தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி கோரி வழக்கு

-மத்திய அரசுக்கு நோட்டீஸ்

தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கக் கோரி தாக்கலான மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல்செய்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது:

நாட்டில் செம்மொழியாக தமிழ்உட்பட 6 மொழிகள் அறிவிக்கப்பட்டன. இதில் மிகப் பழமையானது தமிழ். இருப்பினும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக குறைந்த அளவே நிதி ஒதுக்கப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.22.94 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பேசும் சம்ஸ்கிருத மொழிக்கு 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.643.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சம்ஸ்கிருத மொழி கற்க நாடு முழுவதும் 27 கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. தமிழ் மொழியைவிட சம்ஸ்கிருதத்துக்கு 22சதவீதம் அதிக நிதி ஒதுக்கப்பட்டுஉள்ளது.

எனவே, தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும், சென்னையில் செயல்படும் மத்திய செம்மொழி கல்வி நிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றவும், நாடு முழுவதும் தமிழ் கற்பிக்கும் நிறுவனங்களைத் தொடங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இம்மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here