தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 570, தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளைப் பராமரித்து வருகிறது. அங்கு பாஸ்டேக் முறை கடந்த 2016- ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் வாகன ஓட்டிகள் கேட்டுக்கொண்டதால் படிப்படியாக அரசு காலஅவகாசம் வழங்கிவந்தது.
இதற்கிடையே, கடந்த 15- ஆம் தேதி நள்ளிரவு முதல் பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் அரசு பஸ்கள், சரக்கு வாகனங்கள், வாடகை கார்கள் உள்ளிட்ட 80 சதவீதம் வாகன ஓட்டிகள் பாஸ்டேக் முறைக்கு மாறிவிட்டனர். மீதமுள்ள 20 சதவீத வாகனங்கள் மட்டும் இந்த முறைக்கு மாறவில்லை.
சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் ஸ்டிக்கர் விற்பனைக்கு தனியாக சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ள நீதிபதிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோருக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களது அங்கீகரிக்கப்பட்ட வாகனத்துக்கு பாஸ்டேக் ஸ்டிக்கர் வழங்கி உள்ளோம்.
சுங்கச்சாவடிகளைச் சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் தங்களுடைய சொந்த கார்களுக்கு மாதம் ரூ.275 செலுத்தி மாதாந்திர சலுகை அட்டை பெற்றுக்கொண்டால் எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று வரலாம்.