– ஒவ்வொரு வாரமும் 9 சதவீதம் அதிகரிப்பு
கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் தோன்றியது கண்டறியப்பட்டது.
சீனா முழுவதும் பரவிய அந்த வைரஸ் பின்னர் அந்நாட்டுக்கு வெளியே முதன் முதலில் ஐரோப்பிய நாடான இத்தாலியின் வட கிழக்கு பகுதியில் லோம் பார்டியில் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்தது. சில மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதால் பல்வேறு நாட்டு அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தின.
ஆனாலும் முக கவசம் அணிவது, சமூக இடை வெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றை கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகின்றன. இந்த நிலையில் இங்கிலாந்தில் மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவியது கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் முன்பைவிட 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும், அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியது என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
அதேபோல் தென் ஆப்பிரிக்காவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது தெரியவந்தது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளுக்கும் பரவியது.
இதனால் ஐகோப்பிய கண்டத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் 27 ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது. இதில் இங்கிலாந்து, டென் மார்க், இத்தாலி, அயர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் வைரசின் பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.
அதேபோல் தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் பரவி உள்ளது.
இத்தாலியில் மிலன் புறநகரில் உள்ள போல்லெட் பகுதியில் நர்சரி பள்ளிகளில் 45 குழந்தைகள், 14 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய கண்டத்தில் கடந்த வாரத்தில் 10 லட்சம் பேர் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதற்கு முன்பிருந்த வாரத்தை விட 9 சதவீதம் அதிகம் ஆகும்.
ஐரோப்பியா கண்டத்தில் நேற்று 1.53 லட்சம் பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இத்தாலி, பிரான்சில் தலா 23 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதேபோல் மற்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து இருக்கிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய மண்டல இயக்குநர் ஹன்ஸ் கூறும்போது, ‘உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவது, பாதிப்பு அதிகமாவது மட்டுமல்ல, பாதுகாப்பையும், கட்டுப்படுத்துவதையும் சரியாக செய்யாத சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்‘ என்றார்.