உடல்பருமன் ஒரு பிரச்சினையாகிறது!

கோவிட்-19 என்ற உயிர்க்கொல்லி தொற்றுக்கிருமி அதன் கோரத்தாண்டவத்தால் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் அதேவேளையில், அதைவிட ஒரு கொடிய வைரஸாக உடல்பருமன் மலேசியர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

உடல்பருமன் வரைபடத்தில் மலேசியா உயர்ந்த இடத்தில் இடம்பெற்றிருக்கிறது. மற்றவர்களுக்குப் பரவாத அல்லது தொற்றாத பெரும்பான்மையான வைரஸ் , மரணங்களுக்கு உடல்பருமன் பிரதான காரணமாக விளங்குகின்றது.

ஐநா அனைத்துலக சிறார் அவசரகால நிதியகம் (யுனிசெஃப்) அண்மையில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் 5 முதல் 19 வயதிற்குட்பட்ட 12.7 விழுக்காட்டு மலேசிய சிறார்கள் உடல்பருமன் கொண்டவர்களாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. தென் கிழக்கு ஆசியாவில் புருணைக்கு அடுத்து இது மிகப்பெரிய எண்ணிக்கை ஆகும்.

இதில் பெரும் அச்சம்தரும் தகவல் 7.5 விழுக்காட்டு உடல்பருமனுடைய சிறார்கள் ஐந்து, அதற்குக் குறைவான வயதினர் என்பதுதான்.

2019இல் உலக மக்கள் தொகை மறுஆய்வு நடத்தப்பட்டது. இதில் 15.6 விழுக்காட்டு வயதான மலேசியர்கள் உடல்பருமனாக இருக்கின்றனர் என்று தகவல் வழங்கப்பட்டது.

இது தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக மிக அதிகமாகும். புருணை (14.1 விழுக்காடு), தாய்லாந்து (10 விழுக்காடு), இந்தோனேசியா (6.9 விழுக்காடு) ஆசிய நாடுகளை மலேசியா பின்தள்ளியிருக்கிறது.

அதிக அளவில், ஓய்வில்லாமல் சாப்பிடுவது, உடற்பயிற்சி இல்லாதது போன்றவை இந்த உடல்பருமன் எண்ணிக்கை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன என்று உடல் ஆரோக்கிய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறார்கள் இன்டர்நெட், தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றில் அளவுக்கு அதிகமான நேரம் செலவழிப்பதும் இந்த உடல்பருமனுக்கு ஒரு காரணமாக உள்ளது என்று சுகாதார முன்னாள் துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய்  சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதுபோன்ற சமயங்களில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பது உடல்பருமனுக்கு வித்திடுகிறது. சிறார் பருவத்திலான உடல்பருமன் பெரியவர்களானதும் பல்வேறு உடல் ஆரோக்கியப் பிரச்சினைக்குக் காரணிகளாக அமைந்துவிடுகின்றன.

இதனால் சரியான வேளைக்கு ஆரோக்கியமான – சுத்தமான உணவுகள் உட்கொள்ளாத நிலையில் வளர்ச்சியின்றி, உடல்பருமனில் கொண்டு விட்டு விடுகிறது.

மலேசியாவில் அளவுக்கு மிஞ்சிய அளவில் உணவு உட்கொள்வது, கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடுவது, உணவு கட்டுப்பாடு இல்லாதது, தூக்கமின்மை போன்றவை உடல் பருமனுக்குப் பிரதான காரணங்களாக இருக்கின்றன.

இரவு 9.00 மணிக்கு மேல் சாப்பிடுவதும் உடல்பருமனை விலை கொடுத்து வாங்குவதற்கு ஈடானது ஆகும்.

இந்த நிலை மக்களுக்கு மட்டுமன்றி நாட்டிற்கும் மிகப்பெரிய கேடு என்பது தெளிவாக உணரப்பட வேண்டியது அவசியமும் கட்டாயமும் ஆகும்.

நாடு குறிப்பிடத்தக்க செலவை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. யுனிசெஃப் ஆய்வில் உடல்பருமன் தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் நாடு 2017இல் 697 கோடி வெள்ளியைச் செலவிட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

மரண எண்ணிக்கை நம்மை அலறவைக்கிறது. நாட்டில் அரசாங்க மருத்துவமனைகளில் நிகழும் மரணங்களில் 73 விழுக்காடு உடல்பருமன் தொடர்புடையதாக இருப்பதையும் மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

உயர் ரத்த அழுத்தம், இருதய நோய்கள், பக்கவாதம் போன்றவை இதில் அடக்கம். உடல்பருமனால் புற்றுநோய் அபாயமும் உள்ளது.

அளவோடு சாப்பிடுவோம், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதைத் தவிர்ப்போம். இரவு 9.00 மணிக்குப் பிறகு கனமான உணவு வேண்டாம். உடல்நலம் பேணுவோம். ஆரோக்கியமாக வாழ்வோம்.

 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here