கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?

பணப் பேராசயைும் சொகுசு கார்கள் மீதான மோகமும் ஆடம்பர வாழ்க்கை மீதான வேட்கையும் ஒரு தனி நபரை அரசாங்கத்தை ஏமாற்றி குத்தகைகளைக் கபளீகரம் செய்ய வைத்துள்ளது.

கோலாலம்பூரில் பிறந்த அந்த டத்தோ வரும் மே மாதம் அவரின் 47ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். இவர் தற்போது ஆறு நாள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்பிஆர்எம்) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தடுப்புக் காவல் இன்றுடன் முடிவடைகிறது. அடுத்தது நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றஞ்சாட்டப்படும். அப்போது இவரின் முகத்திரை கிழிக்கப்பட்டு விவரங்கள் வெளிவரும்.

2014ஆம் ஆண்டில் இருந்து 380 கோடி ரிங்கிட் மதிப்புள்ள 345 அரசாங்க டெண்டர்களை ஏகபோகமாக கபளீகரம் செய்திருக்கிறார். தனித்தனி நபர்களின் பெயர்களில் 150 கம்பெனிகளையும் கொண்டிருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக 2017ஆம் ஆண்டில் ஜேகேஆர் (பொதுப்பணி இலாகா) சிறந்த குத்தகையாளர் எனும் இரண்டாவது நிலை விருதையும் இவர் வென்றிருக்கிறார்.

இவர் மீதான விசாரணையில் எஸ்பிஆர்எம் அதன் கூர்மையான பார்வையைப் பொதுப்பணி இலாகா குத்தகைகள் மீது நிலைகுத்தச் செய்திருக்கிறது.

புத்ராஜெயாவில் கட்டடங்கள் நிர்மாணிப்பு டெண்டர்களை இவர் பெற்றிருக்கிறார் என்று நம்பப்படுகிறது. ஆனால், இவர் பிரமாண்ட அலுவலகம் எதையும் கொண்டிருக்கவில்லை.

அம்பாங் ஜெயாவில் ஒரு கார் பட்டறைக்கும் ஓர் ஐடி நிறுவனத்திற்கும் இடையே ஒரு குறுகலான இடத்தில் இவரின் அலுவலகம் இருக்கிறது. ஆனால், அங்கிருந்துதான் கடந்த ஏழு ஆண்டுகளாக 380 கோடி மதிப்பிலான அரசாங்க டெண்டர்களைப் பெற்றார் என்பதை யாராலும் நம்ப முடியாது.

இந்த அலுவலகம் எப்போதும் பூட்டியே இருக்கும். பணியாளர்கள், வருகையாளர்கள் நடமாட்டம் அறவே கிடையாது.
பராமரிப்பு, கட்டுமானம், படத்தயாரிப்பு, விநியோகம் போன்ற துறைகளில் பிரசித்தி பெற்றவர் என்ற முகமூடியையும் இவர் அணிந்து கொண்டிருந்தது அம்பலமாகியிருக்கிறது.

செல்வந்தர்கள், பிரபலமானவர்கள், பணம் படைத்த தொழிலதிபர்கள், நட்சத்திரக் கலைஞர்கள் வாழும் பகுதியான புக்கிட் மெலாவத்தியில் இவரின் பிரமாண்ட வீடும் உள்ளது.

பந்தயக் கார்கள் இவரின் பலவீனம். பல்வேறு கம்பெனிகளின் பெயர்களில் பல்வேறு பந்தயக் கார்களை வாங்கிக் குவித்தார். கட்டுமானப் பகுதிகளுக்கு இந்த ஆடம்பர பந்தயக் கார்களில் வந்திறங்கியது சந்தேகத்திற்கு வித்திட்டது. விதி விளையாடத் தொடங்கியது.

கார்களில் உயர் ரக மெர்சிடிஸ் பென்ஸ், ரேஞ்ச் ரோவர், முஸ்தாங் ஜிடி போன்றவையும் அடங்கும்.

இரண்டு ஹெலிகாப்டர்களும் ஓர் உல்லாசப் படகும் இவருக்குச் சொந்தமானவை. 4 பேர் அமர்ந்து பயணம் செய்யக்கூடிய ரோபின்சன் 44 ரக ஹெலிகாப்டர்களை வாங்கினார். இது 1999ஆம் ஆண்டில் இருந்து உலக சிறந்த விற்பனைப் பட்டியலில் முதல் இடம் பெற்று வருகிறது.

ஒரு ஹெலிகாப்டரின் மதிப்பு 20 லட்சம் ரிங்கிட்.
இத்தாலி தயாரிப்பு வெர்சில் கிரஃப்ட் ஆடம்பரப் படகும் இவருக்குச் சொந்தமாக இருக்கிறது. நீண்ட தூர கடல் பயணத்திற்கு உகந்தது. பாடாவதியாக சிதிலமடைந்திருந்த இந்தப் படகை வாங்கி பணத்தைக் கொட்டிச் சீரமைத்திருக்கிறார்.

பங்களாக்கள், கடை வீடுகள், அலுவலகங்கள் உட்பட 2 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிக்கின்றன. 10 கோடி ரிங்கிட் மதிப்பிலான 644 தனிநபர் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டிருக்கின்றன.

அரசாங்கத் துறைகளில் லஞ்ச லாலண்யம் புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கு இதைவிட பெரிய காரணம் ஏதும் வேண்டுமா? கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?

உள்ளுக்குள் உள்ளவர்களின் உதவி இல்லாமல் இப்படியோர் ஏகபோக கபளீகரம் நடந்திருக்கவே முடியாது. இலாகா தலைவருக்குத் தெரியாமல் இது நடந்திருக்கவும் வாய்ப்பு இல்லை. 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here