கொரோனாவுக்கு மரண தண்டனை

மக்களே தீர்ப்பு வழங்கட்டும்!

கோவிட்-19 கிருமித் தொற்றுக்கு எதிரான போரில் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று தெரியவும் இல்லை, புரியவும் இல்லை; வாழ்வா – சாவா?, வெற்றியா – தோல்வியா? என்பதை இனி மக்கள்தாம் தீர்மானிக்க வேண்டும்.

மிக மோசமான நிலையை எதிர்கொள்ளப்போகும் நாள் கண்ணுக்கு எட்டிய தூரத்தில்தான் உள்ளது என்று தலைமை சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா சில தினங்களுக்கு முன் எச்சரித்திருந்தார்.

இன்று கோவிட்-19 கிருமித் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது அது உண்மையே என்ற முடிவுக்கு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9020 பேர் கோவிட்-19 கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 98 பேர் இறந்திருக்கின்றனர். தீவிர கண்காணிப்புப் பிரிவில் ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர்.  இவர்களுள் பல பேருக்கு பிராணவாயு (ஆக்சிஜன்) தேவைப்படுகிறது.

கோவிட்-19 பாதிப்பில் மலேசியா இதர உலக நாடுகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்து விட்டு முன்னணியில் ஓடிக் கொண்டிருக்கிறது. இது கேலி அல்ல – உயிர்ப் பயம்.

புதன்கிழமை 7,478, வியாழக்கிழமை 7,857, வெள்ளிக்கிழமை 8,290 சனிக்கிழமை 9020 என்று நாளும் பாதிப்புகள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. உலக அளவில் சாம்பியன மகுடம் சூட்டிக் கொள்ளப்போகும் நாளும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

கோவிட்-19 கிருமித் தொற்று ஒரு மோசமான நிலையை எட்டியிருக்கிறது. நெருக்கடிமிக்க சுழ்நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம்  தனியார் மருத்துவமனைகள் கோவிட்-19 நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

தீவிர கண்காணிப்புப் பிரிவு (ஐசியு) படுக்கைகள் போதவில்லை. சமாளிக்கும் நிலை கடந்து போய் விட்டது. சாதாரண வார்டுகளில் உள்ள கட்டில்கள் ஐசியு படுக்கைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன.

சுகாதார வசதிகளும் மருத்துவ முன்களப் பணியாளர்களின் அயராப் பணிகளும் கோவிட்-19 எண்ணிக்கையைக் குறைப்பதில் பெரும் சவாலை எதிர்நோக்கியிருக்கின்றன.

பாதிப்பு எண்ணிக்கை குறுகிய காலகட்டத்தில் 10 ஆயிரத்தைத் தாண்டும் என்ற மதிப்பீடு உண்மையாகி விடும் சாத்தியம் அதிகமாகவே இருக்கிறது.

இந்த அலையைத் தடுத்து நிறுத்த முடியாதா? கண்டிப்பாக முடியும்! மக்கள் மனம் வைத்தால் நிலைமை கட்டுக்குள் அடங்கும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கோவிட்-19 தடுப்பூசியைப் பொதுமக்கள் போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி என்பது இத்தொற்றுக்கு எதிராக உடம்பில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக்கூடியதாகும்.

விதிக்கப்பட்டுள்ள எஸ்ஓபி விதிமுறைகளை ஒவ்வொருவரும் மிகக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். இவ்விவகாரம் இனியும் அரசாங்கம் மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல. முழுக்க முழுக்க மக்களைச் சார்ந்ததாகும்.

சமூகத்தின் மத்தியில் தற்போது காட்டுத் தீயாக இத்தொற்று பரவி வருகிறது. அவசியமின்றி மக்களுடன் நெருக்கமான சந்திப்புகள் வேண்டாம். முற்றாகத் தவிர்ப்பது நல்லது. வெளியில் வேலை ஏதும் இன்றிச் செல்ல வேண்டாம்.

இப்போதைக்கு மனித உயிர்கள்தாம் முக்கியம். நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதோடு மற்றவர்களின் உயிர்களைக் காப்போம். முகக் கவசத்தை எந்தச் சுழ்நிலையிலும் மறந்து விடாதீர்கள்.

கோவிட்-19 மரணங்கள் மிக மிகக் கொடூரமானவை. சொந்தங்களின் முகங்களைக்கூட இறுதியாகப் பார்க்க முடியாமல் உயிர் வலி ஏற்படுகிறது. எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் அநாதைபோல் மண்ணுக்குள் அடக்கமாகின்றனர் அல்லது தகனம் செய்யப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் இந்த வலி இல்லை. கண்கூடாகப் பார்க்கின்றவர்களையும் நடுங்க வைக்கிறது. இன்றைய நெருக்கடி காலத்தில் மக்கள் மனம் வைத்தால் மட்டுமே நாட்டையும் சக மனிதர்களின் உயிரையும் காக்க முடியும்.

கோவிட்-19 தொற்றுகளும் மரணங்களும் பயமூட்டும் பாடங்களாக உருவெடுத்து வருகின்றன. கரங்கொடுப்போம் – கோவிட்-19 கிருமித் தொற்றை மரணமடையசெய்வோம்

 

 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here