என்ன பாவம் செய்தனர் மக்கள்?

 

பணம் பத்தும்  செய்யும், உயிரையும் எடுக்கும், அர்த்த ராத்திரியில் குடைபிடிக்கவும் செய்யும், பாதாளம் வரையிலும் பாயும், நம்பிய மக்களின் இதயங்களிலும் பாய்ந்து குத்தும்!

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பணத்தின் திருவிளையாடலை மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.

ஒரு நேர்காணலுக்காக பிபிசி அலுவலகத்திற்கு ஒரு டாக்சியில்  சென்று  சேர்ந்தேன். அங்கு வந்தடைந்ததும் டாக்சி டிரைவரிடம் ஒரு 40 நிமிடங்கள் வரை காத்திருக்கச் சொன்னேன்.
அதற்கு, அந்த டாக்சி டிரைவர் மன்னிக்க வேண்டும். நான் அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது. உடனடியாக இல்லம் திரும்பி வின்ஸ்டன்  சர்ச்சிலின் உரையைக் கேட்க வேண்டும் என்று பதில் அளித்தார்.

உண்மையிலேயே நான் மிகவும் வியந்து போனேன். என்னுடைய உரையைக் கேட்பதற்கு அந்த டாக்சி டிரைவர் கொண்டிருந்த ஆர்வத்தைப் பார்த்து பரவசமடைந்தேன்.
நான் யார் என்பதை காட்டிக்கொள்ளாமலேயே 10 பவுண்டை (பிரிட்டிஷ் பணம்) எடுத்து அவரிடம் கொடுத்தேன். மிகுந்த களிப்புடன் அதனைப் பெற்றுக்கொண்டார்.
பணத்தை வாங்கிக்கொண்ட அந்த டாக்சி டிரைவர், எத்துணை நேரமானாலும் பரவாயில்லை. நீங்கள் வரும் வரை காத்திருப்பேன்,  சார். சர்ச்சில் எக்கேடாவது கெட்டுப் போகட்டும் என்று போட்டாரே ஒரு போடு. நான் மிரண்டுப் போனேன்!

பணத்தைக் கையில் வாங்கியதும் அவனது குணமும் கொள்கையும் பறந்தோடி விட்டன. பணத்துக்காக அவன் தனது பற்றையே விற்றுவிட்டான். பணத்துக்காக நாடுகளும் அடைமானம் வைக்கப்பட்டிருக்கின்றன. பணத்துக்காகக் கௌரவத்தையும் இழக்கத் தயாராக இருக்கின்றனர்.

பணத்திறகாக குடும்பமே சிதறிப் போகிறது – சுக்குநூறாக உடைந்து விடுகிறது. பணத்துக்காகப் பலர் கொல்லப்படுகின்றனர். பணத்துக்காக மக்கள் அடிமையாக்கப்படுகின்றனர். இவையாவும் இங்கிலாந்தின் இரும்பு மனிதன் என்று வருணிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வின்ஸ்டன்  சர்ச்சில் மனம் நொந்து விரக்தியில் உதிர்த்த வார்த்தைகள்.

எல்லாமே கண்சிமிட்டும் நேரத்தில் மாறிப்போயின. எல்லாமே திடீர் திடீரென மாறும். நாம் கேட்பது, பார்ப்பது எல்லாம் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும். எதையும்  சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நாளை என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது.

நம் நாட்டு நடப்புகளைப் பார்க்கும்போது வின்ஸ்டன்  சர்ச்சிலின் ஆதங்கம் எத்துணை உண்மையானது என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

தங்களின் சுயநலத்திற்காகத் திடீர் திடீர் என்று கட்சி தாவுகின்றவர்களைப் பார்க்கும்போது அழுவதா, சிரிப்பதா என்றுகூடத் தெரியவில்லை. இவரா இப்படி என்று அதிர்ச்சியில் விழி பிதுங்கி பார்க்கும் சுழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது.

இவர்களின் வெற்றிக்காக அல்லும்பகலும் உழைத்தவர்களை, எந்த எதிர்பார்ப்பும் இன்றி மாற்றம் தேவை என்பதற்காக நம்பி ஓட்டுப்போட்டு மக்கள் சபைக்கு அனுப்பி வைத்த மக்களையும் வாக்காளர்களையும் கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தார்களா?

இவர்களுக்கு எல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா என்பதுகூட சந்தேகமாகத்தான் இருக்கிறது. அடடா என்ன பேச்சு.? அதைக் கேட்டுத்தானே மக்களும் ஏமாந்து போயிருக்கின்றனர்.

இவர்களால் மீண்டும் மக்கள் முன் வரமுடியுமா? எந்த முகத்தை வைத்துக்கொண்டு வருவார்கள்? இவர்கள் எல்லாம் வல்லவர்கள், நல்லவர்கள், கெட்டிக்காரர்கள். ஆனால், நம்பி ஓட்டுப்போட்ட மக்கள் முட்டாள்கள்; அப்படித்தானே!
இந்தப் பாவத்தை எல்லாம் எங்குபோய் தீர்க்கப் போகிறீர்கள்? பாவமய்யா இந்த மக்கள்!
– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here