மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிக்குக் கூடுதல் ஒரு ஏக்கர் நிலம் உறுதியானது- பேராசிரியர் இராமசாமி அறிவிப்பு.

செ.குணாளன்

பட்டர்வொர்த், பிப் 05 –

பினாங்கு மாநிலத்தில் உள்ள பெரிய பள்ளிகளில் ஒன்றான மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் வாரியக்குழு செய்திருந்த நீண்ட விண்ணப்பத்திற்கு கிடைந்த அங்கிகாரமாக பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி ஒரு ஏக்கர் கூடுதல் நிலம் உறுதியானதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிக்கு வருகை அளித்த பேராசிரியர் இராமசாமி , பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்தபின், பினாங்கு மாநில அரசாங்கம் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிக்கான புறப்பாட நடவடிக்கைக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதை உறுதிப்படுத்தியதுடன், பள்ளி வளாகத்தில் கட்டப்படும் 25 லட்சம் வெள்ளி பல்நோக்கு மண்டபத்திற்கு மேலும் ஒரு பெரிய நிதியை மாநில அரசாங்கத்திடம் இருந்தும், தனது துணை முதல்வர் அலுவலக நிதியிலிருந்து குறிப்பிட்ட நிதியை ஒதுக்கி தருவதாக அவர் கூறினார்.

பினாங்கு மாநில முன்னாள்  முதல்வர் லிம் குவான் எங் மற்றும்  துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி  2018 ஆம் ஆண்டு அப்பள்ளிக்கு வருகை தந்தபோது  விளையாட்டுத் திடல் அமைப்பதற்கு 1 ஏக்கர் நிலம் வழங்குவதாக அளித்த வாக்குறுதி இன்று நிறைவேற்றப்பட்டது. மாவட்ட மன்றம்  மற்றும் நில அலுவலகத்திடம் இருந்து அதிகாரத்துவ ஒப்புதல் கடிதம் பெற்ற பின்னர் அந்நிலத்தைப் பள்ளி நிர்வாகம் தங்களின் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்   என்று இன்று மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிக்கு வருகையளித்த போது பேராசிரியர் ப.இராமசாமி குறிப்பிட்டார்.

தொடர்ந்து மாக் மண்டின் பள்ளி வளாகத்தில் பல்நோக்கு பொது மண்டபம் கட்டுவதற்காக 25 இலட்சம் வெள்ளி நிதி தேவைப்படும் வேளையில், பள்ளியின் வாரியக்குழுத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலம் தலைமையில் 15 இலட்சம் வெள்ளி திரட்டப்பட்டு, மேலும் 10 இலட்சம் வெள்ளி தேவைப்படுவதால் பினாங்கு மாநில அரசாங்கத்திடம் இருந்து கணிசமான தொகையைப் பெற்றுத் தருவதாகவும்  பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி கூறினார்.  அரசாங்க பொறுப்பில் உள்ளவர்கள் தங்களின் கடமையைச் செய்வதிலிருந்து விலகி விடாமல், மக்களின் தேவைகளை அரசாங்கத்தின் அதிகாரத்துவ கூட்டத்தில் குரல் எழுப்பி உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாம் வாய்திறந்து கேட்டால் மட்டுமே நமக்கான தேவைகள் கிடைக்கப்பெறும் என்று கூறிய பேராசிரியர் இராமசாமி, தாம் பினாங்கு மாநிலத்தில் 13 ஆண்டுகள் அரசாங்கத்தில் இருந்துள்ளேன், இந்த காலகட்டத்தில் 7 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் பெற்றுத் தந்துள்ளேன். மேலும் பல்வேறு இந்தியர் பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டுள்ளேன் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில்  பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ்

முனியாண்டி, மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் வாரியக்குழுத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.அருணாசலம், துணைத் தலைவர் கோ.சண்முகநாதன், பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக் குழுத் தலைவர் டத்தோ டாக்டர் கை.அன்பழகன், செயலாளர் கு.கிருஷ்ணசாமி, மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் த.யாளிஸ்வரன், பள்ளியில் நிர்வாகக்குழு, ஆசிரியர்கள் மேலும் பலர் கலந்துகொண்டனர். பினாங்கு மாநிலத்தில் கல்வித் தரத்திலும், புறப்பாட நடவடிக்கையிலும் சிறந்து விளங்கும் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி, மாநிலத்தின் பெரிய தமிழ்ப்பள்ளி என்பதால் பள்ளியின் தேவைகள் உடனுக்குடன் கவனிக்கப்படுவது அவசியம் என்று பேராசிரியர் இராமசாமி கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 10 குறைவான மாணவர்கள் இருந்தால், அந்த பள்ளி மூடுவிழா காணும் நிலைமைக்குத் தள்ளப்படும், அதுபோன்ற சூழ்நிலையில் நாம் சரியாகச் சிந்தித்து, திட்டமிட்டு, பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்ட தயாராகக் களம் இறங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மாக் மண்டின் பள்ளியின் வாரியக்குழுவின் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.அருணாசலம் வருகையாளர்களுக்குப் பள்ளியின் வளர்ச்சியைச் சுற்றிக் காண்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here