தமிழ்ப்பெயர் சூட்டுவது இந்து மதத்திற்கு எதிர்ப்பானதா?

சுடும் உண்மைகள்

உப்சி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் உப்சி தமிழ்த்துறையின் முன்னாள் தலைவருமான முனைவர் மனோன்மணி தேவியை அறியாத தமிழ் சார்ந்த, மொழி சார்ந்த கல்விமான்கள் இருக்க முடியாது.

செய்யும் தொழிலைத் தெய்வமாக மதித்து மாணவர்களைத் தாய்போல் அரவணைத்து வரும் அவர்மேல் அடிப்படையற்ற அப்பட்டமான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ள முகவரி இல்லாத ஓர் ஆசாமியை டேவான் பகாசா தமிழ் பெர்ஹாட் வன்மையாகக் கண்டித்திருக்கிறது.

நீறில்லா நெற்றி பாழ் எனும் கூற்றுக்கேற்ப திருநீறு இல்லாத முனைவர் மனோன்மணியின் நெற்றியைப் பார்ப்பதே அரிது. அப்படி இருக்க அவர் இந்து மதத்திற்கு எதிராக மாணவர்களை உருமாற்றி வருகிறார் என்ற குற்றச்சாட்டைக் கேட்க வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

மொழி ஓர் இனத்தின் அடையாளம். ஒவ்வொருவரும் அவர் மொழி சார்ந்த பெயர்களை வைத்துக் கொள்வது சிறப்பு என்று உலகில் உள்ள அத்தனை இனங்களுமே முன்னிருத்தி வருகின்றன.

அந்த அடிப்படையில் முனைவர் மனோன்மணி தேவி மட்டுமன்றி நம் நாட்டில் உள்ள பல தமிழ்ப்பற்றாளர்களும்கூட முடிந்த வரையில் தமிழ்ப் பெயர்களைச் சூட்டி மொழியின் பால் உள்ள பற்றை நிலைநாட்டி வருகின்றனர்.

தூய தமிழில் பெயர் சூட்டுவதால் ஒருவர் எப்படி இந்து மதத்திற்கு எதிர்ப்பானவரும் இறை மறுப்பாளரும் ஆக முடியும்? இப்படி அப்பட்டமாக முனைவர் மேல் குற்றம்சாட்டி இருப்பது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதுபோல் இருக்கிறது.

ஒரு பேராசிரியராக, மாணவர்களுக்கு ஏட்டுக் கல்வி மட்டுமன்றி வாழ்க்கைக் கல்வியைப் புகட்டுவதும் ஆசிரியரின் கடமைகளில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.

அப்படியிருக்க மொழிப்பற்றை விதைக்கும் வகையில் தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் மனோன்மணி நம் மாணவர்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களை வழங்கி இருப்பதில் எந்தவிதக் குற்றமும் இல்லை.

மேலும் மொழியியல் புலனங்களில் ஆசிரியர்கள் கற்றுத் தரும் மொழி சார்ந்த பெயர்களை மாணவர்களுக்குச் சூட்டுவது வழக்கமான ஒன்று.

சீனமொழி, பிரெஞ்சுமொழி போன்ற மொழிகளைக் கற்கும் பிற இன மாணவர்களுக்கும்கூட சீன, பிரெஞ்சு மொழிப் பெயர்களைப் புனைபெயர்களாகச் சுட்டி ஆசிரியர்கள் அழைப்பது சகஜம். இங்கே தமிழின மாணவர்களுக்குத் தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டியது தவறு என்று குற்றம் சாட்டுவதில் எந்த நியாயமும் இல்லை.

இது அர்த்தமற்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டு. ஏதோ ஒன்றை மனத்தில் வைத்துக் கொண்டு வேண்டுமென்றே இந்தச் செயலை இந்த ஆசாமி செய்திருப்பதுபோல் தெரிகிறது.

தொடர்ந்து இந்த ஆசாமியும் அவர் மட்டுமே இடம் பெற்றுள்ள இயக்கமும் சமயம் சார்ந்த பணிகளைக் கவனிக்காமல் ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வியலைச் சீண்டிப் பார்ப்பதை இந்நாட்டுத் தமிழர்கள் யாரும் கவனிக்காமல் இல்லை.

மதமாற்று வேலைகள் பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. உங்கள் கைங்கரிங்கைளை அங்கே காட்டுங்கள். அடிப்படையில் ஒருவர் மதம் மாறாமல் இருக்க தன்னுடைய சமயம் சார்ந்த தெளிந்த அறிவு வேண்டும். அதில் தெளிவுபெற வையுங்கள்.

இந்துக்களிடம் சமயம் சார்ந்த தெளிவான புரிதலை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். அதை விடுத்து காரணமே இல்லாமல் அர்த்தமற்ற வீடியோ செய்வது, குற்றம்சாட்டுவது போன்ற வேலைகளைச் செய்வதை நிறுத்திக் கொள்வது சிறப்பு.

நாடு போற்றும் நல்லாசிரியர்கள் வரிசயைில் முனைவர் மனோன்மணி குறிப்பிடத்தக்கவர். அப்படிப்பட்டவருக்கு இந்த ஆசாமி போன்ற புல்லுருவிகளால் ஒரு பிரச்சினை என்று வந்தால் அதனை எதிர்கொள்ள டேவான் பகாசா தமிழ் உறுதுணையாக நிற்கும் என்று அறிவித்திருப்பது உண்மையாக இருப்பவர்களுக்கு யாரைக் கண்டும் எதைக் கண்டும் பயமில்லை என்பது சாட்டையடி.

தமிழர்கள் விழித்துக் கொண்டார்கள் என்பதில் நெஞ்சு நிமிர்கிறது. கெடுமதியாளர்களுக்கு இனி தமிழ்ச் சமுதாயமே பதிலடி கொடுக்கும்.
வேலிருக்க வினையில்லை. கோலிருக்க பயமில்லையே!

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here