இதுவரை 20 மில்லியனுக்கும் மேற்பட்டோர் மக்கள் கணக்கெடுப்பில் பங்கேற்பு

புத்ராஜெயா-

அண்மைய தரவின்படி 2020 மலேசிய மக்கள் கணக்கெடுப்புத் திட்டத்தில் 20.1 மில்லியன் பேர் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மலேசிய மக்கள் தொகை 32.7 மில்லியன் எனக் கணக்கிடப்பட்ட நிலையில் தற்போது கணக்கெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதில் 61.5 விழுக்காடு ஆகும்.

இந்நிலையில் தங்குமிட அம்ச ரீதியில் 7.1 மில்லியன் அல்லது முன்னதாகக் கணக்கிடப்பட்ட 9 மில்லியன் தங்குமிட எண்ணிக்கையில் 78.9 விழுக்காடு இம்முறை கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மொத்த குடும்பத்தினர் எண்ணிக்கையான 8.2 மில்லியன் பேருள் 5.4 அல்லது 66 விழுக்காட்டினர் மக்கள் கணக்கெடுப்புக் கேள்விகளுக்கு பதிலளித்து முடித்துள்ளனர்.

இதுவரை நாட்டில் மூன்று மாநிலங்கள் அதிகமான மக்கள் தொகை எண்ணிக்கைப் பதிலைப் பதிவு செய்துள்ளதாக மலேசிய மக்கள் கணக்கெடுப்பு இலாகா அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக  கூட்டரசுப் பிரதேச புத்ராஜெயாவில் 101.4 விழுக்காடும் பெர்லிஸ் மாநிலத்தில் 89.8 விழுக்காடும் ஜோகூர் மாநிலத்தில் 84.3 விழுக்காடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் குறைந்த எண்ணிக்கைப் பதிலைப் பதிவு செய்த மாநிலங்களாக சபா (38.8 விழுக்காடு), கூட்டரசுப் பிரதேச கோலாலம்பூர் 945.2 விழுக்காடு), சரவாக் (46.2 விழுக்காடு), பகாங் (47.9 விழுக்காடு) உள்ளன.

தொடர்ந்து மலாக்காவில் 78.3 விழுக்காடு, கிளாந்தானில் 77.1 விழுக்காடு, திரெங்கானுவில் 72.5 விழுக்காடு, பேராக்கில் 72.3 விழுக்காடு, நெகிரி ஙெ்ம்பிலானில் 68.2 விழுக்காடு, பினாங்கில் 63.7 விழுக்காடு, சிலாங்கூரில் 62.4 விழுக்காடு, கூட்டரசுப் பிரதேச லாபுவானில் 54.3 விழுக்காடு, கெடாவில் 53.5 விழுக்காடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம்முறை மக்கள் கணக்கெடுப்பில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள 20.1 மில்லியன் பேருள் 50.8 விழுக்காட்டினர் ஆண்கள், 49.2 விழுக்காட்டினர் பெண்களாவர்.

அதேபோல் இன ரீதியாக வைத்துப் பார்த்தால் பூமிபுத்ரா குடிமக்களுள் அதிகமானோர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 71.1 விழுக்காட்டினர் அவர்களாவர். அதனையடுத்து சீனர்கள் 21.9 விழுக்காட்டினரும் இந்தியர்கள் 6.2 விழுக்காட்டினரும் இதர மக்கள் 0.7 விழுக்காட்டினரும் பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து இதுவரை பதிவு செய்த 20.1 மில்லியன் மக்களுள் 69.7 விழுக்காட்டினர் 15 வயதில் இருந்து 64 வயதுக்கு உட்பட்டவர்களாவர். அதனையடுத்து 23.9 விழுக்காட்டினர் இளம் வயதினர் (0-14 வயது வரை), 6.3 விழுக்காட்டினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாவர் என மலேசிய மக்கள் கணக்கெடுப்பு இலாகாவின் தலைவரும் 2020 மலேசிய மக்கள் கணக்கெடுப்பு நடவடிக்கையின் (பஞ்சி) ஆணையருமான டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் ஹுஸிர் மஹிடின் தெரிவித்தார். குறிப்பாக பேராக் மாநிலத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பிரிவில் அதிகமானோர் அதாவது 10.7 விழுக்காட்டினர் பதிவு செய்துள்ளனர்.

அதே சமயம் 15 வயதில் இருந்து 64 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் அதிகமானோர் (74.2) பினாங்கு மாநிலத்தில் பதிவு செய்துள்ளனர்.

மேலும் இளம் வயதினர் (0-14 வயது வரை)  பிரிவில் அதிகமானோர் கூட்டரசுப் பிரதேச புத்ராஜெயாவில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அங்கு இந்தப் பிரிவில் 36.5 விழுக்காட்டினர் பதிவு செய்துள்ளதாகவும் டாக்டர் முகமட் ஹுஸிர் கூறினார்.

2020 மலேசிய மக்கள் கணக்கெடுப்புத் திட்டத்தின் நேர்முகக் கணக்கெடுப்பு நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மக்கள் கணக்கெடுப்பைப் பூர்த்தி செய்யாதவர்கள் மின்னியல் முறையில் (இ-சென்சஸ்) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அவர்கள் CATI என்ற தொலைபேசி தொடர்பு செயலியிலும் பதிவு செய்து கொள்ளலாம். எதிர்காலத்தில் நாட்டின் மேம்பாடு, கட்டமைப்பை வடிவமைப்பதற்கு அரங்சாங்கத்தின் இந்த மக்கள் கணக்கெடுப்பு முக்கிய அம்சமாக விளங்குகின்றது.

இந்தத் திட்டத்தின் வாயிலாக அடிப்படை வங்திகள், சீகாதாரம், கல்வி போன்ற அம்சங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். எனவே இந்தக் கணக்கெடுப்பில் மக்கள் பங்கேற்க  வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 இது குறித்த மேல் விவரங்களை அவர்கள்  www.mycensus.gov.my என்ற அகப்பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் 1800887720 என்ற எண்களில் தொடர்பு கொள்வதோடு அருகில் உள்ள மாநில ரீதியிலான மக்கள் கணக்கெடுப்பு அலுவலகத்தையும் அவர்கள் அணுகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here