பொறுப்பற்ற தன்மையால் வெறுப்புற்ற மக்கள்

August 1 is the first day of enforcement of compulsory masks in Putra line Lrt Station to KL sentral. - Art Chen/ The Star.

எல் ஆர் டி விபத்து 

ஓர் அனுபவ  பாடம்! 

எதிரும் புதிரும் என்பது வார்த்தைக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால்  ஒரே வழித்தடத்தில் இருக்கக்கூடாது என்பதற்கு சரியான பாடம் புகட்டப்பட்டிருக்கிறது என்றால் இதற்குப் பெயர் கவனக்குறைவு, அசட்டை, நிதானமின்மை, கவனமின்மை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். 

சாலையில் எதிரும் புதிருமாக  மோதிக்கொண்டால்  காரணம் தெரியும். இதற்கு சாலை விதிகள் மீறல் என்று அர்த்தம். அதே போல கடலில் கப்பல்கள் மோதிக்கொண்ட சம்பவங்களும் இருக்கின்றன.

ஆனால், விதிமுறை அட்டவணைக்குள் வடிவமைக்கபட்டு, முழுமையான பாதுக்காப்பைக் கொண்ட செயல்முறை கட்டுப்பாடுகளுடன் இயங்கிக்கொண்டிருக்கும் எல் ஆர் டி இலகு ரயில் எதிரும் புதிருமாக மோதிக்கொள்வது என்பது நினைத்துப்பார்க்க, கற்பனைக்கும் ஒவ்வாத செயல் என்றால் அது வெறுப்பின் வார்த்தையாக இருக்கமுடியாது. 

எல் ஆர் டி வடிவமைப்பின் முறை என்பது மின்னியல் முறையில் திட்டமிடப்பட்டவை. இதில் தவறு நிகழ்கிறதென்றால் மனிதத்தவறுகளே முதன்மையாக இருக்க வேண்டும். மின்னியல் தவறுகள் என்றால் முழுமையான அலசல் , கண்காணிப்புகள் இல்லை என்றே பொருள்படும். 

இரு எல் ஆர் டி ரயில்கள் மோதிக்கொள்கிறதென்றால் இதற்குக் கூறப்படும் காரணங்கள் என்னவாக இருக்கும்? வழக்கமான ஓடு பாதையில் சென்று கொண்டிருந்த பெயரில்லாத  எல் ஆர் டி ( TR 81) ரயில் பெட்டி காலியாக இயக்கப்பட்ட ( TR 40) ரயிலுடன் மோதியதில் 213 பயணிகளில் சில பேரதிர்ச்சியில் மூழ்கி திகப்பில் உறைந்து கிடக்கின்றனர்.

வழக்கமான ரயில் பயணத்திற்கான நேர்த்தில், எதிரில் வந்த  காலி ரயில் அதே தடத்தில் எப்படி வந்தது? காலி ரயிலை 32 வயது ஓட்டுநர் இயக்கியதாகவும் அப்போது பழுது பார்க்கப்பட்டு சோதனைக்காக இயக்கப்பட்டதாகவும் அறியப்படுக்கிறது.

செய்திக்காக கோப்பு படம்

இது உண்மையென்றால். இதற்கான மேலாளர்கள் எங்கிருந்தார்கள், ஓட்டுநருக்கு அனுமதி வழங்கப்பட்டதா என்றெல்லாம கேள்வி எழுகிறதே?

213 பயணிகளின் மன ரீதியான பாதிப்பும் கண்ணெதிரே தோன்றி மறைந்த மரணபயமும்  சொல்லி மாளாதவை. இவ்விபத்தின் போது  ரயில் பெட்டுக்குள் பறந்துவிழுந்ததாக ஒரு பயணி கூறினார். இதில் கர்ப்பிணிப் பெண்கள் இருந்திருந்தார்களா? அப்படி இருந்திருந்தால் நிலைமை மோசமானதாகவே இருந்திருக்கும் அல்லவா?

ஒட்டு மொத்தத்தில் நிர்வாகக் கோளாறுதான் காரணம். காலி ரயில் ஓட்டுநரிடம் தவறு காண வழியில்லை . இதில் தொழில் தர்ம கடமை தவறியவர்கள் செய்த மனிதத்தவறுகள்தாம் காரணமாக இருக்கும். அப்படி இருந்தால் பொறுப்பேற்கின்றவர்கள் மன்னிக்கபடக் கூடாது.

அதிர்ஷ்டம் என்று கூறுவதற்குமுன், ரயிலின் இயக்கம் மெதுவாக 40 கிலோ மீட்டர்  வேகத்தில் நகர்ந்த போதுதான் விபத்து ஏற்பட்டிருக்கிறது .  ஒரு ரயிலின்  கூடுதல் ஓடு வேகம் 80 கிலோ மீட்டராகும்.. அப்படி ஓடி இருந்தால் 213 பயணிகளின் நிலைமை என்ன வாகியிருக்கும்?

இதற்குப் பொறுப்பேற்று பிரசரனா தலைவர்  பதவி விலகுமாறு 112, 000 பதிவுகள் மாலை 6.00 மணியளவில்  பெறப்பட்டிருக்கின்றனவாம் என்றால் மக்களின் கோபம் கொரோனாவை விட அதிகமானது என்பதை உணரமுடிகிறதல்லவா?

அலட்சியத்தின் விளைவு மோசமானது என்பதற்குச் சான்று இந்த விபத்து!

 

-கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here