சாஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளியின் தொடர் சாதனை.

பவநி

சாஆ, பிப்ரவரி 11-

விடாமுயற்சி என்றும் வெற்றியின் திறவுகோல் என்பதனை நிருபித்துக் காட்டியுள்ளனர், நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள். ஜொகூரில் அமைந்துள்ள சாஆ எனும் சிற்றூரில் அமைந்துள்ள சாஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளி, இன்று உலக அளவில் பல புத்தாக்கப் போட்டியில் பங்கெடுத்து வெற்றி வாகைச் சூடியிருப்பது நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய தகவல்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகமே கோவிட் தொற்றுநோயால் அல்லலுற்று வீட்டில் முடங்கிக் கிடந்த போதிலும் தேசிய வகை சாஆ கூட்டுத்தமிழ்ப்பள்ளி அந்த தடையைத் தகர்த்தெறிந்து பல புத்தாக்கப் போட்டிகளில் கால்தடம் பதித்துள்ளனர். உலக அளவிலான IIID புத்தாக்கப் போட்டியில் நான்கு அணிகளாகப் பங்கேற்றனர். அப்போட்டியில் ஆசிரியர் அணி, முதல் குழு (ஆண்டு 4 மாணவர்கள்) மற்றும் இரண்டாம் குழு (ஆண்டு 5 மாணவர்கள்) வெண்கலப் பதக்கம் வென்றனர். மாறாக, ஆறாம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் குழு மாணவர்கள் வெள்ளி பதக்கம் வென்று பெருமைச் சேர்த்தனர். தொடர்ந்து, இந்தோனேசியா அளவிலான IYIA 2020 புத்தாக்கப் போட்டியில் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கமும் வென்று சிறப்பு விருது நிலைக்குத் தேர்வாகினர்.

இதனிடையே, சாஆ தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 2019 ஆம் ஆண்டு இந்தோனேசியா ஜகார்த்தாவில் நடைப்பெற்ற அனைத்துலக இளம் ஆய்வாளர் புத்தாக்கக் கண்டுபிடிப்புக் கண்காட்சியில் தங்கம் வென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வெற்றிக்கு முழு உறுதுணையாக இருந்த பள்ளியின் தலைமையாசிரியர் மு.ஜீவராணி, அம்மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர் சத்தியசீலன், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும்இவ்வேளையில் நன்றியினைத் தெரிவித்துக் 

கொள்கிறோம். 

“தாய்மொழியே நம் சிறப்பு, தமிழ்ப்பள்ளியே அதற்குப் பொறுப்பு.” தமிழ்ப்பள்ளியே நம் தேர்வாகட்டும்!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here