நடனம் ஆடி மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்! – புனே

கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்தபின், பள்ளிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில், ஊரடங்குக்கு பின் முதன்முறையாக பள்ளிக்கு வந்த மாணவர்களை, ஆசிரியர்கள் நடனம் ஆடி வரவேற்ற சம்பவம் புனேயில் நடந்துள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது.

கொரோனாவால், உலகம் முழுவதும் ஏதோ இரும்பு சங்கிலி கொண்டு பிணைக்கப்பட்டது போல ஆகிவிட்டது. கடந்த ஓராண்டாக கொரோனா வைரஸின் பிடியில் நாம் சிக்கியிருந்த நிலையில், தற்போது நிலைமை ஓரளவு சரியாகி வருகிறது.

படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாக அறியப்படும் மஹாராஷ்டிராவில், கொரோனா பரவல் அதிகம் இருந்த நிலையில், தற்போது நிலைமை கட்டுக்குள் வந்ததால், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

நவம்பர் 3 ஆவது வாரத்தில் 9, 10, 11  பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஜனவரி கடைசி வாரத்தில் 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஆன்லைன் கல்வியில் பழகிய மாணவர்கள், தற்போது பள்ளி சென்று கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்குக்கு பின் பள்ளிக்கு வந்த மாணவர்களை, ஆசிரியர்கள் நடனம் ஆடி வரவேற்றனர். அதனை மாணவர்கள் மட்டுமல்ல நெட்டிசன்களும் ரசிக்க, புனே பள்ளியில் நடந்த இந்த சம்பவம் தற்போது இந்தியா முழுவதும் வைரலாகி உள்ளது.

புனேயில் பிரபாத் சாலையில் உள்ள சிம்பியோசிஸ் என்ற பள்ளியின் மாணவர்கள் முதன்முறையாக பள்ளிக்கு வந்தபோது, ஆசிரியர்களும், பள்ளியில் வேலைபார்க்கும் பணியாளர்களும் இணைந்து ‘வெல்கம் டான்ஸ்’ ஆடி வரவேற்றனர்.

இதனை மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நின்று பார்த்து ரசித்தனர். நடனம் முடிந்ததும், மாணவர்கள் தங்கள் கைகளை தட்டி ஆசிரயர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது மைக்ரோ பிளாக்கிங் தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here