பேராக் மாநிலத்திற்கு பெருமை சேர்த்த பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

தெலுக் இந்தான், மே. 21-

சமீபத்தில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும், குழல் வலையொளியும் இணைந்து நடத்திய தேசிய அளவிலான கலைத்தமிழ் விழா 2021இல் கதைக்கூறும் மற்றும் கவிதை ஒப்புவிக்கும் போட்டிகளில் கீழ்ப்பேராக்கில் அமைந்துள்ள பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெற்றி வாகை சூடி சாதனை படைத்துள்ளனர்.

கதை சொல்லும் போட்டியில் மூன்றாம் ஆண்டு மாணவியான தெய்வான்ஷா திருஞானசுந்தர் முதல் நிலையிலும், கவிதை ஒப்புவிக்கும் போட்டியில் ஆறாம் ஆண்டு மாணவியான ரோஷினி மூர்த்தி நான்காவது நிலையிலும்,ஐந்தாம் ஆண்டு மாணவி ஹோவியமதி தமிழ்செல்வன் எட்டாவது நிலையிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோன்று சமீபத்தில் மலேசியா தமிழ்ப்பள்ளி உருமாற்று திட்டம் (TPTS ) ஏற்பாட்டில் தேசிய அளவில் நடைபெற்ற திருக்குறள் கதைக்கூறும் போட்டியிலும் பத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மீண்டும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

திருக்குறள் கதைக்கூறும் போட்டியில் மூன்றாவது பிரிவிலிருந்து மாணவி தெய்வான்ஷா திருஞானசுந்தர்  இரண்டாம் நிலையிலும், குருபரன் குணசேகரன் ஆறாவது நிலையிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோல் நான்காவது பிரிவில் ஐந்தாம் ஆண்டு மாணவியான புவனேஸ்வரி தமிழ்செல்வன் மூன்றாவது நிலையிலும்,ஆறாம் ஆண்டு மாணவியான ரோஷினி மூர்த்தி எட்டாவது நிலையிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

மலேசியா முழுவதும் பல பள்ளிகளிலிருந்து 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டிகளில் பத்தாக் ராபிட் தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள், நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை அவர்களின் வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளனர்.

இந்த ஐந்து மாணவர்களும் வெற்றி வாகை சூடியதோடு பள்ளிக்கும், தலைமையாசிரியருக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் பெருமை தேடித் தந்துள்ளனர். மேலும் இவர்களின் வெற்றி கீழ்ப்பேராக் மாவட்டத்திற்கு மட்டுமன்றி பேராக் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள் கூறி பாராட்டியதோடு
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் இப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆறுமுகம் வேலு.

சரியான நேரத்தில் உணவு கூட உண்ணாமலும், காலை முதல் மாலை வரை நேரம் காலம் பாராமல் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எங்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து ஊக்குவித்த ஆசிரியர்கள் அ. சரஸ்வதிக்கும், இ.லெ.செல்வாவுக்கும் இவ்வேளையில் நன்றி மாலையை சமர்ப்பிக்கிறோம் என மாணவர்கள் கூறினர்.

மாணவர்கள் வெற்றி வாகை சூடியதற்கு காரணமாக இருந்த அவ்விரு ஆசிரியர்களுக்கும்  தலைமையாசிரியர் ஆறுமுகம், பள்ளி ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் அனைவரும் தங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here