–ஈரான் அதிரடி அறிவிப்பு
அதன் ஒரு பகுதியாக, ஈரானின் அணுசக்தி மையங்களில் நடைபெறும் நடவடிக்கைகளை ஐஏஇஏ தொடா்ந்து கண்காணிப்பதற்கு ஏதுவாக, அங்கு கண்காணிப்பு நவீன கேமராக்களைப் பொருத்தி, அவற்றின் அன்றாடப் பதிவுகளை ஐஏஇஏ கண்காணிப்புக் குழுவிடம் அளிக்க ஈரான் சம்மதித்தது.
இந்த நிலையில், ஐ.நா. கண்காணிப்பாளா்களுக்கு அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை அளிப்பதற்குத் தடை விதிக்கும் தீா்மானம் ஈரான் நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பா் மாதம் நிறைவேற்றப்பட்டது.
தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள எண்ணெய் ஏற்றுமதி தடை மற்றும் சா்வதேச வங்கிப் பரிவா்த்தனைத் தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் மேற்கொள்ளாவிட்டால், ஐஏஇஏ-வுக்கு கண்காணிப்பு கேமரா பதிவுகள் அளிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்று அந்தத் தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொலைக்காட்சியொன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் முகமது ஜாவத் ஸரீஃப் கூறியுள்ளதாவது:
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி, சா்வதேச வங்கிப் பரிவா்த்தனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படாததால், நாடாளுமன்றத் தீா்மானத்தின்படி ஐ.நா. குழுவுக்கு அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு பதிவுகள் அளிப்பது நிறுத்தப்படும்.
இது, இந்த உலக நாடுளுக்கு எதிரான கெடுவோ, ஐஏஇஏ-வுக்கு எதிரான தடையோ இல்லை. இது ஈரான் நாடாளுமன்றத்துக்கும் அரசுக்கும் இடையிலான விவகாரம்.
ஈரானில் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது. இங்கு நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தை அரசு செயல்படுத்தியாக வேண்டும்.
அந்தச் சட்டத்தின் கீழ், இனி அதிகாரிகளால் ஐ.நா. பாா்வையாளா்களுக்கு அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை அளிக்க முடியாது.
இது சட்டரீதியிலான முடிவே தவிர, அரசியல் முடிவு அல்ல என்றாா் ஜாவத் ஸரீஃப்.
அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பு நாடுகள், ஜொமனியை உள்ளடக்கிய பி5+1 நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள பி5+1 நாடுகளும் ஒப்புக் கொண்டு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
எனினும், ஒபாமா ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுதாக முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் அரசு 2018-ஆம் ஆண்டு அறிவித்தது. ஒப்பந்தத்தின் விளைவாக ஈரான் மீது விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை டிரம்ப் மீண்டும் அமல்படுத்தினாா்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அணுசக்தி ஒப்பந்தத்தில் தாங்கள் ஒப்புக்கொண்ட சில நிபந்தனைகளிலிருந்து ஈரான் பின்வாங்கியது. தற்போது ஐஏஇஏ-வுடன் மேற்கொண்டுள்ள கண்காணிப்பு கேமரா ஒப்பந்தத்தையும் மீறப்போவதாக அந்த நாடு அறிவித்துள்ளது.
ஈரானில் ஐஏஇஏ தலைவா்
சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் (ஐஏஇஏ) தலைவா் ரஃபேல் குரேஸி ஞாயிற்றுக்கிழமை ஈரான் தலைநகா் டெஹ்ரான் வந்திருந்தாா்.
ஈரானில் அணுசக்தி திட்டங்களை தாங்கள் தொடா்ந்து பாா்வையிடுவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்காக அவா் அந்த நாட்டுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக, டெஹ்ரானில் பல்வேறு அதிகாரிகளைச் சந்தித்து அவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.