நினைவு தினம்: மே 27, 1964
ஜவகர்லால் நேரு, ஹார்ரோவிலுள்ள பள்ளி வாழ்க்கையை முற்றிலும் விரும்பவில்லை. இருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி, திரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார். 1910 அக்டோபர் இன்னர் டெம்பிளில் சட்டம் பயில பதிவு செய்து கொண்டார்.
ஹார்ரோ மற்றும் கேம்பிரிட்ஜில் அவர் விரும்பியோ, கவரப்பட்டோ சட்டம் பயிலவில்லை. மாறாக தந்தையின் வேண்டுகோளுக்காகப் படித்தார். நேரு இறுதித்தேர்வில் 1912இல் வெற்றி பெற்று, ஆண்டு இறுதியில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார். சட்டப் பணிசெய்ய விரைவில் இந்தியா திரும்பினார்.
1916-ஆம் ஆண்டு கமலா கவுல் என்ற 16 வயது நிரம்பிய பெண்ணை மணந்தார். அவர்களுக்குத் திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திரா பிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தாள். பின்னாளில் அவர் ஃபெரோஸ் காந்தியை மணம் புரிந்ததால் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாக செயல்பட்டார். ஆனால் 1936 இல் புற்றுநோயால் இறந்தார். அதன்பின் நேரு கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார்.
1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளை சந்தித்தார். 1919 இல் ஜாலியன் வாலாபாக்கில் ஆயுதம் ஏதும் இன்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவை காங்கிரஸ் கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ள காரணமாக இருந்தது. நேரு விரைவாக காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார்.
1920 இல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 ல் நேரு முதல் முறையாக சிறைக்கு சென்றார். 1922 இல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டி வந்தது.
சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்த படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததுடன், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது.
முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடதுசாரி தலைவரானார்.
நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். ஆகஸ்ட் 15, 1947 புதுடெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது.