தடுப்பூசி கொள்கையில் எல்லைக்கோடுகள் வேண்டாம்!

வேண்டும் -மக்கள் மீதான

 நாட்டமே தேவை

ஒவ்வொரு கோவிட்-19 தடுப்பூசியும் அந்த உயிர்க்கொல்லி தொற்றை விரட்டியடிக்கும் தன்மைகொண்டது. ஒவ்வொரு தடுப்பூசியும் சமுதாயம், சமூகத்தின் பாதுகாப்பையும் உடல் ஆரோக்கியத்தையும் உறுதிசெய்கிறது.

மலேசியா இந்த உண்மையை நன்கு உணர்ந்திருக்கிறது. ஆனால், இந்தத் தடுப்பூசி விநியோக விவகாரத்தில் மத்திய – மாநில அரசாங்கங்களுக்கிடையில் இன்னமும் ஓர் உரசல் இருந்துகொண்டே இருக்கிறது.

கொரோனாவைக் குழிதோண்டிப் புதைத்து நிரந்தரமாகச் சமாதியைக் கட்ட வேண்டும். இந்த இலக்கில் ஒரு வெளிப்படைத் தன்மையும் நேர்மையும் இருந்தால் இந்த உரசல் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாகப் பல்வேறு நிபந்தனைகளை அரசாங்கம் விதித்திருக்கிறது. முகக்கவசம் அணிவது, கூடல் இடவெளி, கைகளை அடிக்கடி கழுவுவது போன்றவை எந்த அளவுக்குப் பலன் தருகின்றன – ஆக்கப்பூர்வமாக இருக்கின்றன என்பதை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் மரணமும் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன.

அதுமட்டுமன்றி அண்மைய பெருநாள் காலத்தின்போது திறந்துவிடப்பட்ட சந்தைகளில் கூட்டம் வழிந்து நிரம்பியதையும் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

தற்போது நாள் ஒன்றுக்கு 70,000 சொட்டுகள் தடுப்பூசிகளாப் போடப்பட்டு வருகின்றன. ஆனால், மாநில அரசாங்கங்கள் அவற்றைப் பெறுவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளன. இதில் ஆளும் கட்சி – எதிர்க்கட்சி என்ற எல்லைக் கோடுகள் இரும்புத் திரையாகப் போடப்பட்டுள்ளன.

எந்த மாநிலமாக இருந்தாலும் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் அங்கு வாழ்பவர்கள் அனைவரும் மலேசியர்கள் என்ற ஒரு தேசிய உணர்வில் மத்திய அரசாங்கம் செயல்பட வேண்டும்.

தேசிய தடுப்பூசித் திட்டத்திற்கு 600 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி சொட்டு மருந்துகளை மத்திய அரசாங்கம் அனுப்பி வைப்பதுதான் உத்தமம்.

இந்த 600 கோடி வெள்ளி என்பது நாட்டில் உள்ள 3 கோடியே 20 லட்சம் மக்களுக்கானது. அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்கக்கூடாது. சொந்தமாகத் தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளலாம் என்ற ஒரு பெரும் சுமையை மாநில அரசாங்கங்கள் மீது திணிக்கக்கூடாது.

தேசியம் என்கின்றபோது அது ஒரே பார்வையில் இருக்கும். மருந்துகளின் தரமும் வீரியமும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். தேசிய மருந்தக ஒழுங்குமுறை ஏஜென்ஸி கண்காணிப்பில் அவை வாங்கப்படுவதுதான் பாதுகாப்பு.

அதுமட்டுமன்றி இந்தத் தடுப்பூசி சொட்டு மருந்துகளைப் பாதுகாப்பாக வைப்பது என்பது மிகப்பெரிய சவால் ஆகும். போக்குவரத்து தொடங்கி அதனைப் பாதுகாப்பாகப் சேமிப்புப் பெட்டகத்தில் வைப்பது வரை எல்லாவற்றுக்கும் பெரிய அளவில் பணத்தைச் செலவிட வேண்டியுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் நுழையவே கூடாது. தற்போதைய அரசியல் சதுரங்க ஆட்டத்தில் அது ஓர் அரசியல் வாகனமாகவும் மாறிவிடக்கூடாது.

கோவிட்-19 தடுப்புத் திட்ட விவகாரத்தில் அரசியல் பார்வை அறவே கூடாது. மலேசியர்கள் என்ற நேர்க்கோட்டில் அரசாங்கத்தின் பார்வை பாய்ச்சப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாநிலமும் மலேசியாவின் ஓர் அங்கம். உதவிகள் கேட்டால் கஜானா நிரம்பிவிடும். அரசாங்கம் அதன் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியும்.

மலேசியர்கள் இந்தப் பேராபத்தில் இருந்து விரைந்து விடுபடவே விரும்புகின்றனர். அரசியல் சதுரங்க ஆட்டத்தின் தாமதங்களால் மக்களின் உயிர் பேரம் பேசப்படக்கூடாது.

மத்திய அரசாங்கம் தனக்குள்ள உயர்நெறி ஒழுக்கக் கோட்பாட்டின் தர்மங்களின் கீழ் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.

 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here