புதுச்சேரி ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்பு!

தெலங்கானா ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியின் 31 ஆவது துணைநிலை ஆளுநராக கூடுதலாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுடன் மோதல்போக்கில் இருந்து வந்த நிலையில், துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டார். இதையடுத்து, தெலங்கானா ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜனிடம், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பு கூடுதலாக அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையான முறையில் இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில், புதுச்சேரியில் முதலைமச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, சபாநாயகர் சிவகொழுந்து மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி மாநில மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என தெரிவித்தார். மக்களுக்கான ஆளுநராக இருப்பேன் என்றும் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here