– வரலாறு கூறுகிறது
சடங்குகளின்போது பயன்படுத்தப்படும் இந்த தங்க முகக் கவசம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த மாகாணத்தில் உள்ள சான்ஷிங்துய் தொல்லியல் தளத்தில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 500 வெண்கலக் கால தொல் பொருட்களில் இந்தத் தங்க முகக்கவசமும் ஒன்று. சான்ஷிங்துய் தொல்லியல் தளம் சீனாவின் முக்கிய தொல்லியல் தளங்களில் ஒன்று.
இந்த தங்க முகக் கவசம் மட்டுமில்லாமல் பல வெண்கலத் தால் ஆன உலோகத் துண்டுகள், தங்கப் படலங்கள், யானைத் தந்தம், பச்சை நிற மாணிக்கக் கல், பட்டு ஆகியவற்றால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் ஆகியவையும் சான்ஷிங்துய் தொல்லியல் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்தப் பிராந்தியத்தை கிமு 316 முன்பு ஆட்சி செய்த ‘ஷு’ அரசாங்கம் குறித்த தகவல்களைக் கண்டறிய இந்த புதிய கண்டுபிடிப்புகள் உதவி செய்யும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இந்த இடத்தில் தொல்பொருட்கள் புதைந்திருப்பது 1929ஆம் ஆண்டு அங்குள்ள விவசாயி ஒருவரால் எதிர்பாராவிதமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
செங்டு நகரில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த இடத்தில் இருந்து இதுவரை சுமார் 50,000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பாதி முகத்தை மட்டுமே மறைக்கக் கூடிய நிலையில் இருக்கும் இந்த தங்க முகக்கவசம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல மீம்களும் காணொளிகளும் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த தங்க கவசம் கண்டறியப்பட்டதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட பின்பு சீனாவின் சமூக ஊடகத்தில், தங்க முகக் கவசத்தை பிரபலங்களின் முகத்திற்கு அணிவித்து பல மீம்கள் பகிரப்பட்டன.
திங்கள்கிழமை காலை வரை சான்ஷிங்துய் தங்க முகக்கவசம் குறித்த ஹேஷ்டேக் 40 லட்சம் முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் இந்த முகக்கவசம் குறித்த உள்ளடக்கங்கள் பரவலாகப் பகிரப்படுவதை சான்ஷிங்துய் தொல்பொருள் அருங்காட்சியகம் தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது.
அந்த தொல்பொருள் அருங்காட்சியகமும் இந்த முகக் கவசத்தை வைத்து ஒரு மீம் வெளியிட்டுள்ளது.
இந்த முகக்கவசம் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பிற தொல்பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அந்த தொல்பொருள் அருங்காட்சியகம் சார்பில் ஓர் அனிமேஷன் பாடல் காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.
தங்கள் தொல்பழங்கால மூதாதையர்களின் நாகரிகத்தைப் புகழ்ந்து தொலைக்காட்சி வழங்கநர் ஒருவர் வெளியிட்ட ‘ராப்’ பாடலும் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.
தொல்பொருட்கள் சீன சமூக ஊடகங்களில் பிரபலம் அடைவது இது முதல் முறையல்ல.
‘ஆங்கிரி பேர்ட்ஸ்’ எனும் பிரபலமான வீடியோ கேமில் உள்ள பன்றியின் கதாபாத்திரத்தை ஒத்த தொல்பொருள் சென்ற ஆகஸ்ட் மாதம் இதே தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் சமூக ஊடகங்களின் மிகவும் பிரபலமடைந்தது.