பன்முகத் திறமைகொண்ட ஆசிரியர் குமணன் !

செ.குணாளன்

ஜூரு, பிப் 17 –

ஜூரு தமிழ்ப்பள்ளியில் பன்முகம் கொண்ட திறமைகொண்ட  ஆசிரியராக வலம் வரும் ஆங்கில மொழி ஆசிரியர் குமணன் கணேசன் தன் சொந்த முயற்சியில் மாணவர்களின் இயங்கலைப் பாடத்திற்கு உதவி வருகிறார்.

கோவிட்-19 தொற்று நோயின் தாக்கத்தால் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாத நிலையில் அவர்களுக்கான மலாய்,ஆங்கில கல்வி பாடத்தைத் தனது சொந்த முயற்சியால் தயார் செய்து மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவி வருகிறார் ஆசிரியர் குமணன் கணேசன்.

தேசிய மொழி மற்றும் ஆங்கில மொழிப் பாடப் போதனை ஆசிரியரான குமணன் 4 முதல் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இயங்கலை வாயிலாகப் பள்ளி பாடங்களைப் போதித்து வருவதுடன் கல்வி அமைச்சின் பிடிபிஆர் (PdPR) பாடத் திட்டத்திற்கு ஏற்ப சொந்தமான முயற்சியில் மாணவர்கள் எளிய முறையில் ஆங்கில தேசிய மொழி மற்றும் தேசிய மொழிப் பாடத்தை நூலாகத் தயார் செய்து ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்.

பள்ளிகள் கல்வி கற்காமல் மாணவர்கள் பல மாதங்களாக முடங்கிக் கிடக்கும் நிலையில்  ஜூரு தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் தேசிய மொழிப் பாடத்தில் பின் தங்கி விடக்கூடாது எனும்  நோக்கத்தில் மாணவர்கள் தங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளான  ஜூரு தோட்டம் மற்றும் அருகில் உள்ள தாமான் குடியிருப்பு  பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்குத் தனது சொந்த தயாரிப்பிலான பாடப் புத்தகங்களை இலவசமாகவே வழங்கி வருவது ஆசிரியர் குமணனின் கல்வியியல் முறைக்குத் திருப்பு முனையாக அமைவதாகப் பெற்றோர்கள் புகழாரம் சூட்டினர்.

செக்கு கு ( Cikgu Ku ) எனும் அடை மொழியுடன் யூ ட்யூப் காணொளியின் மூலமாக தமது மாணவர்களுக்கு இயங்கலை  முறையிலான கல்விபோதனை போதித்து வரும் ஆசிரியர் குமணன் கணேசன் ஆங்கில மொழியின் இலக்கணம், ஆங்கில மொழியில் பிழையின்றி கட்டுரைகள் எழுத்தும் முறைகளை மாணவர்கள் கற்பித்து மாணவர்களைச் சிறந்த முறையில் உருவாக்கி வருகிறார் என்றால் அது மிகையாகாது.

அதே வேளையில் யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டி நூலாகத் தனது சொந்த படைப்பிலான புத்தகங்களைத் தயார் செய்து தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குக் கொடுத்து வருகிறார் ஆசிரியர் குமணன். தனியார் நிறுவனம் ஒன்றுக்குப் புத்தகம் வெளியிடவும் பல ஆண்டுகளாகப் பாடப் புத்தகங்களைத் தயார்ப் படுத்தி வெளியிட்டும் வெற்றி கண்டவர் ஆசிரியர் க.குமணன் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறை தமிழ்ப்பள்ளியிலிருந்து மாற்றலாகி ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வருகை புரிந்த அவர் சில மாதக் காலத்தில் பள்ளிக்காகத் தனியார் வானொலி நிலையம், பள்ளி சுவர்களை 3டி சித்திரங்களை வரைந்து பள்ளியை அழகுபடுத்தி தன் சமூகக் கடப்பாட்டையும் வெளிப்படுத்தி வருகிறார். மேலும் இயங்கலை வாயிலாக மாணவர்களுக்கு வகுப்புதனை நடத்துதல் ஆகியவற்றை  ஜூரு தமிழ்ப்பள்ளியின் நிர்வாகம் மற்றும் பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறார் ஆசிரியர் க.குமணன்.

ஜூரு தமிழ்ப்பள்ளி இவ்வட்டாரத்தில் மிகப்பழமையான பள்ளியாக இருக்கும் பட்சத்தில் கற்றல் கற்பித்தலில் சிறந்த பள்ளியாக மாற்றுவதில் ஆசிரியர் குமணன் பள்ளியின் தலைமை ஆசிரியரின் ஒத்துழைப்போடு எடுத்துள்ள முயற்சி பாராட்டக்குறியது என மாணவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பினாங்கு அறிவில் பல்கலைகத்தில் கல்வித்  துறையில்  இளங்கலை பட்டம் பெற்ற ஆசிரியர் க.குமணன் பன்முக திறன் படைத்தவர். நாடக தயாரிப்பு, நடித்தல், பாடலுக்கு இசை அமைத்தல், தொலைக்காட்சி தொடரில் நடிப்பது, பாடல் ஒருங்கிணைப்பு, ஒளி நாடாவில் (குறுவட்டு ) பாடல்களைப் பதிவு செய்தல், கிரிக்கெட்  அணிக்கான மாநில பள்ளிகளுக்கிடையிலான போட்டியில் பயிற்சியளிப்பது, மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் ஓட்டுவது ஆகிய வித்தியாசமான பன்முக திறமைகளுடன் வலம் வருகிறார் ஆசிரியர் குமணன் கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தனிப்பட்ட திறமைகளைத் தான் மட்டும் மேற்கொள்ளாமல், மாணவர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் போதிக்க வேண்டும் என்று தனது சமூகக் கடப்பாட்டைச் செய்து வருகிறார். பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமியிடம் தான் எழுதி அச்சிட்ட பாடப் புத்தத்தையும் வழங்கியுள்ளார் ஆசிரியர் க.குமணன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here