எவர் கிவன் கப்பல் விவகாரம்

 ஒரு பில்லியன் டாலர்கள் இழப்பீடாக வேண்டும்  – எகிப்து கோருகிறது

எகிப்து நாட்டில் அமைந்துள்ள செயற்கை நீர் வழி தடமான சூயஸ் கால்வாயில் கடந்த வாரம் எவர் கிவன் என்ற சரக்கு கப்பல் கால்வாயின் குறுக்கு பக்கமாக சிக்கிக் கொண்டதால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் நூற்று கணக்கான கப்பல்கள் கால்வாயை கடக்க முடியாமல் இருந்தன. மீட்பு குழுவினரின் பணியினால் கால்வாயில் சிக்கியிருந்த கப்பல் மீண்டும் பழைய படி தனது பயணத்தை தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த கப்பல் கால்வாயில் சிக்க கொண்ட காரணத்தினால் ஏற்பட்ட வணிக ரீதியிலான நஷ்டத்தை ஈடுக்கட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடாக வேண்டும் என எகிப்து கேட்டுள்ளது.

கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கான சம்பளம், பயன்படுத்தப்பட்ட கருவிகளுக்கான செலவுகள், கால்வாயில் ஏற்பட்டுள்ள சேதம், மணலை அப்புறப்படுத்துவதற்கான செலவுகள், இழுவை படகுகளுக்கான செலவுகள், வணிக ரீதியிலான நஷ்டம் என அனைத்தும் சேர்த்து உத்தேசமாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடாக வேண்டும் என எகிப்து கேட்டுள்ளது. இதனை சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஒசாமா ரபீ உறுதி செய்துள்ளார்.

இருப்பினும் இந்த இழப்பீட்டு தொகையை யாரிடம் எகிப்து கேட்கிறது என்பது குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை. ‘இதனை கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது. எங்களுக்கு சேர வேண்டிய தொகையை நாங்கள் நிச்சயம் பெறுவோம்’ என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். இருப்பினும் இழப்பீடு தொகையை நாங்கள் வழங்க வாய்ப்பில்லை என அந்த சரக்கு கப்பல் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here