பெருங்கவிஞன் பாவேந்தர் பாரதிதாசனின் 130ஆவது பிறந்த தினம்

 

பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 – ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார்.

இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.

பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்துகளால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர்.

இலக்கியத்தைத் தவிர்த்து அரசியலிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் பாரதிதாசன். கவிஞர், பகுத்தறிவுச் சிந்தனையாளர், சினிமா பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்ற பன்முகம்கொண்ட பாவேந்தர் பாரதிதாசன், புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் என்பது அவ்வளவாகப் பிரபலமாகாத செய்தி.

திராவிட இயக்கத்தில் இணைந்து பல சமூகத் தொண்டாற்றி வந்த பாவேந்தர் மெல்ல திரைப்பட உலகில் இணைந்தார்.

சொல்லப்போனால் திராவிடக் கலை, இலக்கியத்தின் மையப்புள்ளியே பாவேந்தர் பாரதிதாசன்தான். திராவிட இயக்கத்திலிருந்து தமிழ்த் திரைப்படத் துறையின் முதல் நுழைவுகூட பாவேந்தர் பாரதிதாசன்தான்.

இவருக்குப் பிறகுதான் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் திரையுலகப் பிரவேசம் நடந்தது. 1937ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாலாமணி அல்லது பக்கா திருடன்’ படத்தின் அத்துணை பாடல்களையும் எழுதினார் பாரதிதாசன். இதற்கு அடுத்ததாக எழுத்தாளர் வ.ரா-வின் கதையில் உருவான ‘ஸ்ரீராமனுஜர்’ படத்துக்கு அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.

அப்போது பாரதிதாசனிடம் ‘நீங்களோ பகுத்தறிவுக் கவிஞர். ஆனால், ஆன்மிகப் படமான ஸ்ரீராமானுஜர் படத்துக்குப் பாடல்கள் எழுதுகிறீர்களே?’ என்று கேட்டபோது, ‘உனக்கு ஒண்ணு தெரியுமா? சினிமாவுல நுழையுறது அவ்வளவு சுலபம் இல்லை. என்னை நிலைநிறுத்திக்கிட்ட பிறகு பாரு, நான் நினைக்கிற படம் எடுக்கிறேன்’ என்றார்.

அதுபோலவே 1950ஆம் ஆண்டு ‘பொன்முடி’ படத்தை எடுத்தார். முழுக்க முழுக்கப் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கொண்ட படம் அது. அவரின் ‘எதிர்பாராத முத்தம்’ என்ற குறுங்காப்பியத்தின் தழுவல்தான் ‘பொன்முடி’ திரைப்படம்.

இன்றைக்கும் தமிழர்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட பல கவிதை வரிகளை எழுதியவர் பாவேந்தர்தான். ‘எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு,’ ‘கொலைவாளினை எடடா மிகக்கொடியோர் செயல் அறவே’, ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’… என்பன போன்ற வரிகள் இன்றைய இளைய தமிழ்த் தலைமுறையை எழுச்சியோடு வைத்திருக்கின்றன.

1942ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா ‘திராவிட நாடு’ பத்திரிகையைத் தொடங்கியபோது, ‘தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்ற கவிதை வரிகளைத்தான் அதன் முகப்பு வரியாகப் போட்டார் பாவேந்தர்.

மாற்றுச் சிந்தனை கொண்டோரையும் தன் தமிழால் மயக்கிய கவிக்குயில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்மொழியின் கம்பீர அடையாளங்களில் மிக முக்கியமானவர் என்றால் அதை மறுப்பதற்கில்லை!

நூலைப்படி – சங்கத்தமிழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here