கோடம்பாக்கம் பேச்சு- சிரிக்க நேரம் வந்தாச்சு
வடிவேலுதான் வர்றாரு… என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் அதிகமாகவே கேட்கத் தொடங்கிவிட்டது.
எலக்ஷன் பாடலை மனசுல வெச்சுட்டு, ’’என்னாது, மறுபடியும் பிரசாரத்துக்கா’’ என அவசரப்படாதீர்கள். அவரது சினிமா ரீ என்ட்ரி குறித்த செய்திதான் இது.
”உடம்புல தெம்பு இருந்தும் நடிக்க முடியாம வீட்டுக்குள் அடைஞ்சு கிடக்கறது எவ்ளோ ரணம் தெரியுமா?” என சில வாரங்களுக்கு முன் சென்னை ஓட்டல் ஒன்றில் நடந்த வாட்ஸ்அப் நண்பர்களின் சந்திப்பில் கலந்து கொண்டபோது வடிவேலு பேசியிருந்தார்.
பத்தாண்டுகளுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்திருந்த வடிவேலு, அதன்பிறகான நிகழ்வுகளால் மனம் நொந்து போனார். வாட்ஸ்அப் நிகழ்ச்சியில்கூட ’’செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தேனடா’’ எனப் பாடவும் செய்தார் வடிவேலு.
இவர் திமுகவுக்காக பிரசாரம் செய்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று விட்ட நிலையில், தொடர்ந்து வடிவேலுவை படங்களுக்குக் கமிட் செய்வதில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் தயங்கியதாலேயே நடிப்பிலிருந்து ஒதுங்க வேண்டிய நிலை வந்தது.
தற்போது வடிவேலு பேசிய பேச்சு கண்டு மனம் இறங்கிய தமிழ் சினிமா மீண்டும் அவரை நடிக்க அழைக்கப்போவதாக கடந்த சில தினங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருந்தன.
யாருடைய இயக்கத்தில், எந்தப் படத்தில் ரீ என்ட்ரி தரப்போகிறார் என அவரது ரசிகர்களும் ஆவலாக இருந்து வந்தனர்.
அதற்கான விடை இப்போது கிடைத்துள்ளது.

சன் டிவியில் சீரியல் இயக்கிக் கொண்டிருந்த இயக்குநர் திருமுருகன் சமீபத்தில் அங்கிருந்து வெளியேறியது நினைவிருக்கலாம். அவர்தான் வடிவேலுவை மறுபடியும் சினிமாவுக்குள் அழைத்து வர இருக்கிறாராம்.
இவரது முதல் திரைப்படமான பரத், கோபிகா நடித்த ‘எம்டன் மகன்’ படத்தில் வடிவேலு நடித்திருந்தார். அந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. அடுத்தப் படமான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்திலும் வடிவேலு நடித்திருந்தார்.
தற்போது மீண்டும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கே படம் இயக்க கமிட் ஆகியிருக்கும் திருமுருகன் தன்னுடைய மூன்றாவது படத்திலும் வடிவேலுவை நடிக்க வைப்பதாகத் தெரிகிறது.
படத்தின் பெயர், நடிகர்கள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஆக, கிளம்பிடுச்சுய்யா வைகைப் புயல் கிளம்பிடுச்சுய்யா!