தந்தையின் மறைவுக்கு சென்றபோது தாப்பா அருகே நடந்த சாலை விபத்தில் 24 வயது மகள் பலியான துயரம்

ஈப்போ: தாப்பா அருகே வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து 313 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மேம்பாலம் அருகே கார் கீழே விழுந்ததில் 24 வயது பெண் ஒருவர் பலி மற்றும் அவரது பெற்றோர் காயமடைந்துள்ளனர்

தாப்பா ஒ.சி.பி.டி வான் அசாருதீன் வான் இஸ்மாயில் கூறுகையில், வியாழக்கிழமை (மே 27) பிற்பகல் 2 மணிக்கு நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து கே.யுவபாரதி என்கின்ற 24 வயது பெண் இங்குள்ள ராஜா பெர்மாய் சூரி பைனுன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவரது தந்தை (59 வயது ) வி.குணாளனின் மார்பில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது தாய் (56 வயது ) எம்.நிர்மலா தேவி தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

குணாளன் குடும்பம் ஜொகூரிலிருந்து அலோர் ஸ்டாருக்கு குணாளனின் தந்தையின் இறுதி சடங்கிற்காக சென்று கொண்டிருந்த போதே இவ் விபத்து ஏற்பட்டதாகவும் கூறினார்.

இறந்த பெண்ணின் பெற்றோர் இருவரும் தாப்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகளின் மரணம் குறித்து அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது  என்றும் அவர் கூறினார்.

குணாளன் ஓட்டிய கார் வலது புறத்தில் இருந்த ரயில் தண்டவாளத்தின் மீது மோதியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் அருகே கீழே விழுந்ததாக நம்பப்படுகிறது என்று வான் அசாருதீன் தெரிவித்தார். மேலும் குணாளன் ஓட்டிய கார் முற்றாக சேதம் அடைந்து விட்டது என்றும், சோதனை செய்ய புஸ்பகோம் மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சாலை போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 41 (1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது, மேலும் இவ் வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here