதிர்பார்க்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here