அம்னோவுக்கு முஹிடின் காலக்கெடு

கோலாலம்பூர், 
நாட்டின் 15 ஆவது பொதுத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் ஓர் அங்கமாக இணைந்து போட்டியிடுவதற்குத் தயாரா என்பது குறித்து மார்ச் 1ஆம் தேதிக்குள் பதில் வேண்டுமென்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அம்னோவுக்குக் காலக்கெடு விதித்திருக்கிறார்.

பிரதமரின் இந்நிலைப்பாடு சற்றே கடுமையாக இருந்தாலும் அம்னோ அதன் முடிவை அறிவிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது என்பது உண்மையாகி வருகிறது.கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை பகாங், ஜண்டா பாய்க்கில் அம்னோ உச்சமன்றக் கூட்டம் நடைபெற்றது. அங்கு என்ன நடந்தது? என்ன பேசப்பட்டது என்பதை அம்னோ தலைவர்கள் மிக மிக ரகசியமாக வைத்துள்ளனர்.

சிலர் அதுவொரு வழக்கமான சந்திப்புதான் என்று கூறிவருகின்றனர். அன்றைய மாலைப்பொழுதில் பகாங், டுரியான் தோட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மூசாங் கிங் பழங்கள் விருந்தாகப் படைக்கப்பட்டிருக்கின்றன.

அதே சமயத்தில் அங்கு விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் மெல்ல மெல்ல கசிந்து வருவதே டான்ஸ்ரீ முஹிடினின் இந்தக் காலக்கெடு விதிப்புக்குக் காரணமாக இருக்கிறது என்று நம்பப்படுகிறது.

மேலும் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி திங்கட்கிழமை பெர்சத்து, அம்னோ, மபாஸ் கட்சிகளின் தேசியத் தலைவர்கள் இடையே நடைபெற்ற ஒரு சந்திப்பில் அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடியிடம் பெர்சத்து தலைவருமான முஹிடின் இந்தக் காலக்கெடு விவகாரத்தைப் பதிவு  செய்திருக்கிறார்.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர்தான் பாஸ் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஹடி அவாங்கிற்கு ரத்தக்கொதிப்பு ஏற்பட்டு புத்ராஜெயா மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு  செல்லப்பட்டார்.

அந்தக் கூட்டத்தில் வரும் பொதுத்தேர்தலில் இந்த மூன்று மலாய்க் கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தல் புரிந்துணர்வை எட்ட வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஹடி கடுமையாக வலியுறுத்திக் கொண்டிருந்தார்.

ஆனால், பெர்சத்துடன் இணைந்து வேலை செய்வதற்குப் பெரும்பாலான அம்னோ தொகுதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதையும் ஸாஹிட் அக்கூட்டத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்த மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து வரக்கூடிய பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் 3 இல் இரண்டு பங்கு இடங்களை வென்றெடுக்க வேண்டிய அவசியத்தை டத்தோஸ்ரீ ஹடி தொடர்ந்து வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜண்டா பாய்க்கில் நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் பிரதமர் வழங்கியிருக்கும் காலக்கெடுதான் பிரதானமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வருவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதுதான் நடந்திருக்க வேண்டும்.

மூன்று தேசியத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின்போது ஆகஸ்டு 1ஆம் தேதிக்கு முன்னதாகவே பொதுத்தேர்தலை நடத்திடுவதற்குத் தாம் திட்டமிட்டிருப்பதாக முஹிடின் ங்ோல்லியிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு அவங்ரகாலப் பிரகடனம் முடியும்வரை அவர் காத்திருக்கப் போவதில்லை என்பதும் தெளிவாகி வருகிறது.

அதற்கு முன்னதாகவே மக்களிடம் தாம் அதிகாரத்தைப் பெறுவதற்குரிய வகையில் தேர்தலுக்கு அவர் நாள் குறிக்கலாம் என்பதால் சுமுகமான பேச்சுவார்த்தைக்கு வரும்படி அம்னோவுக்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பதையும் நிராகரிப்பதற்கில்லை.

அதே சமயத்தில் பாஸ் கட்சியுடன் மட்டுமே ஒத்துழைப்பது என்று அம்னோ தலைவர்கள் முடிவுசெய்தால் பெர்சத்து கட்சிக்கு அது மிகப்பெரிய சிக்கலாகிவிடும் என்றும்  சொல்லப்படுகிறது.

எது எப்படி இருப்பினும் நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை முஹிடின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கான அம்னோவின் ஆதரவு தொடரும் என்று  சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here