பலமான தலைமை இல்லையேல் தமிழனுக்கு ஒன்றும் இல்லை

ஐநா தீர்மானம் பறைசாற்றுகிறது

 இலங்கை மீதான குற்ற விசாரணையை ஐநா பாதுகாப்புச் சபைக்கு முன் வைத்தல் என்ற நிலையை அடைவதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டும். அத்தோடு அது இலகுவான காரியமன்று என்பதுதான் நடைமுறை உண்மையாகும் என அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில்,

ஐநா மனித உரிமை மன்றத்தின் இலங்கை மீதான தீர்மானம் மொத்தம் 47 நாடுகளின் வாக்கெடுப்பில் 22 நாடுகளின் ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான 46-1 தீர்மானம் வெற்றி அடைந்திருக்கிறது என்பது தமிழ் மக்களைப் பொறுத்தளவில் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றுதான்.

இருப்பினும் இலங்கை மீதான குற்ற விசாரணையை ஐநா பாதுகாப்புச் சபைக்கு பாரப்படுத்தல் என்ற நிலையை அடைவதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டும். அத்தோடு அது இலகுவான காரியமன்று என்பதுதான் நடைமுறை உண்மையாகும்.

தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்பு, போர்க்குற்றம், மனிதக் குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பன தொடர்பாகக் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஐநா நோக்கிய நீதி கோரிய தமிழ்த்தரப்பின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் தோல்வியைச் சந்தித்து வந்திருக்கிறன. ஆனால் இந்த வாரம் மனித ஐநா மனித உரிமைப் பேரவையின் முடிவானது தமிழர் தரப்புக்கு ஒரு படிக்கல்தான். இந்தச் செயல்முறை தமிழர்களின் விருப்புக்கேற்ற வகையிலும் அவர்களுடைய அரசியற் தேவைக்கேற்ற வகையில் அமைந்தது என்று சொல்லிவிட முடியாது.

இந்த ஜெனிவா தீர்மானத்தில் நீண்ட இராஜதந்திர இலக்குகளும், ஆழமான இராஜதந்திர உள்ளடக்கங்களும் உண்டு. இதனைக் கருத்தில் கொண்டுதான் இத்தீர்மானம் பற்றி பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

இன்றைய இந்துமா கடல் ஆதிக்கப் போட்டி மேற்குலகின் இந்தோ-பசுபிக் பிராந்திய அரசியல் பொருளியல் நலன், சீனாவின் இந்து சமுத்திரத்தின் உள்நுழைவு, இலங்கை ஆட்சியாளரை இந்தியா மற்றும் மேற்குலகின் விருப்புக்கு ஏற்றவகையில் கையாள முடியாமை என்பவற்றின் அடிப்படையிலேதான் இலங்கையைக் கையாள்வதற்கு இந்தியா சார்ந்து மேற்குலகம் தமிழர் தரப்பின் நியாயத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இருக்கிறது என்று நோக்கப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் மேற்குலகு, இலங்கைத்தீவில் ஆட்சி மாற்றத்தைச் செய்வதற்கான முயற்சியில் வெற்றி பெற்றது. அதன்படி தமிழர் தரப்பின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் சார்ந்த “”நல்லாட்சி அரசாங்கத்தை “” மேற்குலகம் அமைத்தது. இருப்பினும் இலங்கை தீவில் திரட்சி பெற்று முறுக்கேறி இருக்கும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் இன்று அந்த ஆட்சி மாற்றத்தை வீழ்த்தி மீண்டும் மேலெழுந்து இருக்கிறது.

இன்றைய இலங்கையின் சிங்கள பௌத்த தேசியவாதம் வெற்றி வாதத்தின் பெயரால் கட்டமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வெற்றிவாத அணி தொடர்ச்சியாகச் சீனா பக்கமே செல்ல முனைகிறது. எனவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீன அணிக்குள் இலங்கையைச் செல்லவிடாமற் தடுப்பதற்கு இலங்கைத் தீவில் ஒரு ஆட்சி மாற்றத்தைச் செய்வதன் மூலம் சீனா பக்கம் அது செல்வதைத் தடுக்கலாம் என்ற நப்பாசை இந்திய– அமெரிக்க — மேற்குலக அணிக்கு உண்டு. இதற்கான நடைமுறைச் சாத்தியங்கள் மிகவும் குறைவு.

ஆனால் மேற்குலகம் இலங்கைத்தீவில் ஆட்சி மாற்றத்தையே விரும்புகிறது. இங்கு மேற்குலகின் விருப்பு என்ற ஒரு பக்கமும், எதிர்காலத்தில் எதிர்மாறான நடைமுறை நிகழலாம் என்பதும் இன்னொரு பக்கமாகவும் அமையப் போகின்றது.

எனினும் மேற்குலக அணி தமது விருப்பத்திற்கேற்ற ஒரு ஆட்சி மாற்றத்தை மீண்டும் மேற்கொள்ளவே பெரிதும் விரும்புகிறது. இத்தகைய அணுகுமுறை சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் தமிழர்களின் முதுகின் மீது சவாரி செய்யவே பெரிதும் பயன்படும் என்பதே நடைமுறை யதார்த்தம் ஆகும்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருக்கின்ற கொதிநிலையைத் தணிப்பதற்கும், இந்தியாவின் நலன் சார்ந்தும் மேற்குலகின் நலன் சார்ந்தும்தான் இந்த ஜெனிவாத் தீர்மானம் வெற்றி அடையச் செய்யப்பட்டிருக்கிறது. இங்கு இப்பிராந்தியத்தில் இந்தியாவின் விருப்பு என்னவோ, இந்தியாவின் கொள்கை என்னவோ அதுவே அமெரிக்காவின் விருப்பம் கொள்கையும் ஆகும். இதுவே மேற்குலகின் விருப்பமும் கொள்கையும் ஆகும். இதனைச் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விருப்புகளுக்கும் கொள்கைகளுக்கும் நடுவேதான் ஈழத் தமிழர் தம் நலனைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள முடியும்.

ஜெனிவா தீர்மானத்திற்கு ஆதரவளித்த 22 நாடுகளை நோக்கினால் இந்நாடுகள் எப்போதும் மேற்குலகின் பக்கமே நின்று இருப்பதனை பார்க்கமுடியும். எதிர்த்த 11 நாடுகளை நோக்கினால் அவை “” சோசலிச”” அட்டை ஏந்தியநாடுகள், சீனச் சார்பு நாடுகள் அல்லது மேற்குலக எதிர்ப்பு நாடுகள் என்ற வகைக்குள் அடங்குகின்றன.

இராஜதந்திர கண் கொண்டு பார்த்தால் இந்த தீர்மானத்தை வடிவமைப்பதில் அமெரிக்க — மேற்குலக –இந்திய கரங்கள் கூட்டாகச் செயல்பட்டுள்ளன என்பதைக் கண்டு கொள்ளலாம்.

மேற்படி இலங்கைக்கு ஆதரவாக ஆனால் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த நாடுகள் ஜெனிவா தீர்மானத்தை எதிர்க்கும் என்பதுவும் மேற்படி மேற்குலக இந்தியச் சார்பு அணிக்கு முன்கூட்டியே நன்கு தெரியும். எனவே இத்தீர்மானம் கொண்டு வரப்படுகின்ற போது 33 நாடுகளின் நிலைமை பற்றித் தெளிவாக மேற்குலகுக்குத் தெரிந்திருந்தது.

இந்தியாவும், ஜப்பானும் மேற்குலகம் சார்ந்தவை. அத்தோடு அவை “”கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத் திட்டத்தின் கூட்டுப் பங்குதாரர்களுங்கூட. இவ்விரண்டு நாடுகளும் நடுநிலைமை வகிப்பதன் ஊடாக ஏனைய 12 நாடுகளை நடுநிலைமை என்ற நிலைமைக்கு இட்டுச் செல்வதுவே மேற்குலகின் இத்தீர்மானம் சார்ந்த அரசியல் நகர்வாக அமைந்திருந்தது. மேலும் ஆதரவளித்த 22 நாடுகளுடன் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட இரண்டுநாடுகளும் இணைந்தால் 24 வாக்குகளைப் பெற முடியும். எதிர்த்து வாக்களித்த 11 நாடுகளும் நடுநிலைமை வகித்த இந்தியா, ஜப்பான் தவிர்ந்த 12 நாடுகளையும் இணைத்தால் 23 வாக்குகளையே பெற முடியும். எனவே எது எப்படி இருப்பினும் மேற்குலக அணி வெல்வதற்கான 24 வாக்குகள் முழுமையாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் சாத்தியமும் இருந்தது என்பது கவனத்திற்குரியது.

இத்தீர்மானத்தில் ஆதரவு நிலை எடுக்க வேண்டிய இந்தியா நடுநிலைமை வகித்தது என்பது அதனுடைய இன்றையஉள்ளக அரசியல், மற்றும் புவிசார் அரசியலில், நிகழ்கால நடப்பு சூழமைவில் தன்னுடைய உடனடி தேவைக்கேற்ற வகையில் சமநிலைப் படுத்துவதற்காக என்ற வகையிலேயே நடுநிலைமை என்ற பாத்திரத்தை வகித்தது. அத்தோடு ஏனைய நாடுகளை நடுநிலைமை என்ற நிலைக்கு இட்டுச் செல்லவும் வழி வகுத்து. இந்த வகையில் மேற்குலக– இந்தியா சார்பு அணி வெற்றிக்கான நகர்வுகள் அனைத்தையும் செய்திருக்கிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

எனவே ஜெனிவா தீர்மானத்தில் ஆதரவளித்த 22 நாடுகளுடன் நடுநிலைமை வகித்த 14 நாடுகளையும் உள்ளடங்கலாக இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். அதனூடாக இத்தீர்மானம் பற்றியும் எதிர்கால நடைமுறை — தொடர்வினை பற்றியும் நுணுகி ஆராயப்பட வேண்டும். உண்மையில் “”நடுநிலைமை என்பது செயல் பூர்வ அர்த்தத்தில் வெல்பவன் பக்கமே”” என்பதனை கருத்தில் கொள்ளவேண்டும்.

இலங்கை தொடர்பான இராஜதந்திர நகர்வுகளில் இந்தியா கடந்த 75 ஆண்டுகளாகத் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது. அதேவேளைச் சிங்கள இராஜதந்திரம் தொடர்ந்து இந்தியாவைத் தோற்கடித்த வருகிறது. எனவே இலங்கை தொடர்பான இராஜதந்திர நகர்வில் தொடர்ந்து இந்தியா தோல்வியின் பட்டியலிலேயே தன்னை இணைத்து வைத்திருக்கிறது. நடுநிலைமை என்பது மறைமுக அர்த்தத்தில் இலங்கைக்கு எதிரான தான். ஆனால் இந்தியா இலங்கை மீது தனது அதிருப்தியைக் காட்டுவதற்கு நேரடி அர்த்தத்தில் ஜெனீவாத் தீர்மானத்தில் ஆதரவளித்து இலங்கை மீது அதிர்வலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மாறாக மறைமுக அர்த்தத்தில் நடுநிலைமை வகித்து இலங்கை மீதான நழுவல் போக்கைத் தொடர்ந்தும் கடைப்பிடிப்பதன் ஊடாக தொடர்ந்து 75 ஆண்டுகளாகத் தமிழர்களை இலங்கை அரசு நசுக்குவதற்கு இடம் கொடுத்து இருக்கிறது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் இலங்கை தீவில் சீனா நிலை கொண்டுவிட்டால் அதனை அகற்றுவது என்பது இலகுவானது காரியமல்ல . சீனா எடுத்து வரும் அனைத்துவகை முயற்சிகளிலும் அது வளர்ந்துகொண்டு செல்லும் போக்கையே அதனுடைய வரலாற்று ரீதியான படிமுறை வளர்ச்சியில் கானலாம்.

ஆனால் இந்தியாவின் வரலாற்று ரீதியான பண்பாட்டியலுக் கூடாக “”சாம, பேத, தன , தண்டம் “”என்ற அடிப்படையிலும் மகாபாரதக் கதையின்படி ஒரு இராட்சியம் கேட்டு, பின்பு பாதி இராட்சியம் , ஐந்து ஊர், ஒரு கிராமம் , ஐந்து வீடு, ஒரு வீடு எனக் கேட்டு இறுதியில் குரு சேத்திரத்துக்குச் செல்வதான அரசியல் நடைமுறைபோக்கு இன்று இல்லை. அத்தகைய காலமும் இன்றில்லை. அத்தகைய கொள்கை இன்றைய நடைமுறைக்குப் பொருத்தமற்றது. இதனை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் பெரிதும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

இன்று ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக இந்தியா நின்று தமிழ் மக்களின் மனதை வென்றெடுப்பதோடு தமிழக மக்களையும் சாந்தப்படுத்தியிருக்க வேண்டிய பொறுப்பையும் இந்தியா தவறவிட்டிடுகிறது என்ற வரலாற்றுத் தவறை எதிர்காலத்தில் உணரும் என்பதே உண்மை .

ஆயினும் இந்த இடத்தில் இந்தியாவால் இலங்கை தோற்கடிக்கப்பட்டு இருக்கிறது. என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. அத்தோடு துருக்கி — சைப்பிரஸ் பாணியிலான ஒரு நடைமுறையைத் தனது ஒரு பக்க நிலையாக வைத்துக் கொண்டுதான் இன்றைய நிலைக்கு இந்தியா சென்று இருக்கிறது என்ற ஒரு கண்ணோட்டமும் உண்டு.

இன்று சைப்ரஸில் இரண்டு பாகங்களாக இரண்டு இராணுவங்கள் இருக்கின்ற போதும் அது ஒரு நாடாகவே இருக்கிறது. துருக்கியின் பக்கம் இருக்கின்ற சைப்ரஸ் பகுதி தனிநாடாகத் தோற்றமளித்தாலும் 1974ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை அது இரு தனித்தனி நாடுகளாகப் பிரிக்கப்படவில்லை என்பதைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.

அவ்வாறுதான் இலங்கை இரண்டாகப் போவதை இந்தியாவும் அமெரிக்காவும் விரும்பவில்லை என்பதுவும் அதை ஒன்றாக வைத்திருக்கவே விரும்புவதையும் நோக்க முடிகிறது. இந்த வரலாற்று நடைமுறை உதாரணத்தை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

இன்றைய நடைமுறையில் தமிழினம் தலைமைத்துவம் இன்றி தள்ளாடுகிறது. இந்த நிலையில் அதி வேகமாக அரங்கேறும் அரசியல் மாற்றங்கள் தமிழினத்துக்குப் பாதகமானவை. தெளிவான பலமான தலைமை இல்லாத நிலையில் இந்த அதிகமான மாற்றங்களைத் தமிழினம் எதிர்கொள்ள முடியாமல் போகும்.

அவ்வாறே எதிரிகளுடைய வேகமான நகர்வுகளும் தலைமைத்துவமற்ற தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவல்லது. எனவே இன்றைய நடைமுறையில் பன்னாட்டு அரசியலிலும் உள்ளக அரசியலிலும் ஒரு படிமுறையான, சராசரியான, மெதுவான அரசியல் நகர்வுகளே தமிழ் இனத்தின் தலைவிதியைச் சரியான பாதையில் வழிநடத்த உதவ வல்லவை. ஆனால் யதார்த்த நிலைமை அவ்வாறு இல்லை .இந்த நிலையில் தமிழினம் அவசர அவசரமாக தமக்குரிய ஒரு கூட்டு தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும். அதற்குத் தமிழினத்திற்கு உடனடித் தேவை ஐக்கியம். எல்லா வகையிலும் தமிழினம் ஐக்கியப்பட வேண்டியது என்பதே இன்றைய காலத்தின் தேவையும் வரலாற்று அன்னையின் கட்டளையும் ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here