தேர்தல் கமிஷனை மாற்றியமைத்து, மியான்மரில் புதிதாக தேர்தல் நடத்தப்படும் என ராணுவ தளபதி ஆங் ஹலேங் கூறியுள்ளார்.
மியான்மர் நாட்டில் நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதிய நாடாளுமன்றம் கடந்த 1-ஆம் தேதி கூட இருந்த நிலையில், அதிரடியாக ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
ஆனால், அதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுத்து, கைது செய்து வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் தலைவரான ஆங் சான் சூ கி உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக்கோரி 4- ஆவது நாளாக போராட்டங்களை நடத்துகின்றனர்.
ராணுவ புரட்சி பற்றி இதுவரை மவுனம் காத்து வந்த தளபதி மின் ஆங் ஹலேங், நேற்று முன்தினம் இரவு தனது மவுனத்தை கலைத்து டி.வி. மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் தேர்தலில் நடைபெற்ற மோசடியால் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை நியாயப்படுத்தினார். தேர்தல் மோசடிகளை தேர்தல் கமிஷன் விசாரிக்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
தேர்தல் கமிஷனை மாற்றியமைத்து, அந்த நாட்டில் புதிதாக தேர்தல் நடத்தப்படும் என அவர் உறுதி அளித்தார்.