உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பைசர் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் பைசர் தடுப்பூசி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இதற்கிடையே, அஸ்ட்ரா ஜெனகா- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த கோவேக்ஸ் தடுப்பூசியும் உலக அளவில் கவனம் பெற்றது. ஏனெனில், இந்த தடுப்பூசிகளை பராமரிப்பது எளிது என்பதால், வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு இந்த தடுப்பூசிகள் பெரிதும் பயனாக இருக்கும் என்று நிபுணர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், அஸ்ட்ரா ஜெனகா – ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
அஸ்ட்ரா ஜெனகா – எஸ்கேபையோ (கொரிய குடியரசு) சீரம் இன்ஸ்ட்டிடியூட் நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.