இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்

சீன  பட்ஜெட்டில் ரூ.15.22 லட்சம் கோடி ஒதுக்கீடு

பீஜிங்: 
கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீனாவின் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 209 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டை விட 6.8 சதவீதம் அதிகமாகும். உலகிலேயே ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. 2  ஆவது இடத்தில் சீனா இருந்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ராணுவத்துக்கு சீனா கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு வரை இரட்டை இலக்கத்தில் ராணுவத்துக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக ஒற்றை இலக்கத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டில் ராணுவத்துக்கு 196.44 பில்லியன் டாலரை சீன அரசு ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், 2021 ஆம் நிதியாண்டில் 209 பில்லியன் டாலர் நிதி (ரூ.15,22,878  கோடி) ராணுவத்துக்கு ஒதுக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் சீன அரசு அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 6.8 சதவீதம் கூடுதலாகும். 

அமெரிக்கா ராணுவத்துக்கு 740.5 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனுடன் ஒப்பிடும்போது சீனா ராணுவம் மூன்றில் ஒரு பங்கு நிதியை ராணுவத்துக்கு ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக தேசிய மக்கள் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜங் யேசூய் கூறுகையில், “எந்த நாட்டையும் அச்சுறுத்துவதற்காகவோ, மிரட்டல் விடுப்பதற்காகவோ சீனா தனது ராணுவ பலத்தை வலுப்படுத்தவில்லை.

ஒரு நாடு மற்றவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறதா என்பது, எந்த வகையான பாதுகாப்பு கொள்கையை அந்த நாடு பின்பற்றுகிறது என்பதை பொறுத்தது. சீனா அமைதியான வளர்ச்சியின் பாதையில் உறுதியாக இருக்கிறது. தற்காப்புடன் கூடிய பாதுகாப்பு கொள்கையை சீனா பின்பற்றுகிறது,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here