விற்பனைக்கான பூக்கள் வீணாகிப்போனதால் வீசப்பட்ட துயரம்

எஸ்.வெங்கடேஷ் / ராமேஸ்வரி ராஜா

பூந்தோட்டக் காரர்களின் சோகக் கதை

 விழாக்களும் இல்லை விற்பனையும் இல்லை

 கடன் வாங்கிப் பயிர் செய்யும் சூழ்நிலை

 அரசாங்கத்தின் சிறப்பு உதவி அவசியம்

கேமரன் மலை, பிப். 9 :

கோவிட் 19 வைரஸ் பெருந்தொற்றின் தாக்கம் எங்களின் வியாபாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கேமரன் மலை வட்டாரத்தில் பூக்களை பயிரிட்டு வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

நான் கடந்த 1௦ ஆண்டுகளாக பூ பயிரிடும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றேன். எனது தோட்டம் கேமரன் மலை ப்ளு வேலி பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நான் மூன்று ஏக்கர் நிலத்தில் சாமந்திப் பூக்களைப் பயிரிட்டு அதனை மொத்தமாக கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயா, சிரம்பான் ஆகிய முக்கிய நகரங்களுக்கு இடைத்தரகர் இல்லாமல் ஏற்றுமதி செய்கின்றேன்.

பொதுவாக ஆலயங்கள் மற்றும் சமயம் சார்ந்த அம்சங்களுக்கு இந்த பூக்கள்பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பூச்செடியை பயிர் செய்வதற்கு பூக்களைப் பெறுவதற்கு சுமார் நான்கு மாதங்கள் வரை தேவைப்படும்.

இந்நிலையில், நான் வியாபாரம் தொடாங்கிய நாள் முதல் இதுவரையில் கடந்த ஆண்டுதான் மிகப் பெரிய சவாலை எதிர்நோக்கினேன். கோவிட் பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்ட்டு ஆணை அமல்ப்படுத்தப்பட்டது. எங்கள் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக அப்பொழுது நாங்கள் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும்

சித்திரப் புத்தாண்டை முன்னிட்டு பிரத்யேகமாக கூடுதல் அளவில் பூக்களை பயிரிட்டிருந்தோம். ஆனால், சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ஆணை அமல்படுத்தப்பட்டதையடுத்து அந்த பூக்கள் அனைத்தும் விற்க முடியாமல் போனது. உணவுப்பொருட்கள் என்றாலும் கூட அதனை பிறருக்கு இலவசமாக வழங்கிவிடலாம். ஆனால், பூத்திருந்த பூக்களை என்ன செய்வது? வேறு வழி இல்லாமல் பூக்களை வீசும் துயரம் ஏற்பட்டதாக முகுந்தன் ஆறுமுகம் தனது மனக்குமுறலை வெளிபடுத்தினார்.

இதனையடுத்து, நாட்டில் மீட்சியுறும் நடமாட்டக்கட்டுப்பாட்டு ஆணை அமல்ப்படுத்தப்பட்டபோது ஆலயங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. அதன் பின்னர்விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி பெருநாள் போன்ற கொண்டாட்டங்களுக்கு பூக்கள் தேவைப்பட்டதால் பூ வியாபாரம் மெல்ல மெல்ல மீட்சியடைய தொடங்கியது. ஆனாலும், முன்னதாக ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக கடன் பெற்றுதான் பூக்களை பயிர்செய்தோம்.

2௦2௦ ஆம் ஆண்டு யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு அமைந்துவிட்ட நிலையில் இவ்வாண்டு மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பும் என எதிர்பார்த்திருந்தோம்.ஆனால், தொற்றின் பாதிப்பு மீண்டும் அதிகமாகிவிட்ட காரணத்தினால் இரண்டாவதுமுறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் பொங்கலுக்கு ஒரு நாளுக்கு முன்னதாகத்தான் இந்த ஆணை அமல்ப்படுத்தப்பட்டது.

இதனால் மீண்டும் எங்கள் வருமானம் பாதிப்படைந்தது. பொங்கலுக்காக நாங்கள் வாய்மொழி வழியாக முன் பணம் ஏதும் பெறாமல் சில ஆர்டர்கள் பெற்றிருந்தோம். அந்த ஆர்டர்களும் இறுதி நேரத்தில் ரத்தானது. நாங்களும் பயிர்செய்திருந்த பூக்களை மீண்டும் வீசும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம் என கமலா முத்துசாமி வேதனைத் தெரிவித்தார்.

தற்பொழுது இந்த ஆணை தொடரப்படுவதால் இந்த ஓரிரு வாரங்களில் எங்கள் பூ வியாபாரம் 6௦ விழுக்காடுவரை பாதிப்படைந்துள்ளது. எங்கள் தோட்டத்தில் முன்பு 6 தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தியிருந்தோம். ஆனால், தற்பொழுது வியாபாரம் இல்லாத காரணத்தினால் இருவரை வேலைநிறுத்தம் செய்துவிட்டோம். இச்சூழ்நிலையில், சிரமத்தை எதிர்நோக்கியுள்ள எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு உரம், செடிக்கான மருந்து போன்ற உபகரணங்களை வாங்குவதில் அரசாங்கம் சிறப்புக் கழிவு வழங்கவேண்டும்.

அதோடு, தற்பொழுது விவசாய தோட்டங்களுக்கான மின்சார மாதாந்திர கட்டணத்தில் பிரத்யேக விழுக்காட்டில் கழிவு வழங்கப்பட்டுள்ளது. அந்த சிறப்புக் கழிவுத் தொகையை இன்னும் உயர்த்தினால் எங்களுக்கு பேருதவியாக இருக்கும் என அவ்விருவரும் கேட்டுக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here