
முழுமையாக நிரம்பிவிட்டது!
ஜோகூர்பாரு-
ஜோகூர் மாநிலம் முழுவதும் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்கான தீவிர கண்காணிப்புப் பிரிவு (ஐசியு) முழுமையாக நிரம்பி விட்டது. இனியும் இடம் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அப்பிரிவில் இடமே இல்லை என்ற நிலை உருவாகி இருப்பதாக ஜோகூர் மாநில சுகாதாரம், சுற்றுச்சூழல் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர். வித்யானந்தன் கூறினார்.
திங்கட்கிழமை தரவுகளின் அடிப்படையில் 49 கோவிட்-19 நோயாளிகள் மாநிலத்தில் உள்ள 6 நிபுணத்துவ மருத்துவமனைகளில் உள்ள ஐசியு பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவது பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
மாநில அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள ஐசியு பயனீடுகள் 114 விழுக்காடாக அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது. மிகவும் அபாயகரமான நிலையில் உள்ள 43 கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கே போதுமானதாக இருக்கின்ற பட்சத்தில் எண்ணிக்கை அதிகரிப்பைச் சமாளிப்பதற்கு நிபுணத்துவ மருத்துவமனைகளின் உதவியை நாட வேண்டியிருக்கிறது.
நிபுணத்துவ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 49 ஐசியு நோயாளிகளில் 39 பேருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன என்று அவர் சொன்னார்.
மனித வளங்கள் பற்றாக்குறையால் கூடுதல் கோவிட்-19 கட்டில்கள் எண்ணிக்கை ஒரு கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைக்கப்படும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
அதே சமயத்தில் ஐசியு பிரிவில் சிகிச்சைப் பெற வேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஏப்ரல் 1ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து 12 அரசாங்க மருத்துவமனைகளும் கோவிட்-19 சிகிச்சை மையங்களாக மாறியிருக்கின்றன. இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்படாதவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று வித்தியானந்தன் தெரிவித்தார்.