எம்டிபி தொடர்பில் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணம் எங்கே ?

என்ன ஆனது?   நஜிப் கேள்வி

கோலாலம்பூர், 
கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கி 1எம்டிபி தொடர்பாக திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்தை மலேசிய அரசாங்கம் பெற்றுக்கொண்ட நிலையில் அதன் மூலம் கிடைத்த பணமும் சொத்துகளும் எங்கே சென்றன என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கேள்வி எழுப்பினார்.

அரசாங்கம் அதிகமான கடன் சுமையைச் சுமக்க முடியாமல் இருப்பதற்கு 1எம்டிபி கடனும் ஒரு காரணமாகும் என்று நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் கூறியிருப்பது குறித்து நஜிப் இவ்வாறு கருத்துரைத்தார்.

கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்காக அரசாங்கம் கேடபிள்யூஏஎன் எனப்படும் தேசிய அறக்கட்டளை நிதியிலிருந்து 500 கோடி வெள்ளியைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் இதற்கு அதிகமான கடன் சுமையைச் சுமக்க முடியாமல் இருப்பதும் ஒரு காரணமாகும் என்று நிதியமைச்சர் கூறியிருந்தார்.

இது ரமலான் மாதமாக இருக்கின்ற போதிலும் தெங்கு ஸஃப்ருல், முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் போல பேசுவதுபோல் உள்ளது என்று நஜிப் சாடினார்.

1எம்டிபி தொடர்பில் திருப்பிக் கொடுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதும் திருப்பிப் பெறப்பட்ட சொத்துகள் எவ்வளவு என்பதும் இன்னும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை என்று நஜிப் தமது முகநூல் பக்கத்தில் கூறினார்.

2018ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்து தேசிய முன்னணி விலகியபோது 1எம்டிபியின் கடன் அளவு 32.2 பில்லியன் வெள்ளியாக இருந்தது. ஆனால், 2021ஆம் ஆண்டில் 1எம்டிபி கடன் 32.3 பில்லியன் வெள்ளியாக ஆனது என்றும் நஜிப் சுட்டிக்காட்டினார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசு ஒரு சல்லிக்காசு கடனைக்கூடத் திருப்பிச் செலுத்தவில்லை. 14ஆவது பொதுத்தேர்தலுக்குப் பிறகு தேசியக் கூட்டணி அரசும் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றார் அவர்.

1எம்டிபி வழக்குத் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் செய்துகொண்ட தீர்வு அடிப்படையில் அரசாங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தப்பட்டிருக்கிறது.

தமது வளர்ப்பு மகன் ரிஸா அஸிஸ், ஆம் பேங்க் உள்ளிட்ட தரப்பும் இதில் அடங்கும் என்று அவர் சொன்னார். 1எம்டிபி தொடர்பில் சொத்துகள் விற்கப்பட்டதன் மூலமும் அசாங்கத்திடம் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இக்குவாநிமிட்டி ஆடம்பரக் கப்பலும் இதில் அடங்கும். அந்தக் கப்பல் 523 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டதாக நஜிப் சொன்னார். 1எம்டிபி வழக்கின் தீர்வு, பல்வேறு சொத்துகள் விற்பனை மூலம் அரசாங்கத்திற்கு 33.4 பில்லியன் வெள்ளி கிடைத்திருக்கிறது என்று ஊடகத் தகவல் கூறியிருப்பதாகவும் நஜிப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்போது 1எம்டிபி கடன் சுமையாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், 33.4 பில்லியன் வெள்ளியும் 1எம்டிபியின் கோடிக்கணக்கான வெள்ளி மதிப்புள்ள எஞ்சிய சொத்துகளும் சுமையைக் குறைக்க முடியாதா என்று நஜிப் கேட்டார்.

600 பில்லியன் வெள்ளியைச் செலவு செய்துவிட்டதாக 8ஆவது பிரதமர் கூறுகிறார். தேசியக் கூட்டணிக்கு எங்கிருந்து இந்தப் பணம் கிடைத்தது? சிறியதாக இருந்தபோதே தேசியக் கூட்டணி சேமித்து வைத்ததா என்று நஜிப் கிண்டல் அடித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here