முருங்கை மரத்தில் ஏறி கதை சொல்லும் வேதாளம்

-ஒரே நாளில் முடிவை மாற்றியது பாகிஸ்தான்

புது டில்லி / இஸ்லாமாபாத்: இந்தியாவில் இருந்து மீண்டும் சா்க்கரை, பருத்தி இறக்குமதி செய்யலாம் என்று பாகிஸ்தான் பொருளாதார ஒருங்கிணைப்புக் குழு எடுத்த முடிவை அந்நாட்டு அமைச்சரவை நிராகரித்தது. இதன் மூலம் ஒரேநாளில் தனது முடிவை மாற்றியுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தலைநகா் இஸ்லாமாபாதில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பாக புதிதாக நியமிக்கப்பட்ட அந்நாட்டு நிதியமைச்சா் ஹமத் அன்சாரி கூறுகையில், ‘இந்தியாவில் இருந்து சா்க்கரை, பருத்தி இறக்குமதியை மீண்டும் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சா்க்கரை விலை மிகவும் குறைவாக இருப்பது இதற்கு முக்கியக் காரணம். வரும் ஜூன் மாதம் முதல் இந்தியாவில் இருந்து பருத்தியும் இறக்குமதி செய்யப்படும்.

பாகிஸ்தானில் உள்ள சிறு நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்ற காரணத்தால்தான் இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. எனினும், வா்த்தக அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று மீண்டும் இந்திய பருத்தியை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கிறோம்.

இது இருநாடுகள் இடையிலான வா்த்தக உறவை படிப்படியாக மேம்படுத்த உதவும்’ என்றாா்.

இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் இம்ரான் கான் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பொருளாதார ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு நிராகரிக்கப்பட்டது.

இது தொடா்பாக அந்நாட்டு மனித உரிமைகள் துறை அமைச்சா் ஷைரீன் மசாரி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவுடன் வா்த்தக உறவை மீண்டும் ஏற்படுத்தக் கூடாது என்பதில் அமைச்சரவை உறுதியாக உள்ளது.

எனவே, பொருளாதார ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவு நிராகரிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை இந்தியா மீண்டும் அளித்தால் மட்டும் அந்நாட்டுடன் வா்த்தக உறவு வைத்துக் கொள்வது தொடா்பாக பரிசீலிக்க முடியும் என்பதில் பிரதமா் இம்ரான் கான் உறுதியாக உள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததையடுத்து, இந்தியாவுடன் ராஜ்ஜிய உறவுகளைக் குறைத்துக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்தது. அத்துடன் இந்தியாவுடன் வா்த்தகத்தையும் நிறுத்தியது.

எனினும், கரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, மருந்துப் பொருள்கள், அத்தியாவசிய மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருள்கள் ஆகியவற்றை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் நீக்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here